கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் கப்பியாம்புலியூருக்கு முன்பு அந்த தாமரைக்குளம் இருக்கிறது, ஒரு சிறு குழந்தை ஒருக்களித்து படுப்பது போன்ற வடிவில். எங்கே புரண்டு விழுந்து விடுமோ என அஞ்சி மூன்று பக்கங்களிலும் மூன்று சாமிகள் அணை கட்டியிருக்கின்றன. குளத்தின் ஒருபுரம் அய்யனார் காத்தாட உட்கார்ந்திருந்தார். மறுபுறம் பெரியாண்டவருக்கு சிமெண்டுக் களத்தோடு ஒரு வழிபாட்டு நிலை . பெரியாண்டவர் ஜடாமகுடமும் மானும் மழுவும் கொண்டு கல்லாய் நின்றிருந்தார். நல்லவேளை அய்யனார் இன்னும் கூத்துக்கலைஞரின் கிரீடத்தோடுதான் அமர்ந்திருக்கிறார். கொஞ்சம் பின்னே குளக்கரையில் வீரனுக்கும் ஒரு சின்ன கோயில்.பெரியாண்டவரை களத்தில் படுத்திருக்கும் கோலத்தில் மண் உருவம் செய்து வழிபாடு செய்வார்களாக இருக்கும். மூன்றாக கல் நாட்டி கும்பிடுவதுமுண்டு, எப்படியும் அதில் நடுக்கல்லான பெரியாண்டவர் சிவாம்சம் கொண்டவர், அரவானும் பெரியாண்டவரும், இருசப்பனும், அங்காளியும், பொறையாத்தம்மனும் இந்த நிலப்பகுதிக்கான சாமிகள்.
வடதமிழ்நாட்டின் வெவ்வேறு 'கிடந்த கோல' நாட்டார் தெய்வ வடிவங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் - ஏனைய இடங்களில் இப்படி சிலை அமைப்பது மங்கலமாக கருதப்படாது. மயானக்கொள்ளைக்கு அங்காளியை இப்படி வழிபடுவதுண்டு, அன்றியும் வேறுசில பெண்சாமிகள். திரௌபதை அம்மன் கோவில் பாரதக்களத்தில் துரியோதனனை இப்படி அமைக்கிறார்கள். பின் பெரியாண்டவர். இதுவன்றி மேற்கே மாசாணி அம்மனுக்கு இப்படி கிடப்பு நிலை வழிபாடு இருக்கிறது. பெருந்தெய்வங்களான விஷ்ணுவும், சுருட்டப்பள்ளி சிவனும் பின்னே புத்தரும் கொண்டிருக்கும் சயன கோலத்தை நாம் சிறுதெய்வ வழிபாட்டோடு ஒப்பிட ஏலாது.
மறந்தாற்போல் குடியரசு தினத்துக்கு மிகுந்த கருணையோடு கோவில்களை அடைக்காது விட்டுவிட்டார்கள், ஆகவே திருமா அண்ணனுடைய இருசக்கர வாகனத்தில் ஒரு சிறுபயணம் சென்றோம். கோலியனூர் கூட்(டு)ரோட்டில் திரும்பி, திண்டிவனம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் கப்பியாம்புலியூருக்கு கொஞ்சம் முன்பு இந்த குளத்தையும் சாமிகளையும் பார்த்து வண்டியை ஓரங்கட்டினோம். பின்னே கப்பியாம்புலியூர் ஏரியை ஒட்டிய ரோட்டில் திரும்பினோம். அழகிய ஏரி, நீரில் நடக்கும் பறவைகள், பின்னணியில் விடியும் வானம்,தான் அழகியென்ற ஆணவத்தில் தளும்பாமல் அடக்கமாகத்தான் இருந்தாள் அவள். தொண்டை நாடு ஏரிகளால் பொலிவது..
