புதியன மலர்க

எனது சகோதரர் தலைமுறைக்கு முதல் வாரிசு, நல்ல காலத்தில் பிறந்தவர் ஆகவே சலுகைகள் அதிகம். நன்கு படிப்பவர் ஆதலால் எங்கள் வீட்டில் அவரை பொறியியல் படிக்க வைக்க முடிவு செய்தனர். 22 ஆண்டுகள் முன்பு மிகக்குறைந்த வருமானம் உள்ள ஒரு வீட்டின் மொத்த முதலீடுமாக அது இருந்தது. நான் சுமாராக படிக்கும் மாணவன், சில பாடங்களில் தட்டுத்தடுமாறி தேறிவிடுவேன். எனக்கும் அண்ணனை படிக்க வைப்பதுதான் சரி என்று தோன்றியது. நான் பன்னிரெண்டாவது முடிக்கையில் எனது வீட்டின் நிலை மிகவும் மோசம், அண்ணன் படித்துக்கொண்டிருந்தான் ஒரு பிரச்சனை காரணமாக அம்மாவுக்கு வேலை தற்காலிகமாக இல்லை, அப்பா ஏற்கனவே நோய்வாய்ப்பட ஆரம்பித்திருந்தார். எங்களுக்கு எப்போதும் உதவும் பெரியம்மாவுக்கு பணியிட மாற்றம் வந்திருந்தது அவர் அதை ஏற்க மறுத்து மருத்துவ விடுப்பிலிருந்தார். எனக்குமே உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சில நாள்கள் இருக்க வேண்டியிருந்தது. அப்போது நான் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்கள் அரசு கல்லூரியில் பொறியியலில் படிக்க உதவவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல கல்லூரியில் இடம்கிடைக்க வாய்ப்பிருந்தது. என்னை பார்க்க வந்த பெரியம்மா ஓராண்டு பொறுத்துக்கொள்ள சொன்னார். அடுத்த ஆண்டு நல்ல கல்லூரியில் சேர்த்து விடுவதாக சொன்னார்.

எனது பள்ளிக்காலத்தில் ஆறாண்டுகள் நான் விழா மேடைகளில் தான் இருந்தேன், நடனக்குழுவில் முத்துக்குமார் என்னும் நண்பரும் நானும் முன்னிலையில் இருந்தோம். பயிற்சி முகாம்கள், சிறப்பு நிகழ்வுகள், ஆண்டு விழா, கலைவார விழா, வைர விழா நிகழ்வுகள் அனைத்திலும் நாங்கள் ஆடுவோம். வெளியே நடக்கும் போட்டிகள், அரசு சார்பில் நடப்பவை வெவ்வேறு தனியார் பள்ளிகள் நிறுவனங்கள் நடத்தும் போட்டிகள். எங்கள் பள்ளியில் சினிமாப்பாடல்களை ஆட அனுமதியில்லை. இறைத்துதி பாடல்கள், கிராமிய நடனம் இவைதான். நான் ஆடுவதோடு பாட்டு, நாடகம் என்ற மற்ற ஆர்வங்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தேன். எனக்கு அப்போது திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் சேர்ந்து இளங்கலை நடனம் அல்லது நிகழ்த்துக்கலைகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வமிருந்தது.

ஆனால் வீட்டின் சூழல், வெளியுலகை தெரிந்து கொள்வதில் எனக்கிருந்த தயக்கம் இவை காரணமாக நான் வேறு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. நான் வீட்டின் சுமையை அதிகரிக்க விரும்பவில்லை, அதன் வழியே நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய பெரும்கடனை என்னால் திருப்பியளிக்க முடியாது என்றும் நினைத்தேன். ஆகவே டிப்ளமா படிக்க முடிவு செய்தேன். எனது பள்ளி நண்பர்கள் சிலர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள் நான் உடல்நலம் தேறி ஓரிரு மாதங்கள் கழித்துத்தான் போய் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் நான் விரும்பியதே நடந்தது, ஈராண்டுகள் படித்தபின்னர் எனக்கு உடனே வேலை கிடைத்தது, நான் மீண்டும் சில நிறுவனங்களில் நேர்முகத்தேர்வுக்கு சென்றேன். ஓரிரு இடங்கள் மாறினேன். எப்படியிருந்தாலும் நான் வேலைக்குப்போய்விட்டேன் பத்தொன்பது வயது ஆரம்பிக்கும் முன்னரே. அது எனக்கு பெரும் பற்றுக்கோடாகவிருந்தது, எனது உணவுக்கு நான் யாரையும் பணம் கேட்க வேண்டாம். ஆனால் எனது குணம் காரணமாக பெரிய இடங்களுக்கு செல்ல விரும்பவில்லை. படிக்கவும் பயணிக்கவும் நிறைய இருந்தது. வாய்ப்புக்கிடைக்கையில் வெவ்வேறு கலைவடிவங்களை காணவும் அவற்றில் பங்கேற்கவும் முயன்றேன்.

