அழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால்



'கேளி' எழுதிய ஜெயமோகன் தலையசைத்துக்கொண்டிருந்தார், 'அனாகத நாதம்' எழுதிய செந்தில் ஜெகந்நாதன் முன்னிருந்த இருக்கையில் கைகளை மடக்கி வைத்து கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். முன்வரிசையிலேயே அமர்ந்திருந்தவர், அக்கரை என்னும் ஓர் ஊரை "கசிந்து குழைந்து உருகிவரும் வயலின் இசையொன்று அந்த ஊர்ச் சிறுமிக்குச் சொந்தமானது" என்று தன் ஐயம் இட்டு உண் சிறுகதையில் அறிமுகப்படுத்தும் நாஞ்சில் நாடன். ஒரு இலக்கிய நிகழ்வில் மேடையில் இருக்கப்பட்டவர்கள் அனைவரும் கீழே அமர்ந்திருக்க மேடையில் நாதஸ்வர இசைக்குழு அமர்ந்திருக்கிறது.  

விக்கிபீடியா என்ற இணைய கலைக்களஞ்சியம் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் .  விக்கிபீடியா பல்வேறு மொழிகளில் இயங்குகிறது. பொதுவாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்ற விதி உள்ளது. இதைப்பயன்படுத்திக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள விக்கிபீடியா பதிவுகளை தங்களுடைய வசதிபோல மாற்றிக்கொள்ளும் போக்கு உருவானது. இதனால் பலர் உண்மையாக உழைத்து உருவாக்கிய விக்கி பக்கங்களின் தகவல்கள் திரியத்துவங்கின, இந்த கட்டுப்பாடின்மை காரணமாக தமிழில் மொழி சார்ந்த,  இலக்கியம் சார்ந்த பதிவுகளின் தரம் குறையத்துவங்கியது.  இதை மாற்றும் எண்ணத்துடன் எழுத்தாளர் ஜெயமோகன் முயற்சியால் தமிழ் விக்கி என்ற பெயரில் கலைக்களஞ்சிய உருவாக்கம் ஒன்று 2022ம் வருடம் துவங்கினார். இந்த தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்துக்கு என்று சில விதிகள் உள்ளன. இதில் உள்ள பதிவுகளில் தகவல்கள் மட்டுமின்றி மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன, அனைவரும் இவற்றை திருத்தமுடியாது. இந்தத்தகவல்கள் தேர்ந்த ஆசிரியர் குழுவால் இறுதி செய்யப்படுகின்றன. தற்போது தமிழ் இலக்கியம், பண்பாடு சார்ந்து 3000 பக்கங்கள் கொண்ட ஒரு அறிவுத்தொகையாக தமிழ் விக்கி வளர்ந்திருக்கின்றது.



விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தமிழ் அறிவுப்புலம் சார்ந்து  வருடத்திற்கு மூன்று திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன, வாழ்நாள் இலக்கியச்சாதனையாளருக்கு டிசம்பர் மாதம் கோவையில் நடக்கும் விழாவில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும். இளம் கவிஞருக்கு குமரகுருபரன் விருது ஜூன் மாதம் சென்னையில் நடக்கும் விழாவில் வழங்கப்படும், இப்பொழுது 2022ம் ஆண்டிலிருந்து பெரியசாமித்தூரனின் ஊரான ஈரோட்டில் தமிழ் விக்கி விருதுவிழா ஆகஸ்டில் நடத்தப்படுகிறது.  



தமிழ் விக்கி கலைக்களஞ்சிய பணிகளின் ஓர் அடையாளமாக, தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவந்த பெரியசாமித்தூரனின் பெயரால்  தமிழில் ஆய்வுப்புலத்தில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு இவ்விருது அளிக்கப்படும். சென்ற 2022ம் ஆண்டுக்கான விருது புதுவை கரசூரை சேர்ந்த ஆய்வாளர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது. மானுடவியல் ஆய்வாளரான பத்மபாரதி நரிக்குறவர் இனவரைவியல், திருநங்கையர் சமூக வரைவியல் என்ற இரு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். 2023ம் ஆண்டுக்கான விருது புதுவையில் வசிக்கும் பேராசிரியர் மு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. மு இளங்கோவன், தமிழறிஞர் தகவல் திரட்டு, தமிழிசை ஆவணப்படுத்தல், கணிப்பொறித்தமிழ் பயன்பாட்டு அறிமுகம் ஆகிய மூன்று தளங்களில் சிறப்பாகப் பங்களித்தமைக்காக விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இரு விருதுகள் புதுவை பகுதியில் உள்ளவர்களுக்கே கிடைத்ததில் புதுவைக்கு பெருமிதம். முனைவர் இளங்கோவனுக்கு விருது அறிவிக்கப்பட்டதும் புதுவை வெண்முரசு வாசகர்கள் சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தோம். 