முன்பு நண்பர் ரமேஷ் முத்தையன், முகநூலில் அழகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி படத்தை பதிவிட்டிருந்தார். ரமேஷ் சிறந்த புகைப்படக்காரர் தான், ஆனால் அதையும் தாண்டி அந்த அழகிய கரிய சிலையின் துல்லியம், அய்யோ, அதன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அளவெடுத்து குறித்துக்கொள்ளலாம் என்பது போல இருந்தது. கருமைக்கு மட்டுமே பாத்தியப்பட்ட அழகொளி, அந்த புன்னகை மனதை படுத்தி எடுத்தது. ஆகவே நேரில் காண சிந்தாமணி என்னும் ஊரிலுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வண்டியைக் கட்டினோம்.
குலோத்துங்க சோளீஸ்வரமுடைய மகாதேவர் ராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுத் தீனசிந்தாமணி நல்லூர் என்பது அக்கோவிலின் கல்வெட்டிலுள்ள வரி. முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்ரம சோழன் இந்த கோவிலை எடுப்பித்திருக்கிறார். அவரது தந்தையின் பெயரால் கட்டிய 'கைலாசம் குலோத்துங்க சோளீஸ்வரமுடைய மகாதேவர்' கோவில் தற்போது வைத்தீஸ்வரன் கோவில் என்று வழங்கப்பெறுகிறது. விக்ரம சோழனின் தாயின் பெயரான தீன சிந்தாமணியின் பெயரை இந்த ஊருக்கு வைத்திருக்கிறார். தற்போது ஊர் சிந்தாமணி என்று அழைக்கப்படுகிறது.ஆசிரியர்கள் பலவாறாக தீன சிந்தாமணி அல்லது தின சிந்தாமணி என்று எழுதுவர் எப்படியாயினும் இது விருதுப்பெயர். இந்த அரசியின் பெயரிலேயே அமைந்த 'தின சிந்தாமணி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயர் , செய்யாறு தாலுகாவிலுள்ள பிரம்மதேசத்துக்கும் , சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலுக்கும் உள்ளது என்கிறார்கள். இந்தத்தகவல் எனக்கு உறுதியாகத்தெரியவில்லை. ரா பி சேதுப்பிள்ளை முதலியோர் வட ஆர்க்காட்டில் உள்ள கடைக்கோட்டுப் பிரம தேசம் என இந்த சதுர்வேதி மங்கலத்தை குறிக்கிறார்கள்.
சோழ அரசகுடும்பத்தினர் ஆலயங்கள் கட்டுகையில், தானமாக நிலங்களை வழங்குகையில் தங்கள் பெயரோடு இணைத்து அவற்றிற்கு பெயரிடும் மரபு உண்டு. அதுபோல காலப்போக்கில் அடுத்துவரும் அரசர்கள் அவற்றை தங்கள் பெயரோடு இணைத்து மாற்றம் செய்வதையும் சில இடங்களில் பார்க்க முடிகிறது, திண்டிவனம் மரக்காணம் தடத்திற்கு அருகிலுள்ள முன்னூர் கல்வெட்டில் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியின்போது “நகா்” என்ற தீனசிந்தாமணி நல்லூா் “குலோத்துங்க சோழநல்லூா்” என்று பெயா் மாற்றம் செய்யப்பட்ட என்னும் செய்தி உள்ளது. சோழ அரசியான திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் இன்று திருபுவனை என்று அழைக்கப்படுகிறது. சோழமாதேவி, வளையமாதேவி (கீழ்பாதி), வானமாதேவி என்ற பெயர்களிலும் ஊர்கள் உள்ளது. அப்படியாகவே விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் தடத்தில் 5 கி.மீ. தொலைவில், முண்டியம்பாக்கத்திற்கு அருகே உள்ளது இந்த சிந்தாமணி என்னும் சிறிய ஊர்.