ஆனால் விரும்பியபடி சேர்ந்தாற்போல இருநாட்கள் விடுமுறை எடுக்க முடியாது. நீண்ட பயணங்கள் போக முடியாது. இதுபோல சிக்கல்கள், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்தச்சுழலிலிருந்து வெளியே வரமுடியவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மிகவும் பணிச்சுமைக்கு ஆளானேன். பணிச்சுமை என்றால் எட்டு பேர் பணிபுரிந்த இடத்தில் ஒவ்வொருவராக குறைந்து நான்கு பேர். எனக்கு உதவியாய் இருந்த நான் பயிற்றுவித்த அனைவரையும் வெளியே அனுப்பி விட்டோம். இது உண்மையிலேயே நான் வேலைசெய்த உற்பத்தித்துறையின் சிக்கல் மட்டுமே என்று சொல்லமுடியவில்லை. எனது உடனடி மேலாளரின் வெறுப்பும் மலைபோல குவிந்திருந்தது. மனிதர்கள் தங்களது தேவைக்காக விதிகளை எப்போதும் மாற்றுபவர்கள் தானே. பணி செய்வது எப்போதும் சிக்கலாக இல்லை, ஆனால் பணிச்சுதந்திரம் தான் சிக்கலாகியது. ஒரு கட்டத்தில் மனஅழுத்தம் தாளவில்லை. உடல்நலத்தை அது பாதித்தது. வீட்டில் சிறிது நேரமும் செலவிடமுடியவில்லை. ஒப்புக்கொண்ட எழுத்துப்பணிகளை முடிக்க முடியவில்லை. எனது மனைவியிடம் ஆலோசித்து விட்டு அந்த முடிவை எடுத்து விட்டேன். பணியிலிருந்து விலகிக்கொள்வதாக சொல்லிவிட்டேன். மார்ச் இறுதியில் வெளியே வந்தாகிவிட்டது.

இப்போது புதிய வாய்ப்புகளை நோக்கி செல்கிறேன், சில வாரங்கள் முற்றிலுமாக முந்தைய அழுத்தங்களிலிருந்து வெளியே வரவேண்டும். பெரிய தேவைகள் எனக்கு இல்லை ஆகவே சில மாதங்களில் ஒரு வேலைக்கு மீளவேண்டும் என்பது வரை போதும். நீண்ட தூரம் பாரம் சுமந்தாற்போல ஒருமனநிலை, சிறிய நீர்த்துறை இளைப்பாறல். பார்ப்போம் இவ்வுலகில் அனைவருக்கும் ஓரிடம் உண்டு. உலகம் தெரியாமல் டிப்ளமோ படிக்க முன்னூறு கிலோமீட்டர் தாண்டிப்போன பையன், தைரியமாக மேடைகளில் ஏறிய பையன், பேய் போலச் சுழன்று சுழன்று பயணித்தவன் இன்னும் உள்ளே இருக்கிறான்.

இதோ வசந்த ருது இன்று துவங்குகிறது, எவ்வளவு வெயில் இருந்தாலும் பூக்களின் காலம் இது. வேம்பும் வாகையும் புங்கமும் மரமல்லியும் பூக்கும் பருவம். என்னம்மை வாணி உடன் இருக்கிறாள், குருவருள் உண்டு, பொன்னென பூக்கும் கொன்றை உண்டு, புதியன மலர்க.

தாமரைக்கண்ணன்

விழுப்புரம்

14.04.2025

Comments

  1. அண்ணா உங்களது கட்டுரை தற்போதைய நிலையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை கொடுக்கிறது.... நல்லவர்கள் வீழ்வதில்லை அண்ணா....

    ReplyDelete
  2. மிகச்சிறந்த கட்டுரை அண்ணா, மாமங்கலையான இந்த தினத்தில் பெரும் ஆசியை போல வாசிக்க கிடைத்தது. அதிமனிதர்கள் இன்னும் பறப்பார்கள், நீங்கள் அதி மனிதர். வாழ்த்துக்களும் அன்பும்

    ReplyDelete

Post a Comment