பின்னர் தேவா வீட்டிற்கு இந்தியா டுடே தமிழ் புத்தகங்களை வாங்கிவந்தான், அப்போதுதான் தமிழில் டுடே வர ஆரம்பித்த காலம். எனக்கு அந்த புத்தகத்தின் வழவழப்புத்தன்மை இன்னும் கை விரலில் எஞ்சுகிறது. அன்று வந்த வார இதழ்கள் மற்றும் பாக்கெட் நாவல்களை கண்ணால் கண்டவர்கள் தமிழ் இந்தியா டுடே இதழை திருவோட்டில் விழுந்த பொற்காசுபோல ஆச்சரியத்தோடு பார்த்தார்கள், அதன் அச்சுத்தரம் அப்படி இருந்தது. ஆங்கில இந்தியா டுடேவின் அதே தரத்தில் தமிழிலும் ஒவ்வொரு இதழும் சிறப்புக்கட்டுரைகள் கொண்டிருந்தது, புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களோடு, தனிக்கவனத்தோடும் வடிவமைக்கப்பட்டவை அவை. அரசியல் , கிரிக்கெட் கட்டுரைகள் இருந்தாலும் அதைத்தாண்டி இந்திய அளவிலான சமூகத்தை பாதிக்கக்கூடிய பலவிஷயங்களை இந்தியா டுடே அன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தமிழ் டுடே சீக்கிரமாக நிறுத்தப்பட்டது. தமிழில் நல்ல இதழியல் முயற்சிகள் நெடுங்காலம் தொடர்ந்ததில்லை சமீபத்திய உதாரணங்கள் விகடனின் தடம், சிறார் இதழான தும்பி.
தொடர்ந்து இந்தியா டுடேவில் சிறுகதைகளும் சில தொடர்கதைகளும் வந்தன. வாஸந்தி எழுதிய ஒரு தொடர்கதை நினைவுக்கு வருகிறது ஒரு சிறுமி அல்லது வளரிளம்பெண் தனது வீட்டின் முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையை காட்சிகளாக பார்ப்பதுபோன்ற கதை நினைவில் இருக்கிறது. அதில் ஒரு பாட்டி பாத்திரம் கைத்தல நிறைகனி பாடலை சொல்லும், பாட்டியின் கணவன் இளவயதில் தாசித்தெருவிற்கு சென்று வந்ததை பேத்தியிடம் சொல்வாள். தாசித்தெரு விலாசினியின் முலைநலத்தை மனைவியோடு ஒப்பிட்டு கணவன் விதந்தோதுவான். நேர்மையாக இன்னொரு விஷயத்தையும் சொல்வதென்றால் அதிகபட்சம் நான் அப்போது எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் எனவே இலக்கியம் குறித்த புரிதலெல்லாம் இல்லை மாறாக கதைகளில் வரக்கூடிய பாலியல் சார்ந்த விஷயங்கள் தான் எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தின. அவையே ஒரு துண்டில் முள்ளாக இன்னும் சில கதைகளை நினைவில் இருத்தியிருக்கின்றது. இந்தியா டுடே அன்று வெளியிட்ட சிறுகதைகள் வேறு எந்தப்பத்திரிக்கையும் அந்தக்காலத்தில் வெளியிட முடியாதவை. ஆனால் அவை நிச்சயம் சுஜாதாவும் குமுதமும் செய்யும் வியாபார உத்திகள் அல்ல. காமம் குறித்த மிக வெளிப்படையான கதைகள் சில அவற்றில் இருந்தன, பன்றி வளர்க்கும் குறத்தியை ஊரார் பலர்கூடிப்புணர்ந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. விதிவிலக்காக ஆண்டாள் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது கதை மிகவும் அகவயமான உணர்வுகளை எளிதாக கடத்தும்படி எழுதப்பட்டிருந்தது பெரியாழ்வாருடன் கோவிலுக்குச்செல்லும் அவள் கருவறையில் இருக்கும் பெண் தெய்வமாக தன்னை உணர்ந்ததாக அந்தக்கதை முடியும். எழுதியவர் இந்திரா பார்த்தசாரதியாக இருக்கலாம்.