தீனசிந்தாமணிக்கு மற்றோரு பெயரும் உண்டு அது மதுராந்தகி. மதுராந்தகி முதல் குலோத்துங்கனின் பட்டத்தரசியாக இருந்தவர். வரலாற்று பிரியர்களுக்கு குலோத்துங்க சோழன் பட்டம் பெற்ற கதை தெரியும், சோழநாட்டில் நேரடியான வாரிசு இல்லாத காலத்தில், ராஜேந்திர சோழனின் மகள் வழியே கிளைத்த வம்சத்திலிருந்து, மேலைசாளுக்கிய நாட்டின் வேங்கி இளவரசனான குலோத்துங்கன் சோழநாட்டிற்கு வந்து முடிசூடிக்கொள்கிறார். நேரடி தமிழ் அரசர்கள் அற்ற குழப்பமான சூழலில் மகள் வழி வந்த வேற்று நாட்டிலுள்ள இளவரசன் பாட்டனின் நாட்டில் முடிசூடிக்கொள்வது அன்றைய சூழலில் எந்த அளவுக்கு ஆதரிக்கப்பட்டது என்று அறியக்கூடவில்லை ஆனால், இந்த முடிவு சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆயுளை இன்னும் ஒரு நூற்றாண்டு நீட்டித்தது. குலோத்துங்கனால் ஆட்சி, கோவிற் கலை, இலக்கியம் என்று அனைத்துமே மறுமலர்ச்சி கண்டன, சோழ பேரரசின் நீண்ட கால ஆட்சியாளர்களுள் குலோத்துங்கனும் ஒருவர். இதில் ஆச்சரியமான விஷயம், குலோத்துங்கனின் மனைவியான மதுராந்தகி நேரடியாகவே சோழ இளவரசி, குலோத்துங்கனின் அம்மான் இரண்டாம் ராஜேந்திர சோழனின் பெண். அவள் சோழநாட்டிலேயே பிறந்தவள், அவளை மணந்தது குலோத்துங்கனின் வாரிசுரிமையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மதுராந்தகி குலோத்துங்கனின் இருபத்தியாறாம் ஆட்சியாண்டில் இறந்து விடுகிறார், பட்டத்து அரசியாகவே. இதன்பின் கலிங்கத்துப்பரணியில் பாடப்பட்ட தியாகவல்லி பட்டத்தரசியாகிறார், ஈதன்றியும் குலோத்துங்கனுக்கு ஏழிசைவல்லபி என்றொரு அரசியுண்டு. ஆனால் மதுராந்தகியின் வயிற்றில் பிறந்த விக்ரம சோழன் தான் அடுத்த சோழ அரசராகிறார். வரலாற்று ஆசிரியர்களிடம் விக்கிரமனை கேட்டால், அவனா, மிகவும் அமைதியான மனிதன். சண்டையே போட்டதில்லை என்று கடந்து போய்விடுகிறார்கள்.
சிறு சிறு தகவல்களாக நாமறியும் மதுராந்தகியின் வாழ்க்கைச்செய்திகள், அந்த வரலாற்றுப்பெண் பாத்திரம் மீது ஒரு வினோதமான ஈர்ப்பை உருவாக்குகிறது. நீண்ட சோழ வரலாற்றில் அவள் ஒரு இணைப்புச்சொல். மதுராந்தகி பற்றி தமிழில் இரு நாவல்கள் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் மாயாவியின் மதுராந்தகியின் காதல், ஜெகசிற்பியான் எழுதிய மதுராந்தகி, இவையன்றியும் வேறு கதைகளும் நாவல்களும் இருக்கக்கூடும். பாலகுமாரன் இந்த பெண்ணை புதினப்படுத்தியிருக்கிறாரா என்றும் அறியேன்.
