அரிசங்கரின் சிறுகதைத்தொகுப்புகள் பதிலடி, உடல், சப்தங்கள், ஏமாளி அன்றியும் அவருடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பும் வந்துள்ளது. பாரீஸ், மாகே கஃபே என்ற அவரது இரு நாவல்களும் பேசுபொருளால் முக்கியமானவை. உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவல் எழுத்தின் கற்பனை சாத்தியங்களால் கழங்காடியாது, சமீபத்தில் கூட எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் இந்நாவல் விவாதிக்கப்பட்டது. நெடுங்கதைகள் அல்லது குறுநாவல்கள் 'பக்கார்டி' மற்றும் சமீபத்தில் வந்துள்ள 'மாயவொளி' இவையிரண்டும் தொகுப்புகளாக வந்துள்ளன. பாரீஸ் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்ப்பாகியுள்ளது, எதிர் வெளியீடு. அன்றியும் தற்போது குறுங்கதைகள், மொழிபெயர்ப்புகள் என்று தீவிரமாக இயங்கி வருகிறார் அரி .
படைப்பாளி கட்டுக்கோப்பான ஒரு சமூக வட்டத்திலிருந்து மட்டுமே உருவாவதில்லை. அவன் வட்டத்திற்கு வெளியேயும், அதன் கோட்டு விளிம்பிலும் இருந்து எழக்கூடும். அவன் கண்ட விழுமியங்கள் அவன் சொந்த வாழ்விலிருந்தே வரலாம், அது ஒன்றும் சர்வாதிகார விதி அல்ல. கனவிலும் நனவிலுமாக அவன் கண்கள் காண்பவற்றை நமக்கு காட்டும் எத்தனிப்புதான் படைப்பு. தமிழில் சமூகத்தின் இருண்மையை கையாண்ட படைப்புகளாக ஏழாம் உலகம், ஜி நாகராஜனின் படைப்புகள் ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் அவ்வரிசையின் மையங்கள் வெவ்வேறானவை. புதுச்சேரி போன்ற ஒரு சிறிய அம்மையப்ப உலகத்தை அதன் கறுப்பர் வெள்ளையர் நகரம் என்ற எல்லைகளை போன்று ஒளி இருள் என்று பிரித்துவிடமுடியாது. எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும், எதிர் வீட்டிலும் இருக்கக்கூடிய இருண்மையின் சாத்தியங்கள். கூரானவிளிம்பு தெரியாமல் அவற்றை பொதிந்து வைத்துள்ள நிதர்சனங்களை, அந்த சிறிய வண்ண வேறுபாடுகளை காட்டுபவை அரிசங்கர் கதைகள்.
பிரான்ஸ் என்னும் தூரத்து நிலவை கனாக்காணும் கண்கள் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும் தருணம் பாரீஸ் நாவல். மாகே காஃபி புதுவைக்கு பிழைக்க வந்த வெவ்வேறு மனிதர்களை அந்நகரில் பெற்றதும் இழந்ததுமான தருணங்கள். ஒன்றன் தொடர்ச்சியாகவே வாசிக்கத்தக்கவை இரண்டும். புதுவை போன்ற ஒரு நிலத்தின் பலவண்ண கலாச்சாரத்தை காட்சிகளாக்கி அவற்றின் மீது எழுந்த எழுத்து வகை இது. போலவே எந்த ஒரு விழுமியத்தையும் பெருமிதத்தையும் அடிப்படை கேள்விகளுக்குள்ளாக்கிக்கொண்டே செல்பவை. இரண்டுமே தவிப்புதான் ஒன்று அடைய விரும்பும் கனவு வாழ்வுக்கானது, இன்னொன்று பிழைத்துக்கிடப்பதற்கான ஏதுக்கள். இவை இரண்டிற்குமான ஊடாட்டம் தரையிலும் கனவிலுமாக தாவிக்கொண்டேயிருக்கும்.
மீண்டும் மீண்டும் புதுவை நிலத்தை, இருள் எஞ்சிய நகரின் தெருக்களை, அதுசார்ந்த உணர்வுகளை அவரது எழுத்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அரியாங்குப்பத்திலிருந்து புதுச்சேரி ஜெயில் இருந்த இடத்தை பார்க்க வரும் ஒருவர், கடைசியா எப்போடா என்னோட வத்தக்குழம்பு சாப்பிட்ட என்று பிரியாணி அடிமையாகி விட்ட ஒருவனிடம் கேட்கும் கடை மாஸ்டர், ஆட்டோ ஓட்டுனருக்கும் வெளிநாட்டுப்பயணிக்குமான நட்பு, கடலூருக்கு பாண்டிச்சேரிக்கும் சிங்கிள் அடிக்கும் பஸ் செக்கரின் சடுதிக்காதல் எல்லாம் இங்கிருந்து வருபவைதான். பக்கார்டி கதையில் வரும் இயேசு பாத்திரம் போன்று தனித்துவமான மனிதர்கள் அரியின் எழுத்தில் நிறைந்திருக்கிறார்கள்.
இலக்கியத்தில் இந்த புற உலகமும், வாழ்க்கையும் ஒரு தளம் தான் என்று படுகிறது அதிலிருந்து எழும் கேள்விகளும் விடைகாணும் எத்தனமும் சமாதானங்களும்தான் இன்னும் முக்கியமானவை என்று தோன்றுகிறது. சாமன்யர்களின் உலகம் என்ற ஒற்றை அடையாளத்தோடு அரியின் படைப்புலகை நிறுத்திக்கொள்ளமுடியாது. உண்மையில் அவை ஒரு புறத்தோற்றம் தான், இறைச்சிப்பொருளாக எஞ்சி நிற்கும் கேள்விகள் வேறு சில. அவரது உடல் சிறுகதை தொகுதியில் தவிப்பும் தத்தளிப்புமாக பல உளவியல் சார்ந்த வினாக்கள் பல உண்டு.
வலியது வாழும் என்பதல்ல, தான் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பற்றிய எளிதின் வியப்பு அவர் எழுத்தில் வெளிப்படுகிறது. வலியை உணர்ந்து உணர்த்தி அழுவதல்ல, வலியை அசாத்தியமான நிதானத்தோடு பார்க்கும் தன்மையும், எங்கோ கனவில் படிந்திருக்கும் மீட்சிக்கான வெளியையும் அதில் எஞ்சவிருக்கும் ஒரு சொட்டு இனிமைக்கான தாகமும் வெளிப்படும் இடங்கள் அரியின் கதையுலகில் உண்டு.
எழுத்தாளரை இப்படியன் இந்நிறத்தன் என்று வாசகன் வகுத்துக்கொள்வது அவனது வசதிக்காக. விமர்சகன் செய்வது இலக்கிய விழுமியங்களுக்காக. உண்மையில் எழுத்தாளன் தனது கடைசி எழுத்தை எழுதி முடிக்கும் வரை அவர்களது கதையுலகு விரிந்தே செல்லும். எழுத்து குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் எழுத்தாளனது இது வரையிலான கதையுலகை பற்றிப்பேசுபவை அவ்வளவே. என்ன விளையும் என்று நிலத்தை கணிப்பவனது ஆழம் ஏர் நுனியளவே. பைனரி மழை, காம்யுவின் கைப்பிரதி போன்ற கதைகளும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் போன்ற ஒரு கதை வடிவமும் கூட அரியின் வருங்கால படைப்புகளுக்கு முன்மாதிரியாகலாம்.
தாமரைக்கண்ணன்


Comments
Post a Comment