புத்தகக் கண்காட்சி - 2022 "அறியப்படாத பதிப்பகங்களும், புத்தக அடைவும்" ஒரு துரிதப் பார்வை

 தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பயனளிக்கும் ஆண்டிமடம் பார்முலா ஒன்றுள்ளது. நானும் விஷ்ணுவும்  ஞாயிறு காலை பத்து மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு செல்வதாக திட்டமிட்டு, மிகச்சரியாக அதேநாள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டோம். பார்முலாவை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்புகொள்ளலாம், சேவை வரிக்குட்பட்ட உதவி கட்டாயம் உண்டு. 

 


விஷ்ணு  எந்தெந்த புத்தக அரங்குகளுக்கு செல்ல வேண்டும் என்ற சிறிய பட்டியல் தயாரித்திருந்தார், கூடவே எந்தப்பக்கம் திரும்பக்கூடாது  என்ற போதமும் தலைவருக்கு இருந்தது. நற்றிணை தான் முதலில் என்று சொல்லியிருந்தார்,  லயன் காமிக்ஸ் அரங்கு இல்லாத சோகத்தில்  நானும் அதை ஒத்துக்கொண்டேன். நற்றிணையில் அசோகமித்திரன் காம்போ ஒன்று வைத்திருந்தார்கள், டீலிங் பிடித்திருந்ததால் உடனே எடுத்துக்கொண்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த ப சிங்காரம் காம்போவான புயலிலே ஒரு எம் எஸ் தோனி மற்றும் கடலுக்கு அப்பால் இவற்றில் ஒரு நாவல் இல்லை. அங்கிருந்து அடுத்த சுற்றில் திரும்புகையில் விஷ்ணுவிடம் இவர்தான் சமஸ் என்றேன் , கடந்து சென்ற மனிதர் திரும்பி கைகுலுக்கி விட்டு சென்றார். 


இரண்டாவது சுற்றிலேயே கடலூர் சீனுவை நடுவீரப்பட்டு இதயத்துல்லா மற்றும் குழாமுடன் கண்டேன், ஊழிற் பெருவலி யாவுள. சிறுவயதில் அபிராமி தியேட்டரில் தெரிந்த அண்ணன் ஒருவரிடம் மாட்டிக்கொண்ட உணர்வு , அத்திரையரங்கு திண்டுக்கல் நகரின் பக்திப்பரவச அடையாளம். அண்ணனும் நோக்கினான் , நிலத்தைத்தான்.     


புத்தகக் கண்காட்சியில் மட்டுமே சிக்கக்கூடிய சாகித்திய அகாடமி, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், தஞ்சை சரஸ்வதி மகால் பதிப்பகம், சேகர் பதிப்பகம் இங்கெல்லாம் தான் நேரம் செலவழித்தோம். மற்றைய பதிப்பக புத்தகங்களை பிற சமயங்களிலும் அணுக முடிகிறது. அரங்குகளில் தொ பரமசிவனின் பல புத்தங்கங்கள் மறுபதிப்பு பெற்றிருந்ததை பார்க்க முடிந்தது, வீ அரசின் புதுமைப்பித்தன் கதைகளுக்கும் நிறைய வரவேற்பு. பொன்னியின் செல்வன் எழுதுகையில் நிஜமாகவே கல்கி என்ன மனதில் வைத்திருந்தாரோ தெரியாது. மனிதருக்கு ஓரளவுக்கு ஹாஸ்யம் பிடிகிட்டும், இப்போது புத்தகக்கண்காட்சியை வந்து பார்த்தால் ஒருவேளை வெடித்துச் சிரிக்கக்கூடும்.


 வரும்போது யாவரும் அரங்கில் கரிகாலன் தென்பட்டார், போகும்போது காலன் சடாரென இளைத்துவிட்டது போல ஒரு பதற்றம் ஏற்பட்டு, கண்ணாடியை கழற்றி அது மனோ அரசு தான் என உறுதி செய்துகொண்டேன். மனோவின் பழைய இணையரான ரமேஷ் ரக்சனை  அருகே காணாதது எனக்கு அந்த மயக்கத்தை  ஏற்படுத்தியிருக்கலாம். நூல்வனம் அரங்கில் இனியன் நின்றிருந்தான், உற்சாகப் பதுமை.  சிகப்பு சட்டை அணிந்து வனம் பதிப்பு அருகிலிருந்த மரப்பாச்சி பொம்மைக்கும் தனக்கும் உள்ள வேறுபாட்டை உறுதி செய்தபடி புக் பார் சில்ட்ரனுக்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான், அழகன். 