கருவறை மற்றும் அர்த்த மண்டபம் இவை சோழர்காலக் கலை , தற்போது அதை சுற்றிலும் சுப்பிரமணியர், தையல்நாயகி, அங்காரகனுக்கு சன்னதி அமைத்து இது வைத்தீஸ்வரன் கோவிலாகியிருக்கிறது. கனவில் பக்தர் ஒருவரிடம் அம்மன் வந்து வழிபாடு செய்யுமாறு கூறியதால் அம்மனுக்கு பாதம் அமைத்து தனிச்சன்னதியும் கட்டியதாக ஊர்மக்கள் சொல்கிறார்கள். இறைவனுக்கு எதிரே சிறிய நந்திமண்டபம். கருவறைக்கு வெளியே உள்ள விநாயகர் சிலைக்குக் கீழே கைகூப்பிய உருவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இது பிற்காலத்தியதாக இருக்கலாம்.
இந்தக்கோவிலின் தனிச்சிறப்பு இங்குள்ள கோட்டத்து சிற்பங்கள், பிரகாரத்தை வலம் வருகையில் கருவறைக்கு வெளியே மூன்றும் அர்த்தமண்டபத்தின் வெளிப்புறச்சுவற்றில் ஆறுமாக மொத்தம் ஒன்பது சிற்பங்கள் உள்ளது. அவற்றுள் ஆலமர் செல்வனின் சிலை மட்டும் மிகவும் சேதமானதால் வேறு சிலை அமைத்து வழிபடுகிறார்கள், ஏனைய எட்டு சிற்பங்களும் சோழர் கலை மேன்மையை பறைசாற்றுபவை.
நான்கரை அடி உயரமுள்ள கருங்கல் சிலைகள், செதுக்கி சுவற்றோடு வைக்கப்பட்டுள்ளவை. இயல்பான சோழர் கோவிலமைப்பு, கருவறைக்கு வெளியேயுள்ள நான்கு அழகிய தூண்களை, கல்வெட்டுகளையும், பூதவரியையும் தாண்டி வேறு எந்த சிற்பங்களும் அமைக்கப்படவில்லை, வேலைப்பாடுகள் இல்லாத மகர தோரணங்கள் கூட மிக இயல்பானவை. இந்த எளிய அமைப்பில் நம்மை ஒருகணம் திகைத்து நின்றுவிடச்செய்பவை இந்த சிலைகள்.
வலமாக வந்தால், பிட்சாடனர், விநாயகர், ஊர்த்துவ தாண்டவர் மூவரும் ஒரு வரிசையில் உள்ளார்கள், அடுத்து புதிய தட்சிணாமூர்த்தி சிலை, கருவறைக்கு நேர்பின்னே லிங்கோத்பவர், திரும்பினால் கோமுகிக்கு அருகில் பிரம்மா, சண்டிகேஸ்வரரை அடுத்து முதல் மூவருக்கு நேர் எதிரே உமா ஆலிங்கனர், துர்க்கை, பைரவர் ஆகிய மூர்த்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில், பைரவரை அர்த்தமண்டப கோட்டத்தில் அமைக்கும் வழக்கம் இல்லை. அதுபோல ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி பெரும்பாலும் தூண் சிற்பமாகத்தான் தமிழகம் முழுவதும் காட்சியளிப்பார், திருவாலங்காட்டிலுள்ள உலோகத்திருமேனி தனித்துவம் மிக்க ஒன்று. இவையன்றி கோட்டத்தில் வடிக்கப்பட்டுள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி இவர் மட்டுமே.