சென்ற ஆண்டிலிருந்து இம்முறை விருதுவிழா இன்னும் பலவகைகளில் முன்நகர்ந்திருந்தது. இவ்வருடம் சிறப்பு விருது ஒன்று எழுத்தாளர், சொல் ஆய்வாளர் எஸ் ஜெ சிவசங்கருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் சூழலியல் எழுத்தின் முன்னோடியும் ஆய்வாளருமான தியடோர் பாஸ்கரன் , கேரளத்திலிருந்து இலக்கிய விமர்சகர் பி கே ராஜசேகரன் இருவரும் கலந்து கொண்டனர்.  தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவியின் ஸாகே என்னும் நூல் வெளியிடப்பட்டது. தொல்லியல் ஆர்வலரான தென்கொங்கு சதாசிவம் பெருங்கற்கால சின்னங்கள் குறித்து ஒரு உரை நிகழ்த்தினார். 

குருகு இணைய இதழ் நண்பர்கள் மூவரால் நடத்தப்படுகிறது, சென்னைவாசியான அனங்கன், அவிநாசியில் உள்ள நண்பர் தாமரைக்கண்ணன் இவர்களுடன் நானும் சேர்ந்து இதை நடத்துகிறோம். புனைவற்ற தளங்களான வரலாறு, கலை, தத்துவம், பண்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை தரும் நோக்கத்தில் துவங்கப்பட்டது குருகு இதழ். தமிழ் விக்கி தூரன் விழாவுக்கு குருகு சார்பாக சிறப்பிதழ் கொண்டுவரலாமா என்று கேட்டவுடன் நண்பர்கள் இருவரும் உற்சாகமாகிவிட்டனர். சிறப்பு விருது பெறும் எஸ் ஜெ சிவசங்கருடைய நேர்காணலை முதலில் செய்துமுடித்தோம், சிவசங்கர் அண்ணன் உற்சாகமான உரையாடல்காரர். அவருடைய பழமொழிகள் குறித்த கட்டுரை ஒன்றும் இதழில் இடம் பெற்றது. நீலி இதழாசிரியர் ரம்யா சிவசங்கரின் இட்டகவேலி நீலகேசி நூல் தொடர்பான கட்டுரையை எழுதினார்.  மு இளங்கோவன் அவர்களுடைய மலேசிய நாட்டார் பாடல்கள் குறித்த கட்டுரையை குருகு இதழுக்காக அளித்தார். இளங்கோவன் இயக்கிய தமிழிசை அறிஞர் குடந்தை சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்த கட்டுரையை நான் எழுதினேன்.  இவற்றுடன் கடந்த ஆண்டு விருது பெற்ற ஆய்வாளர் பத்மபாரதி அவர்களின் இனவரைவியல் கட்டுரையை நண்பர் விஷ்ணு வாயிலாக பெற்றோம். முத்தாய்ப்பாக பெரியசாமித்தூரனின் பாரதி உரைநடை குறித்த ஆய்வுக்கட்டுரையை இணைத்தவுடன் இதழ் முழுமை அடைந்தது. விழாவில் கலந்துகொண்ட நண்பர்கள் பலர் குருகு இதழ் மற்றும் வல்லினம் இதழில் வந்த நேர்காணல் மூலம் விருதாளர்களின் ஆய்வுலகை அறிந்துகொள்ள முடிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.   



நண்பர் தென்கொங்கு சதாசிவம் சிலஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர், எளிய மனிதர். பதினைந்து ஆண்டுகாலம் இந்த தொல்லியல் துறையில் இயங்கி வருகிறார். பொதுவாக இங்குள்ள குழு மனப்பான்மை, அரசியல் ஆதாயம் கருதி செயல்படுதல் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டவர் சதா. 

தென்கொங்கு சதாசிவம், கொங்குப்பகுதியை சேர்ந்த ஆய்வாளர். பள்ளிக்கல்வி முடித்த பின்னர் மரத்தச்சர் பணி செய்து வருகிறார். கொங்குப்பகுதியில் உள்ள வரலாறு மற்றும் தொல்லியல் தடயங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். கா ராசன், யத்தீஸ்குமார், வி. செல்வகுமார் போன்ற ஆய்வாளர்கள் பலருடனும் களப்பணியில் பங்குபெற்றவர். தனது பதிமூன்று ஆண்டுகால தேடலின் விளைவாக அதிகமும் கவனம் பெறாத ’பெருங்கற்கால நினைவு சின்னங்கள்’ பலவற்றை சதா கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றுள் தேன்வரந்தை பாறை ஓவியங்கள், காசிலிங்கம் பாளையம் மற்றும் மெட்ராத்தி ஆகிய ஊர்களில் உள்ள கல்வட்டங்கள், மலையாண்டிபட்டினத்தில் உள்ள கல்வட்டங்கள், பதுக்கைகள், குத்துக்கல் போன்றவை முக்கியமானவை.