தமிழினி முகப்பில் கண்மணி குணசேகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். வேறொரு அரங்கில் நீதியரசர் சந்துருவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். உயிர்மையில் மட்டும் மனுஷ் உடன் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு மட்டும் தீராத இளமை விதிக்கப்பட்டிருக்கிறது போல. மிஸ் யூவிற்கு நிற்கும் வரிசை சில சமயம் டிக்கெட் கவுண்டரில் உள்ளதை விட பெரிது என்கிறார்கள். ஆம் நாலைந்து டிக்கெட் கவுண்டர்கள் உண்டுதான். நர்மதா பதிப்பகத்தை எங்கே காணோமென்று விஷ்ணு தேடிக்கொண்டிருந்தார். நேஷனல் புக் டிரஸ்ட் எப்போதும் எனக்கு பிடித்தமானது, சமயங்களில் நிறைய புத்தகங்கள் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஸ்டாக் வைத்துக்கொள்வது உண்டு. இம்முறையும் கொஞ்சம் வாங்கினேன், கவினுக்காக. அவன் புத்தகங்களை கையாளும் முறைகள் தனிப்பட்டவை. தவழும்போது கடித்துப்பார்த்தான், மிக விரைவிலே`யே கிழித்துப் பறக்க விட்டான், இப்போது கையில் கிடைத்தால் சீரியஸாக பேனாவைக் கொண்டு கிறுக்குகிறான், சமயத்தில் நேராகக்குத்தி இறக்குவதும் உண்டு,  எழுத்தை ஆழம் பார்க்கிறான் என்று மகிழ்ச்சியடைய முடிவதில்லை. 


நீண்ட பொழுதாக, விட்டு விட்டு தவில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது, தமிழக அரசின் இல்லம் தேடிக்கல்வி அரங்கில் குழந்தைகளுக்காக போட்டிகள் வைத்துக்கொண்டிருந்தார்கள், உற்சாகக்கூவல்கள். கிளம்பும் முன்பு தும்பி அரங்கு சென்று ஸ்டாலினையும், கார்த்தியையும் பார்த்து வந்தேன். நான் எப்போதும் தயங்காமல் பேசக்கூடியதும்  ஸ்டாலினிடம் மட்டும் தான். விஷ்ணுவுக்கு காலச்சுவடு உள்ளே நுழைந்ததும் பரவச நிலை கைகூடியது. 'புத்தகங்களை நோக்கி பாயும் விஷ்ணு' என்ற கேப்ஷனை போடுமாறும் கேட்டுக்கொண்டார், அந்தப்படத்தைப் போயா.. என்ற என் குரலையும் மதிப்பதாக இல்லை.நாம் குற்றுயிரும் குலையுயிருமாக தான் வெளியே அனுப்பப்படுவோம் என்பதை உணர்த்தும் டிஸ்க்ளைமர் இல்லையா அந்தப் படத்தலைப்பு, அந்த மட்டிலும் இயக்குனர் அறிவாளி.  கண்ணனை பார்க்கையில் கிட்டத்தட்ட சுரா மாதிரியே இருக்காருல்ல, என்று மேலும் ஒரு விம்மல். சுந்தர ராமசாமியை மிஸ் செய்பவர்களும் இருக்கிறார்கள் தானே. இந்த முறை என்னை மிகவும் கவர்ந்த அரங்கு புதுப்புனல், ஆவலை தூண்டக்கூடிய வகையில் நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள், கோவை ஞானியின் புத்தங்கங்கள் இருந்தன. நண்பர்கள் இந்த அரங்கிற்குள் அவசியம் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்வேன்.


வெளியே வருகையில் மீண்டும் சீனுவை செந்தில் ஜெகந்நாதனுடன் கண்டு விடைபெற்றேன். இம்முறையும் கண்காட்சிக்கு சென்றாகிவிட்டது. வருடங்கள் கூட கூட புத்தகங்களை தெரிவு செய்யும் புத்தி கொஞ்சமாகவேனும் வருகிறது. நம்முடைய எல்லைகளை உணர நாம் கொடுக்கும் கால அவகாசத்தை தான்  அனுபவ அறிவு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் போல. இதோ முதுகுப் பையைச் சுமந்துகொண்டு நானும் விஷ்ணும் இனிய சோர்வுடன் இலக்கிய வம்புகளை பேசிக்கொண்டே கிண்டி பேருந்து நிலையத்திற்கு  சென்றுகொண்டிருக்கிறோம். 








தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

25.02.2022 

Comments