நெடியோன் என்ற பெயர் நம் மரபில் திருமாலுக்கு உரியது, விநாயகர் மற்றும் லிங்கோத்பவர் தவிர்த்து இங்குள்ள மற்ற ஆறு சிற்பங்களும் முதல் பார்வையிலேயே, எவ்வளவு உயரம் என்ற வியப்பைத் தருகின்றன. நான்கரை அடி உயரச்சிலைகளில் இந்த உணர்ச்சியை ஏற்படுத்திய சிற்பிகள், எப்படி இந்த எண்ணத்தை அடைந்திருப்பார்கள் என்று யோசித்து முடியவில்லை. முதல் சிற்பம் வட்டவடிவ ஜடாபாரத்தோடு நெடிது நடக்கும் பிட்சாடனர். இந்த நடக்கும் பாவனையை சிலை அடைய முகம் ஒரு பாகை தான் திரும்பியுள்ளது, இரு பாதங்களில் ஒன்று ஊன்றியும் மற்றது சற்றே உயர்ந்தும் காட்டப்பட்டுள்ளது. பலி தேறும் முன்கை மட்டும் சிதைந்துள்ளது. இடைக்கச்சையாகவுள்ள நாகத்தின் சுருள்பிரி வளைவு, உடுக்கையை கையில் ஏந்தியுள்ள எழில், பின்தோளில் சாற்றியுள்ள சாமரக்கோலின் முனை, கழுத்தணிகள், காலணி, முழங்காலில் கட்டிய மணி , பற்றிச்சுழலும் நாகம் யாவும் இந்த திகம்பரனின் அழகை நம் காதில் கிளர்ச்சியோடு சொல்லிச்செல்வன. அந்த முழங்கால்கள் கண்ணைமூடித் தொடுபவனுக்கு கல்லெனத் தெரியப்போவதில்லை. ஆம், அவை இன்னும் உடல்பிடிக்காத ஒரு விடலைப்பையனின் வடிவமைப்பை உடையன, ஆடையற்றதாலேயே கள்ளமற்றன. கீழைச்சிற்பவியலில் இந்தக்கலை மரபு எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
அடுத்து நிற்பது, அத்தனை மெலிய அப்பனுக்கு பிறந்த தொப்பைப் பையன். அவன் நாபியை மறைக்க சர்ப்பம் படாத பாடுபடுகிறது. அருளும் கையும், முழுத்தந்தமும், துதிக்கை நுனியும் சிதைவுற்றிருக்கின்றன. சிறிய களிற்றுக் கண்களும், அழகிய செவிகளும், செறிவான தலையணியும், அதன் மேல் குடையும் சாமரங்களும், கைத்தலக்கனியும்,ஒரு பறவையின் கழுத்துபோல வளைந்து நிற்கும் பாசமும், இடைக்கச்சையும் காட்சிக்கினியன. அந்தக்கண்களை பார்த்தபோது, அதுவும் என்னைப் பார்த்தது , வெகுநேரம் இமைக்காதது கண்டு கொஞ்சம் அதிர்ந்து விலகிப்போனேன்.
அடுத்து லிங்கோத்பவர், இலக்கணப்படி அடியும் முடியும் தெரியாத நெருப்புத்தம்பத்தின் இருபுறமும் பிரமனும் நாரணனும், மேலும் கீழும் தேடுகின்றனர். மலர்முடியை நோக்கி பறக்கிறார் படைப்பிறைவன், வராக முகத்தோடு விஷ்ணு கைதொழுது பாதாளம் நோக்கிச் செல்கிறார்.
கோமுகிக்கு அருகில் பிரம்மா, அமைதி நிறைந்த முகம். கண்ணுக்குத் தெரியும் மூன்று முகங்களும் வெவ்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தன. காதார் குழைகளும், மார்பில் சற்று புரண்டு திரும்பும் உத்தரீயமும் சிற்பத்தின் அழகுக்கு பதப்பருக்கைகள்.
முற்றாமுலை நங்கையின் வேயுறு தோளணைத்தபடி அப்பன் நிற்குமிடம் அடுத்து வருவது. உமையும் அவள் கைச்சிறு பூவும் எதிரெதிர் திசையில் ஒசிந்து நிற்பன. ஈசனின் இடங்கைமான் சடை மேலிருக்கும் மதிக்கதிர் மேயத் தாவுகிறது. உமையின் இடையாடை ஒருகாலில் உயர்ந்து மறுகாலில் தாழ நிற்கிறது, சின்னஞ்சிறு பெண். கழுத்தின் மேலேயே ஒருஅணி நிற்கிறது, மங்களம் கொண்ட திருப்பூட்டாக இருக்கலாம். ஈசனின் மேலிரு கரங்களின் விரல்கள் ஏனைய சிற்பங்களிலிருந்து மாறுபடுகிறது, மோதிரவிரலும் கட்டைவிரல் மட்டும் மடங்கி மற்ற மூன்று விரல்களும் நீண்டிருக்கின்றன, இந்த சிவபெருமான் வார்ப்புச்சிலைக்கான நிலைபெற்றுவிட்ட உருவத்தோடு இருக்கிறார், புதுக்கற்பனையாக ஏதும் சொல்லமுடியவில்லை. சிவன் மற்றும் பிரமனின் சடையின் உச்சியில் படுக்கை வசத்தில் சடைப்பிரி காட்டப்பட்டுள்ளது.