இந்தியா டுடேவின் கடைசிப்பக்கங்களில் வெளிவரும் சிறுகதைகளில் ஒன்றாகத்தான் நான் நாஞ்சில் நாடனை முதலில் வாசித்திருக்கிறேன், அன்றெனக்கு அவர் யாரெனத்தெரியாது. அந்த சமயத்தில் படித்தகதைகள் மட்டுமே நினைவில் நிற்கின்றன, எழுதியவரை தெரிந்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் யோசிக்க எனக்கு வயதில்லை. கதையில் பள்ளியில் ஆசிரியர் வகுப்பெடுக்க வருகையில் இறுதி இருக்கை மாணவர்கள் மூவர் பெஞ்சில் தலைகவிழ்ந்து சுயஇன்பம் செய்து கொண்டிருப்பர். ஆசிரியர் அநேகமாக தமிழய்யா, அவர்களை தலைமை ஆசிரியரிடம் கொண்டுசெல்வார். அவர்கள் பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள் மூவரில் ஒருவர் கூலித்தொழிலாளி. தனது பாணியில் தலைமை ஆசிரியருடன் அவர் பேசிமுடிக்கும் இடம்தான் கதை. நாஞ்சிலின் எந்தத்தொகுப்பில் இக்கதை வெளிவந்துள்ளது என்று தெரியாது, இன்றும் கதை வரிகளாக மனதில் ஓடுகிறது. முதலில் மனதில் தங்கியது அதன் மொழி, எனக்கு அதை வாசிப்பதில் எந்தத்தடையும் இல்லை. அவர் அக்கதையில் பேச்சுமொழியையும் தனது பாணி மெல்லிய சீண்டலோடுகூடிய விவரணைகளையும் எப்படிப்பயன்படுத்தியிருந்தார் என்று இப்போது விளங்கிக்கொள்ள முடிகிறது. தமிழய்யா அவர்களை தலையாசிரியரிடம் கூட்டிப்போகையில் மூவரையும் கண்ணகிக்கு கல்சுமந்த கனகவிசயர் போலவும் தன்னை சேரன் செங்குட்டுவன் போலவும் உணர்வார். நான் என்ன கூளப்ப நாயக்கன் காதலா நடத்துதேன் என்று அவர் கேட்பதை விளங்கிக்கொள்ள வாசிப்பு போதாமை அன்று, நாஞ்சில் எப்போதும் சிற்றிலக்கியங்களையும் தனிப்பாடல்களையும்கூட தனது எழுத்தில் தக்கவாறு கொணர்பவர். தலைப்புகளும் அவ்வாறுதான், அழாது கடக்கமுடியாத அவர் கட்டுரையொன்றின் பெயர் 'எங்கனம் ஆளும் அருள்'. அது புலால் மறுத்தல் அதிகாரத்தின் ஒரு குறளின் ஈற்றடி என்று கண்டுகொள்ள சிலகாலம் பிடித்தது.சாமான்யனான அந்த தந்தை முதலில் தனது மகனுக்காக மன்னிப்புக்கேட்பார், தலைமை ஆசிரியர் இன்னும் பணிவை எதிர்பார்த்து சீற்றம் காட்டுவார். சவங்களை தண்டிக்க வேண்டியதுதான், காதும் காதும் வைத்தாற்போல கண்டிக்காமல் சந்தையில் தட்டி வைக்கச்சொல்லுதீரா என்பார் அந்த அப்பன். நாடனின் பாணியிலேயே சொல்வதென்றால் ஈண்டு தட்டி வைப்பது குறித்து தனியாக விளக்கவேண்டும். சீவிய மூங்கில் குச்சிகளை பின்னிப்பலகையாக்கி அதன்மேல் காகிதங்களை ஒட்டி மேலே அழகிய கையெழுத்தில் தெரிவிக்க வேண்டியதை எழுத வேண்டும், நீலச்சாயத்தில் தோய்த்து சாய்வெழுத்தாக எழுதப்படுபவை பெரும்பாலும் போராட்ட அறிவிப்புகளாக இருக்கும், கண்டனமாக இருக்கும், சிவராத்திரிக்கும் ஏகாதசிக்கும் சிறப்புக்காட்சிகளை தட்டியால் எழுதி வைத்தார்கள். முச்சந்தியில் அல்லது உரிய இடத்தில் நிறுத்தப்படும் தட்டிகள் அறிவிப்புப்பலகைகள்போல. அதிலிருந்து போஸ்டருக்கும் அங்கிருந்து பேனருக்கும் துணி வர்க்கமே வேண்டாமென டிஜிட்டல் பலகைகளுக்கும் தற்போது தாவிவிட்டோம் நாம்.