சோழர் மற்றும் ஹொய்சாளர் சிற்பக்கலை, கட்டிடக்கலை குறித்த பயிலரங்குகளை நடத்தி வருகிறார். கொங்கு நாட்டு கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும் முயற்சியிலுள்ளார். தென்கொங்கு என்ற பெயரில் வலைப்பூ உள்ளது. கடிகை என்னும் யூடியூப்சேனல் நடத்துகிறார், இந்தியா முழுமைக்குமான வரலாற்று தளங்களை காண்பதற்கான மரபுப்பயணங்களை ஒருங்கிணைக்கிறார். 



கொங்கு பகுதியிலுள்ள பெருங்கற்கால சின்னங்கள் குறித்து பவர்பாயிண்ட் பிரசண்டேஷனுடன் சதா அளித்த உரை சிறப்பாக இருந்தது, தான் கண்டறிந்து ஆவணப்படுத்திய புதிய பாறை ஓவியங்களின் படங்களையும் சதா பகிர்ந்தார், அது குறித்து நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். சதாவுக்கு கொஞ்சம் மேடை பயம் உண்டு, விழா முடிந்ததும் சார் என்னோட அமர்வு பரவாயில்லையா என்று கேட்டதும் பதிலாக ஜெ அவரை சிரித்தபடி அணைத்துக்கொண்டார்.  

விழா நிகழ்வுகள் அனைத்திலும் உச்சம், விழா நாளன்று இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடந்த நாதஸ்வர இசைக்கச்சேரி. 

பெரியசாமித்தூரன் தமிழில் கலைக்களஞ்சியம் செய்தது மிகப்பெரும் சாதனை, ஆனால் அது ஒன்று மட்டுமே தூரனின் முகமல்ல. சிறுவர் கலைக்களஞ்சியம் செய்திருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை தொகுக்கும் பணியில் அவருடைய பங்கு முக்கியமானது. பாரதியின் படைப்புகளை ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.  இதழியல், மொழிபெயர்ப்பு, துறைசார் அறிமுக நூல்கள் எழுதியுள்ளார். குழந்தைகள் மீது பிரியம் கூடுதல் குழந்தைப்பாடல்கள்,கதைகள் எழுதியுள்ளார். இவை மட்டும் இல்லாமல்  தமிழ் இசைத்துறைக்கு அவரது பங்களிப்பு அவருடைய பாடல்கள் வழி நடந்தது. தூரன் அவருடைய காலத்தில் இசைத்துறையோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார், பண்ணாய்வு ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறார். தொடர்ந்து இசைப்பாடல்களை எழுதி அவற்றை இசையமைக்க தகுதியானவர்களை கோரி அப்பாடல்களை அரங்கேற்றியுள்ளார். முருகன் மீது அவருக்கு மிகுந்த அன்பு, தனிப்புத்தகம் போடுமளவுக்கு முருகன் மீது பாடல்கள் எழுதியுள்ளார்.  காந்தியடிகள் குறித்து பாடல்கள் எழுதி அரங்கேற்றியுள்ளார். இம்முறை தமிழ் விக்கி தூரன் விருது விழாவில்  தூரனின் பாடல்களை மட்டும் கொண்ட கச்சேரி நிகழ்த்த முடிவு செய்திருந்தார்கள். 