அடுத்து துர்க்கையும், பைரவரும் இருக்கிறார்கள். அஷ்டமி முடிந்திருந்த பொழுதாகையால் அவர்கள் முழுவதும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். மத்தம் மதி அரவும் கொண்ட சுடர்முடியுடன் வளைஎயிற்று பைரவரின் மேலிரு கரங்களில் டமருகக்கை நம்மை பார்த்திருக்க, பாசம் கொண்ட கை திரும்பியுள்ளது. அப்படி இருந்தால்தான் சிற்பி உடுக்கை, பாசம் இரண்டையும் அழகுற வடிக்க முடியும் இல்லையா. எப்போதும் பைரவருக்கு அழகு ஒரு தோளிலிருந்து சரிந்து முழங்கால் தாண்டி நீளும் தலை மாலைதான்.
புகைப்படத்தில் நான்கண்ட எழிலார்ந்த துர்க்கையை, அலங்காரத்துக்கு நடுவே கண்டுபிடிக்க முடியவில்லை.
வரிசையாக சொன்னதில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை கடைசியாக சொல்லலாம் என்று எடுத்து வைத்துக்கொண்டேன். சில நாட்களாக நண்பர்களுடன் இணைந்து கம்பராமாயணம் வாசித்து வருகிறேன். சங்கப்பாடல்களிலும் பக்தி இலக்கியத்திலும், நவீனக்கவிதைகளிலும் இல்லாத ஓரழகு காவியத்தில் இருக்கிறது. அது பத்தாயிரம் பாடல்கள் எழுதுபவனின் கரங்களில் மட்டும் குடியேறக்கூடியது. அணிகளும், கற்பனையும், அழகியலும் விண்முட்டும் உச்சத்தை அடையும் பாடல்கள் காவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும். அதுபோலவே சிற்ப அழகியலின் உச்சம் இங்கிருக்கும் ஊர்த்துவ தாண்டவர்.
ஆடும் சிவன் எப்போதும் இங்கிருக்கும் பெரும்படிமம். கொடுகொட்டி நடம் புரியும் ஈசனை சிலம்பு பேசுகிறது. பிற்பாடு சோழர் காலத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட ஆனந்த தாண்டவ மூர்த்தி ஆடலின் ஒரு வடிவை மட்டும் நிலைப்படுத்தியது. இது சிதம்பரம் நடராஜரின் புகழால் நேர்ந்த கலை விபத்தாகவும் இருக்கலாம். பின் அந்த ஆனந்த நடனமிடும் வடிவம் வார்ப்புருக்களின் மூலமாக, தத்துவ இணைப்பின் மூலமாக உலகெங்கும் சிற்பக்கலைக்கு ஒருஅடையாளமாக மாறியது. உலகின் எந்த மியூசியத்திலும் ஒரு சோழர்கால நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார். பரதத்தின் நூற்றி எட்டு கரணங்களும் ஆடும் ஈசனுக்கு முன்னும் சிவன் வெவ்வேறு வடிவங்களில் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கிராத மூர்த்தியும் அர்ச்சுனனும் அம்பெடுப்பது நடனத்தின் ஒரு அசைவு போலத்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. ஈசனின் வீரச்செயல்களை காட்டும் பல சிலைகள், வார்ப்புருக்கள் ஒரு நடனத்தின் நிலையெனவே வைக்கப்பட்டிருக்கின்றன. கதைகள் வாய்வழியாக பாடலாக பரவியது போல கதையோடு கூடிய நடனமான கூத்து இந்த நாடு முழுவதும் பலகதைகளை ஏற்றிச்செல்லும் ஊர்தியாகவும் இருந்திருக்கிறது. இந்த நடனத்திலிருந்து ஓவியர்களும் சிற்பிகளும் தங்கள் கலைக்கான உருவங்களை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். கூத்தர்களின் சிலைகளில்லாத பழங்கோவில்கள் இல்லை.