போதும்டே சந்தையில சொமடு தூக்கிப் பிழைக்கலாம்லே மக்கா வா போவோம் என்று முடியும் அக்கதை எதைப்பற்றியது என்று வெகுகாலம் தெரியாது அது தன்மரியாதையை மட்டும் பேசுகிறது என்றுதான் விளங்கிக்கொண்டேன். இன்னும் கொஞ்ச தூரம் ஆழ்ந்து சென்றால் அது தந்தைமையை பேசுகிறது, உலகத்துல அதைச்செய்யாத ஆம்பிளை உண்டா என்று கேட்கும் தந்தை. ஒழுக்க மீறலுக்காக பரிந்துகொண்டுவரும் தந்தை அல்ல, இயல்பாக சொல்லிப்புரிய வைக்கும் ஒன்றை, மரபணுக்களிலேயே கடத்தப்படும் தன்னிச்சையை புரிந்துகொள்ள முடியாத நீயும் ஒரு ஆணா என்று கேட்கும் தந்தை. கல்விக்கூடத்தின் போலித்தனத்திற்கும் அசலான அவரின் கேள்விக்குமான இடைவெளி அன்று தேவையாயிருந்த பாலியல் கல்வி உட்பட பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
நாஞ்சிலின் அந்த கதை இன்று நினைவிலிருப்பதால் அவரது எழுத்துலகை கரைத்துக்குடித்து விட்டேன் என்றில்லை. சிலபாடல்கள் மனதுக்கு கேட்ட மாத்திரத்தில் பிடித்து விடுகிறது, மனம் ஓயாது முணுமுணுத்து அப்பாடலை என்றாவது வெளிக்கேட்க பாடிவிடுவோம். பக்கத்திலிருக்கும் மணி சொல்வான் அது அப்பிடி வராதே வரியை மாத்தினா பரவால்ல, நீ டியூனையே மாத்திருவியே. கொள்கலத்தின் வடிவம்தானே திரவத்தின் வடிவமும், அப்படித்தான் பாடுவேன் என்று மேலதிகமாக அவனுக்குப்பிடித்த பாடலையும் சேர்த்துப்பாடி நன்னயம் செய்யவேண்டியதுதான்.
அடிமுடி தேடியறியாத அன்ன சிவத்தின் இருமுடிகள் பசியும் ருசியும் என்றால் அதை இருவடிவிலும் பறந்தும் அகழ்ந்தும் தேடிச்செல்பவர் நாஞ்சில்தான். அவரது கதைகளில் அம்மை பார்த்திருந்தாளும், எடலாக்குடி ராசாவும், யாம் உண்பேமும் பசி என்னும் பேருணர்வை யாரும் உணரச்செய்பவை. வெறும் பசியென்றா சொன்னேன் இல்லையில்லை அது கைநீட்டி இரக்க ஏலாதவனின் பசி. தன்பசி மட்டுமல்லாது வித்து நெல்லை அவித்துத்தின்ன எண்ணும் உழுகுடி குடும்பத்தின் பசி, ரயிலில் எதிரில் அமரும் யாரோ ஒருவனின் பசி, பந்தியில் இருந்து எழுப்பப்படுபவனின் பசி. ஆயிரம் ஆண்டுகள் பாணர்கள் சுமந்து சென்ற பசியோடு நாஞ்சிலின் பசியும் இணைந்துகொள்கிறது. சக்திமுத்தப்புலவனை அவ்வையை அந்த பசியைக்கொண்டு புரிந்துகொள்ளும் நாஞ்சில் நீண்டு செல்லும் அந்த பசி வழியை நமக்கும் காட்டி ஆற்றுப்படுத்தும் பாணனாகி விடுகிறார், வேறு எந்த உருவகத்தையும்விட நான் முணுமுணுத்துக்கொள்ளும் அகவரி அதுதான். என்னை நாஞ்சிலின் எழுத்துக்களோடு பிணைத்துக்கொள்ளமுடிவது நானும் பசித்திருக்கும் ஒரு பாணன் என்பதால்.. ருசியென்றால் அது கண்ணுவிள்ளையின் கைப்பக்குவம், பிரண்டைத்துவையலும் உளுந்தங்கஞ்சியும் கொள்ளும் கும்பமுனியின் ருசி. கும்பமுனியின் ருசி சாப்பாட்டில் மட்டுமா நிற்கிறது, சூரல் நாற்காலியில் அமர்ந்து தனியனாகி சொற்களை சுவைக்கும் கும்பமுனி. சொல்லேர் உழவன் வே என்னும், அர்ச்சனை பாட்டேயாகும் என்று மனதில் புடம் போடும் பாட்டா கனவில் வானி வழிய சப்புக்கொட்டும் பிள்ளைபோலத்தான் இருக்கிறார். இரவெல்லாம் பிள்ளைக்கு ஊட்டி ஊட்டி முலைசலித்து வசவுபாடும் அன்னைபோல என்றேனும் தமிழன்னை நாஞ்சிலை நினைத்துக்கொள்வாள் என்று நினைக்கிறேன். சொற்களில் நாஞ்சில் மையம் கொண்டது அவரது புனைவு வாசகர்களுக்கு அயர்ச்சியா என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு அவை உண்ணஉண்ண தெவிட்டாத கட்டுரைகள்தான்.
