ஆரப்பெருகும் வானம்

நான் செய்யத்தவறிய விஷயங்களைக் கணக்கில் கொண்டு எப்போதும் போல,கடந்த 2021ம் வருடம் மிகவும் மோசம் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். 

அதைச் சொல்லும் முன்னர் நான் செய்த விஷயங்களை தொகுத்துப் பார்த்தேன், 2021 அப்படியொன்றும் மோசமில்லை. மிகவும் சிரமப்பட்ட தருணங்களை நினைவுப்படுத்திக்கொள்கிறேன், என்னை கொரானா பாதித்தது, பெரியம்மாவுக்கு எழுபது வயதில் கால் உடைந்து அறுவை சிகிச்சைக்குப்பின் இன்று வரை என் அம்மா அவரை அருகிருந்து பார்த்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது, எனது மனைவிக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, அனைத்திலும் மோசமாக எனது அண்ணனின் மணமுறிவு உடன்பிறந்த அனைவருக்குமிடையே ஒரு விலக்கத்தை உருவாக்கியிருக்கிறது, என்னளவில் நான் இதுவரை நம்பியிருந்த அனைத்து அற விழுமியங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது.

 ஆனால் தொடர்ந்து பயணித்திருக்கிறேன், நண்பர் சந்தோஷுடன் இணைந்து ஒரு ஆவணப்படம் வெளியிட்டிருக்கிறேன், அநேகமாக புதுச்சேரி வெண்முரசின் எல்லாக்கூடுகைகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன், இணையக்கூடுகைகளில் சிறுகதை விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். பூஜ்ஜியத்திற்கு அருகிலேனும் சற்று எழுதியிருக்கிறேன்.


 இந்த வருடம் திட்டமிட்ட பயணங்கள் செறிந்த வருடம், வழக்கமாக நான் பயணிப்பது தனியாகத்தான், இலக்கில்லாது அலைவதும் உண்டு. இம்முறை வருடத்துவக்கத்திலேயே ஒரு பயணத்திட்டம் தயாரித்தோம். மணிமாறன், திருமாவளவன், நான் மூவரும் ஜனவரியிலேயே ஒரு பயணம் போனோம், அந்த பயணம் தந்த அனுபவம் அடுத்தடுத்து பல பயணங்களை திறந்தளித்தது. நவம்பர் வரை நண்பர்களுடன் ஐந்து பயணங்களும், தனிப்பட்ட முறையில் இரு பயணங்களும் மேற்கொண்டிருக்கிறேன். கோவில்கள், சமண குகை தலங்கள, வரலாற்று எச்சங்கள் இவைதான் எங்கள் செல்லிடங்கள்.

 பயணங்கள் அனைத்துமே ஒருநாளில் சென்று மீளும் தொலைவில் அமைபவை. காலை துவங்கி இரவு வீடு திரும்பி விட வேண்டும், ஒரு நாளுக்குள் செல்லத்தக்க இடங்களாக மூன்றிலிருந்து ஐந்து முக்கியமான இடங்களை பார்க்க வேண்டும், பயணத்தடம், வரலாற்று முக்கியத்துவம் குறித்த சிறு முன்தயாரிப்பு அவசியம். 

 இரண்டாவது பயணத்திலேயே கடலூர் சீனு அண்ணா இணைந்துவிட்டார், அவரது பயணத்தீவிரம் அனைவரையும் பற்றிக்கொள்வது. மேலதிகமாக ஒவ்வோர் பயணத்திலும் அவர் உரை ஒன்று நிகழ்த்துவதுண்டு. திட்டமிடாவிட்டாலும் அந்த உரைக்காக அனைவரும் விரும்புவோம் என்பதை அவரும் அறிவார். மென்மழையோடு சமணக்குகைத்தளம் ஒன்றில் சுழன்றேறும் காற்றோடு வரலாறும் பண்பாடும் பின்னிப் பெருகும் பேச்சை கற்பனை செய்துகொள்ளுங்கள், வாழ்வின் பெருந்தருணங்கள். அந்த உரைகளை மட்டுமே தேர்ந்த கட்டுரைகளாக எழுதிவிட முடியும். 