நண்பர்கள் அனைவரையும் தயார்ப்படுத்தும் விதமாக பாடல்களின் பட்டியலும் அவற்றிற்கான யூடியூப் இணைப்புகளும் முன்கூட்டியே எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தின் வாயிலாக பகிரப்பட்டன.  தமிழகத்தின் இசைக்கருவிகளின் தனித்துவம் மிக்க நாதஸ்வரம் மூலமாக இப்பாடல்கள் இசைக்கப்படவிருந்தன. நாதஸ்வர எமன் என்ற பெயர்பெற்ற திருமெய்ஞானம் டி பி நடராஜசுந்தரம்பிள்ளை   அவர்களுடைய மகனான திருமெய்ஞானம் டி பி என் இராமநாதன் பிரதான நாதஸ்வரம், அவருடன் இணை நாதஸ்வரம் பாண்டமங்கலம் ஜி யுவராஜ் , தவிலிசை கலைமாமணி தலைச்சங்காடு டி  எம் ராமநாதன், அவருடன் கட்டிமேடு பி பாலசங்கர் தவில் இணை. தலைச்சங்காடு ராமநாதன் அவர்களுடைய மகனான நண்பர் யோகேஸ்வரன் பாடல்கள் குறித்த அறிமுகம் தர , கச்சேரி துவங்கியது. முதலில் கணநாதனே என்ற விநாயகர் துதி கருங்குயில்கள் தங்கள் விரிந்த வாயால் இணையே இல்லா பெருவாழ்வை கஜமாமுகனிடம் வேண்டின. அடுத்தது தாயே திரிபுரசுந்தரி , திருவான்மியூர் தலத்தின் இறைவி மீது தூரன் இயற்றிய பாடல், சாமகானத்தில் மகிழும் சதாசிவனையே மருந்தென கொண்டவளை பணிந்து வலம் வந்தன குழல்கள். அடுத்ததாக அன்பே சிவம் அருளே தெய்வம் என்னும் பாடல், எல்லா உயிருக்கும் இன்பம் தேடுவோம் என்ற வரிகளில் திளைத்தன.  அடுத்து வந்தது முருகா முருகா என்ற துரனின் புகழ்பெற்ற சாவேரி ராக கீர்த்தனை. இரு நாதஸ்வரங்களும் இணைந்தும் பிரிந்தும் ஊடியும் உருகிப்பாடிய பாடல், நிஜமாகவே கண்கள் சொக்கியிருந்த முகங்களை கண்டேன். கல்லாச்செவிக்கும் கனிந்திறங்கும் வான் நதிபோல இசை, சொல்லொன்றும் இல்லை அசைவொன்றும் இல்லை கண்கள் மேடையை நோக்கியிருந்தன அவ்வளவே. நீள் கருங்கிளையில் தத்தி நகரும் பறவைக்கால்களென அசைவன விரல்கள்.  அடுத்து ஹரிஹரசுதனே ஐயப்பா என்னும் ஆபோகி ராக பாடல் ராமன் வில்திறம் ஏழ்பனை துளைத்தாற்போல விறுவிறுப்பாக சென்றது. 



இவ்வளவுநேரமும் நடந்தது ஒன்றுமில்லை என்னும்படி வித்தாரமாக எங்கே தேடுகின்றாய் என்னும் பாடலை இசைத்தனர் நாதஸ்வர இணையர். அடுத்ததாக பாம்பே ஜெயஸ்ரீ அருகே வந்துவிட்டாரோ என மனம் மயங்கும்படி எங்குநான் செல்வேனையா என்று அரிதான த்விஜாவந்தியில் துவங்கினார் ராமநாதன், திங்கள் வெண்பிஞ்சினை செஞ்சடை சூடுவோன், நஞ்சினை உண்டு நட்டம் பயில்வோன் என சங்கரனை காதலாய் கசிந்துருகிப் பாடின நாதஸ்வரங்கள். பின் ராகம் தானம் பல்லவி ஆபேரியில், திருவரங்கம் ஊர் மொத்தமும் ஒரு கோவில் என்பதுபோல விரிவாக ஒரு ஆலாபனை, சூழ ஓடும் காவிரியும் கொள்ளிடமும் தனி ஆவர்த்தனத்தில் பொங்கிப்பெருகின. நேரமில்லாமல் அடுத்தடுத்த பாடல்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற பதட்டம் தவிர்த்து அடுத்த நான்கு பாடல்களையும் இசைத்து முடித்தனர். முரளிதர கோபாலா இசைமேடைகளிலும், கலியுக வரதன் நடன மேடைகளிலும் கூட புழங்கும்  பாடல்கள், காவடிச்சிந்தில் புள்நிறைந்த மரத்தின் கீழ் நிற்கும் மகிழ்ச்சி ஆரவாரம், கவின் பயலை கூட்டி வந்திருந்தால் ஒரு ஆட்டம் போட்டிருப்பான். 


இறுதியாக சத்தியமே வெல்லும் என்ற காந்தியப்பாடலுடன் மங்களம் நிறைந்தது. மேடையில் நாஞ்சில்நாடன் அனைத்துக்கலைஞர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார். மேடையில் கலைஞர்களை நண்பர்கள் சென்று பார்த்து வணங்கிக்கொண்டே இருந்தனர், குப்பம் பேராசிரியர் பத்மநாபன் மேடையேறி வாழ்த்தியதும் ராமநாதன் நெகிழ்ந்துபோனார், அவர் கைகளை பற்றிக்கொண்டார். தூரனின் பாடல்களை நிறைவாக வாசிக்க வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது, இவற்றில் பலபாடல்கள் மறக்கப்பட்டுவிட்டன என்றார். அவர் தவிர அனைவருக்கும் சிறிய வார்த்தைகளில் நன்றி பகிர்ந்தனர். பொதுவாகவே இசைக்கலைஞர்கள் குறைவாகப் பேசுகிறார்களோ என நினைத்துக்கொண்டேன். சரி, எளிய மானுடர்களுடன் இவர்களுக்கென்ன பேச்சு.    



-தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

09.08.2023    


                





Comments