இந்த மேலடுக்கு உணர்வுகளின் மீது நின்று நாஞ்சில் நாஞ்சில் என்று மனம் கூவுவதால் அவர் படைப்புகளின் மீது இந்தப்பெரும் காதல் கூடியதா என்றால் இல்லை. அடியாழத்தில் வேறு எதோ ஒன்று இருக்கிறது. யோசித்தால் இந்த மொத்த மானுடத்தின் மீது அவர் எழுத்தில் நிற்கும் கருணை முதல் காரணமாக தோன்றுகிறது. வெக்கை மிகுந்த நாளில் பேருந்தை ஓட்டுபவன் சாலையை கடக்கும் பாம்பு ஒன்றுக்காக சட்டென்று நின்று சீக்கிரம் போ மகளே என்று மலையாளத்தில் சொல்லும் கதை. மற்றோர் கதையில் மும்பையில் பக்கத்து வீட்டுப்பெண் ஒருத்தி கணவனை விட்டு வேறு ஆடவனுடன் கூடியிருப்பதை கண்டு தன்னிடம் வந்து சொல்லும் மனைவிடம், அவளை விட்டுவிடு அவள் நிலைமை என்னவோ என்று சாலப்பரிந்து பேசும் மற்றுமொரு அப்பன். சாலையில் அடிபட்ட பிள்ளைக்காக அதன் தாய் கேள்வி கேட்கும் குக்கல் நீதி கதையை எனக்காக ஒருமுறை படித்துப்பாருங்கள். சுற்றி நடப்பதெல்லாம் கண்டு மனம் பொறாது சலித்துப்போய் சினிமாக்காரனையும் அரசியல்வாதியையும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் அறங்கேட்கும் நாஞ்சில் நம் கண்ணுக்கு தெரியும் ஒருவர். அவர் எப்போதும் பேசுபவர் தான், ஆனால் அவருக்கு உள்ளிருந்து எழும் காலம் கடந்துநிற்கும் கருணையை பேசும் குரல் வேறு ஒருவருடையது. விகடனில் வந்த அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது என்ற கதையில் நாடன் இடம்பெயர்ந்து போகும் இரு தெய்வங்களின் கதையை எழுதியிருக்கிறார், அவை தங்கள் பீடம் விடுத்து கும்பிடப்பட்டவங்களுக்கு தெய்வம் உண்டுமா என்று கேட்டு போவதாக கதை முடியும், அந்தக்கதையில் தெய்வங்களின் இரக்கம் என்ற உணர்வு பெருகி பாழ் நிலங்களை எல்லாம் நனைத்துச்செல்கிறது, அது தெய்வங்களின் மீதான இரக்கமாகவும் கூட மாறி நிற்கிறது.இலக்கியம் பாடுபொருளென ஒன்றை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் என்றால் சமயங்களில் அப்படி இல்லை என்றே சொல்வேன். நாஞ்சிலின் பூனைக்கண்ணன் கதை அப்படிப்பட்டது, அம்மன் சிலையை திருடப்போனவன் சித்தர் போல ஆகிவிடுவான். விகடனில் வந்த வாரமே அதைப்படித்திருந்தேன், அரஸ் ஓவியம் என்ற நினைவு. பூனைக்கண்ணன் அடையும் மாற்றங்கள் மிகுந்த அகவயமான மொழியில் வெளிவந்தவை. ஒரு படைப்பாளியின் மிகச்சிறந்த வெளிப்பாடுகள் அவையே. கும்பமுனியின் நிறைவேறாத காதல்கதை ஒன்று இருக்கிறது 'அவள் எனக்குப் பெண்டிருந்து நிறைந்து போயிருக்கனும்' என்று இறந்த பெண்ணைப்பற்றி கும்பமுனி பேசும்குரல் அதுவரை வந்த கதைகளில் இருந்து வேறானது. புதுமைப்பித்தனும், நகுலனும் நாஞ்சிலுக்கு அப்படித்தான் அந்தரங்கமானவர்கள். அந்த இரவு கதையை கும்பமுனி அசைபோடும் இடத்தில் அவர் காண்பது புதுமைப்பித்தன் பார்த்த அதே திருவாதவூரனை. நகுலனின் நினைவுக்கட்டுரையாக கனலியில் எழுதிய 'ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்' அந்தரங்கமான ஒருகுரல் கொண்டதுதான். இந்த எழுத்துதான் என்னை அடியாழத்தில் இருந்து எழுத்தாளர் சுப்பிரமணியத்தின் கைகளை இறுகப்பற்றிக்கொள்ளச்செய்கிறது.