http://thamilpanan.blogspot.com/2021/02/1.html

http://thamilpanan.blogspot.com/2021/02/2.html

http://thamilpanan.blogspot.com/2021/07/blog-post.html

 ஜனவரியில் திருவாமாத்தூரிலிருந்து கூவாகம் வரை முதல்பயணம் போனோம், இதன் முதலிரு பகுதிகளை மட்டும் எழுதினேன். பின் கடலூர் சீனுவுடன் ஜனவரியிலேயே திருமாணிக்குழி,சேந்தமங்கலம்,எண்ணாயிரம் சென்றோம். பிப்ரவரியில் எனது நண்பன் திருமணத்திற்காக திருச்சி- துடையூர் சென்று வந்தேன், அங்கு முற்காலச்சோழர் கோவிலான விஷமங்களேஸ்வரர் கோவில் உள்ளது. பின் செப்டம்பர் மாதம் தளவானூர், கோணை பட்டாபி ராமர், செஞ்சி வெங்கடரமணர், திருநாதர் குன்று, சிங்கவரம் ஆலயம் சென்றுவந்தோம். இது பற்றி நான் ஒரு பயணக்குறிப்பு எழுதினேன். அக்டொபர் மாதம் சென்னை செந்தில் புதுவை வெண்முரசு கூட்டத்திற்கு வந்தார், இரவு நண்பர்கள் எனது வீட்டில் தங்குமாறு ஆயிற்று. அடுத்தநாள் எனது வீட்டின் அருகிருக்கும் திருவாண்டார்கோவில், திருபுவனை கோவில்களுக்கு சென்று வந்தோம். நவம்பரில் , ஆலகிராமம், கீழ்மாவிலங்கை, தாதாபுரம்,தொண்டூர்,வெடால் இங்கெல்லாம் சென்றோம் இந்த மூன்று பயணங்களை கடலூர் சீனு கட்டுரையாக எழுதியிருக்கிறார். இது இல்லாமல் செப்டம்பரில் நண்பர் சந்தோஷுடன் வேம்படித்தாளம் புதிர்நிலை, விஜயமங்கலம் சமண கோவில் இங்கு சென்றேன். 

https://www.jeyamohan.in/150009/

https://www.jeyamohan.in/157713/

https://www.jeyamohan.in/159462/


 எழுத்தாளர் வளவ துரையன் எழுபது வயதிலும் தொடர்ந்து இலக்கியத்திற்காக உழைப்பவர். பேச்சு, எழுத்து, பதிப்பு என்ற மூன்று தளத்திலும் மரபு , நவீனம் என்ற இரண்டு வகைமையிலும் தொடர்ந்து பங்களித்து வருபவர். அவர் குறித்த ஆவணபடத்தை நண்பர் சந்தோஷுடன் தயாரித்தேன். ஒரு நேர்காணல் என்ற வடிவில் இருந்த இந்த படைப்பு பேராசிரியர் நாகராஜன் உதவியாலும் கடலூர் சீனுவின் வழிகாட்டுதலாலும்தான் 'நீர்வழிப்படும் புணை' ஆவணப்படமாக வளர்ந்தது. படத்தின் ஒளிப்பதிவு , படத்தொகுப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 
தன் ஜென்ம விரோதிகளை விடவும் இந்தப்படத்திற்காக என்னால் மேலதிகம் துன்பப்படுத்தப்பட்டிருக்கும் சந்தோஷ் இதன் அனைத்து தொழில்நுட்ப பங்களிப்புகளுக்கும் ஒரே பொறுப்பாளர். கோவிட் ஊரடங்கு காலத்திலும், இதற்காக மூத்த எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பாவண்ணன் ஆகியோர் தங்களது காணொளிப்பதிவை அனுப்பி உதவினார்கள். அவர்களது பெருந்தன்மை இப்போதும் திகைக்கச்செய்வதாக இருக்கிறது. இந்த ஆவணப்பட வெளியீடு மிக எளிய நிகழ்வாக இணையக்கூடுகையில் 20.06.2021 அன்று நிகழ்ந்தது. பேராசிரியர் (தற்போது புதுவை பொறியியல் கல்லூரி பாடத்திட்ட தலைவருமான) நாகராஜன், உங்களது அறுபது வயதில் நீங்கள் நினைத்துப்பார்க்கையில் நீங்கள் செய்த அரும்செயல்களில் ஒன்றாக இது ஒன்று இருக்கும் தாமரை என்றார். 

https://www.youtube.com/watch?v=wAYDJvhFcCQ&t=3701s

 ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நூல் தொகையில் விவாதக்கூடுகை நான்கு வருடங்களாக புதுச்சேரியில் நடந்து வருகிறது. வருடத்திற்கொரு நாவல் வீதம், சென்ற 2020 ம் வருடம் நீலம் நாவல் பேசப்பட்டது. நீலத்திற்கான பொறுப்பாளர் கடலூர் சீனு அண்ணா. ஒவ்வொரு பகுதியையும் அவர் அகப்பயணமாக எடுத்துச்செல்ல, நானோ எதிர் திசையில் புறவயமாக ராதை எனும் வடிவத்தை வளர்த்துக்கொண்ட வந்தேன் 2021 துவக்கத்தில் இதன் நிறைவுப்பகுதி பேசப்பட்டது. அங்கு ராதை எனும் காதலுருவம் புராண காலத்தில் வளர்ந்து எப்படி தமிழகம் வரை நிலை பெற்றதென்ற சித்திரத்தை நான் பேசினேன், இதில் நீளா தேவி, நப்பின்னை, ராதை இந்த மூன்று பாத்திரங்களுக்குமான பிணைப்பை தொட்டுக்காட்டினேன். சங்ககால பாடல்கள், காகா சத்த சஈ பாடல்களில் இருந்து திவ்ய பிரபந்தம்,அஷ்டபதி , தியாகராஜர், ஊத்துக்காடு பாடல்கள் வரை இந்த உணர்வுகளை தொகுத்தளிக்க முயன்றேன். என்னளவில் எனது மகத்தான முயற்சிகளில் ஒன்று இது. இதன் தொடர்ச்சியாகவே அடுத்த கூடுகையில் பிரயாகை நாவலின் முதற்பகுதியை பேசுகையில் திரௌபதி வழிபாடு, அவள் கடவுளாக நிலை கொண்டது குறித்து பேசினேன். 

https://www.jeyamohan.in/144951/

 நண்பர் மணிமாறனின் இலக்கிய செயல்பாடுகளில் ஒரு சிறந்த முயற்சி, சிறுகதைக்கூடல் என்னும் வாராந்திர இணையக்கூடுகை. சென்ற வருடம் துவங்கி இந்த வருடம் அது இன்னும் சிறப்பாக வளர்ந்து வருகிறது, ஆசிரியர் ஜெயமோகனின் புனைவுக்களியாட்டு சிறுகதைகளில் ஆரம்பித்த நிகழ்வில் தற்போது அனைத்து கிளாசிக் சிறுகதைகள் மற்றும் இளம் படைப்பாளிகளின் கதைகளும் விவாதிக்கப்படுகிறது. உச்சமாக சென்ற கூடுகையில் எழுத்தாளர்கள் கிரிதரன் மற்றும் அனோஜன் கலந்து கொண்டனர். 

 ஈதன்றியும் எழுத்தாளர் வளவ துரையனின் மீண்டும் ஒரு தொடக்கம், எழுத்தாளர் ராம் தங்கத்தின் ராஜவனம் ஆகிய நூல்களுக்கு சிறு மதிப்புரை எழுதியுள்ளேன். எழுத்து மட்டும் இன்னும் தூரத்திலேயே உள்ளது.

 இந்தக்குறிப்பு என்றோ ஒருநாள் திரும்பிப்பார்க்கப்படும்போது இன் நினைவு கிளர்த்தி நண்பர்களை, முகங்களை, உணர்வுகளை பெருகச்செய்யும்.


எனக்குப் பிடித்த ஆண்டாளின்  வரிகள் இவை 


....கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை..........

Comments

  1. கடந்த ஆண்டின் செயல்கள் போற்றக்கூடியவை. மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடியவை. சிங்கம் காட்டில் சற்று தொலைவு வந்தவுடன் நின்று தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்குமாம். இதுவே அரிமாநோக்கு. உன் அரிமாநோக்கு தொடரட்டும்
    இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார். இதை அர்த்தமாக்கிக்கொள்ள உழைப்பேன்.

      Delete

Post a Comment