கம்பனை, பாரதியை, இடங்கழி நாட்டு நத்தத்தனாரை பேச்சில் புகட்டும் நாஞ்சில் எனக்கு நல்லாசான். மரபும் சிற்றிலக்கியமுமாக ஒலிக்கும் அந்தக்குரல் இந்தத்தலைமுறைக்கு கடத்தியது என்ன என்று எளிதில் சொல்லிவிடமுடியாது. காலந்தோறும் அறுபடா மரபின் தொடர்ச்சி அவர். கம்பனின் பாடல்களை அவர் சொல்லக்கேட்ட தலைமுறையில் ஒருவன் நான் என்பதே எனக்கு பெருமை. அவரது கைம்மண் அளவு போன்ற கட்டுரைகளுக்காக நூலகத்தில் குங்குமம் இதழை படித்தேன், இன்றிருந்தால் சதுக்க பூதத்துக்கு செரிமானக்கோளாறு ஏற்பட்டிருக்கும் என்பது அவற்றின் மொழிக்கு சான்று. நாஞ்சில் இவைதான் எழுதினாரென்றில்லை, ஒருகட்டுரையில் வடதமிழ்நாட்டின் அர்ச்சுனன் தபசு கூத்து குறித்து கூட எழுதியிருந்ததை சமீபத்தில் வேறு தேடல் ஒன்றின்போது கண்டுகொண்டேன். ஒருமுறை அவரை திருவாலங்காடு அழைத்துச்செல்லவேண்டும், அவருக்கு ஒரு ஆவணப்படம் செய்யவேண்டும் என்றெல்லாம் பேராசைகள் உண்டெனக்கு. கும்பமுனி கும்பிடும் தம்பிரானும் இரங்க வேண்டும்.
இருபது ஆண்டுக்குள்தான் இருக்கும், ஒருமுறை திருச்சியை சுற்றி பெருமழை பெய்து யாரும் செல்லமுடியாத தீவாக ஸ்ரீரங்கம் துண்டிக்கப்பட்டுவிட்டது, எங்கோ வடமதுரை கிராமத்தில் இருந்த சந்தாம்மா அதற்கு அழுதாள், எனக்கு விளங்கவில்லை அவளுக்கும் ஸ்ரீரங்கத்திற்கும் என்ன தொடர்பு. அவள் அந்த ஊரை தமிழ்ப்பாடல்களால் தான் அறிந்திருந்தாள். தன் குலதெய்வம் இல்லாவிட்டாலும் அந்தக்கடவுளை ஏதோ விதத்தில் மனத்தில் பிணைத்துக்கொண்டிருந்தாள், மழை நின்றபின் தான் ஒழுங்காக சாப்பிட்டாள். ஆழ்வார்கள் பாடலில் இந்தப்பிணைப்பு மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது, இன்னும் ஏழேழ் பிறவிக்கு திருமாலுடனான பற்று விலகாது என்பார்கள், தானல்ல தன் முன்னோர்கள் எல்லோருக்கும் இந்த நிலைதான் என்பார்கள். தமிழ் மரபின் நீட்சியாக, நவீன இலக்கியத்தில் பெருங்கருணையாக என்னை வந்து தீண்டும் நாஞ்சில் நாடனின் அந்த விரல் எந்தை தந்தை மூத்தப்பனுடையது.
தாமரைக்கண்ணன்
விழுப்புரம்
11.10.2024
காலந்தோறும் அறுபடா மரபின் தொடர்ச்சி தான்அவர்.👌✅
ReplyDeleteமிக அற்புதமாக நாஞ்சில் நாடனை அவதானித்து கொண்டாடி இருக்கிறீர்கள் சிறப்பான கட்டுரை
ReplyDelete