ஈசனின் ஓவியங்களில் பனைமலையில் ஆடும் சிவனின் பல்லவர் கால ஓவியம் இன்று முழுதாக காண இயலவில்லை. ஆனால் அதன் எஞ்சிய பகுதிகளையும் கோடுகளையும் கொண்டு அதையொத்த சிலை கைலாசநாதர் கோவிலில் உள்ளதை அறியலாம். அந்தச்சிலை எண் கரங்களோடு நிலத்தில் முழங்கால் ஊன்றி எழக்கூடிய பாவனையில் சிவனின் நடன நிலையொன்றை கவிதை போலச்சொல்கிறது. வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி வார்ப்புரு சிவபெருமானின் வீரச்செயலை குறித்தாலும், அது ஒரு அழகிய நடனம். வைணவத்தில் தொன்மையான குடமாடுங்கூத்தனின் வடிவும், காளிங்க நர்த்தனனின் சிலைகளும் இவற்றோடு ஒப்பு நோக்கத்தக்கவையே, ஆனால் பெரும்பாலும் குறுஞ்சிற்ப அளவிலேயே உள்ளன . மேலக்கடம்பூரில் உள்ள தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி வார்ப்புரு வங்கத்திலிருந்து வெற்றிச்சின்னமாக கொண்டுவரப்பட்டது போலவே ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு வடிவத்தில் ஆடும் சிவன் இருந்திருக்கக்கூடும். கங்காதரர், சோமாஸ்கந்தர் போன்ற பல்லவர்கால சிவ உருவங்களில் ஆடலுக்கிறைவனின் பல்வேறு வடிவுகளும் பொளியப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று அவனிபாஜனம் என்றழைக்கப்படும் சீயமங்கலம் தூணாண்டார் கோவிலுள்ள புஜங்கத்ராசித மூர்த்தி. அவரே தற்போதைய ஆனந்த தாண்டவ மூர்த்தியின் மூல வடிவம் என்று கூற இயலும், சைவர்களின் நம்பிக்கையோ உத்திரகோசமங்கை தல நடராஜர் மிகப்பழைமையானவர் என்று .
ஊர்த்துவ தாண்டவ வடிவம், ஆடலுக்கிறைவனின் மற்றோர் வடிவம். இடக்காலை தலைக்குமேல் உயர்த்தி நிற்கும் காலன் ஊழிக்கூத்திடுகிறான் புன்னகையோடு. தல புராணங்களில் திருவாலங்காட்டில் சிவன் காளியை வெல்ல இப்படி காலுயர்த்தி ஆடினார் என்று உள்ளது.தில்லையிலும் இதே கதையுண்டு. இதையொட்டி சிற்பமரபில் நடராஜருக்கு அருகிலேயே நடனமிடும் காளியின் சிலையும் வடிக்கப்படும். சோழர் கலைக்கோவில்களின் கோட்டத்தில் ஆனந்த நட்டம் செய்யும் நடராஜர் காலடியில் காரைக்காலம்மையும் காளியும் வடிக்கப்பட்ட சிலைகளுண்டு, அழகிய உதாரணம் கங்கைகொண்ட சோழீச்சுரம். நந்தியோடும் பூதகணங்களோடும் நடமிடும் ஊர்த்துவ தாண்டவர் கைலாசநாதர் கோவிலிலிருக்கிறார். மேலும் திருப்பட்டூரில் சிவனின் ஒரு ஊர்த்துவ நடன சிலையுண்டு என்று இரா கலைக்கோவன் தெரிவிக்கிறார். திருச்செங்காட்டங்குடியிலும் ஒரு ஊர்த்துவ தாண்டவர் இருக்கிறார். பிற ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிலைகள் தூண்சிற்பங்களாக சிற்பமண்டபங்களில் பெரும்பாலும் செதுக்கப்பட்டன, அவற்றிற்கெதிரே காளியும் தூண்சிற்பமாயினள். குறுஞ்சிற்பங்களாகவும் இவ்வடிவு கோவில்களில் உள்ளது. பிற்காலத்தில் இவர் கங்காள வடிவத்தோடிணைந்து, கங்காளம் என்னும் கருவியை இசைப்பது சிலைகளில் சேர்க்கப்பட்டது, அவிநாசியப்பர் கோவில் தூணில் உள்ள பதினாறுகை ஊர்த்துவ தாண்டவர் அவ்வாறே இருக்கிறார். ஊர்த்துவம் என்றால் கீழிருந்து மேலாக என்று பொருள், தலைக்கு மேலே காலுயர்த்தி ஆடும் இந்நிலைக்கு மேலதிக அர்த்தங்கள் இருக்கக்கூடும். சமீபத்தில் தம்பி GSSV நவீன் ஊர்த்துவம் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
வார்ப்புச்சிலையாக திருவாலங்காட்டில் நடராஜர் ஊர்த்துவ நடமிடுகிறார். அவரும் வேறிடங்களில் காணாத ஒற்றைக்கொரு அழகர், தூண் சிற்பங்களும் அவருக்கும் வேறுபாடுண்டு. இவர் வார்ப்புருக்களின் சாத்தியத்தை ஏற்று, வலப்புறம் சூலமூன்றி வட்டத்திருவாசியின் மையத்திலிருந்து மூலைக்குச்செல்லும் ஆரக்கோடுபோல இடக்காலுயர்த்தி அதன் நுனியை இடக்கையால் தொடுவதுபோன்ற பாவத்திலிருக்கிறார். இது பரதநாட்டிய கரண நிலையை விஞ்சிய கலைப்படைப்புமாகும்.காலை தலைக்கு மேலே உயர்த்தா விடினும், பக்கவாட்டில் வீசாமல், முழங்காலை மடித்த வாக்கில் நேராக உயர்த்தினாலே அதை ஊர்த்துவம், ஊர்த்துவஜானு என்கிறார்கள், சில வார்ப்புருக்களும், மகர தோரணங்களிலுள்ள நடராஜரும் அதையொத்தவர்கள்.
சிந்தாமணி கோவிலில் உள்ள ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, எண்கரம் கொண்ட இறைவனின் இடக்கைகளில் இரண்டு நாகம், வஜ்ரம் கொண்டிருக்கிறது ஒருகை நடன முத்திரை ஒன்றை காட்ட, காதின் மகரக்குழைக்கு பின்செல்லும் இன்னொன்று தலைக்கு மேல் நின்று கனிந்து சடையின் உச்சிக்கொன்றையை நோக்குகிறது. இடக்கைகளில் ஒன்று உயரத்தூக்கிய காலின் தொடையை பற்றியிருக்க ஏனைய கரங்களில் மணியும், பாசமும், நீள்தடியொன்றும் உள்ளது. உற்றுநோக்கினால் அது தடியின் உச்சியில் மனித உருவம் போலுள்ளது, விஸ்வக்ஷேனரை உறித்து ஒருமூட்டையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் பிட்சாடனரை ஒத்திருக்கிறது, பிரேதம் எனக்கொள்ளலாமா தெரியவில்லை.
ஒரு காலை முயலகனின் முதுகில் ஊன்றி எழும்பியவாறே ஆடும் இறைவனின், மற்றோர் கால் விண்ணோக்கி உயர்ந்திருக்கிறது. உள்ளங்கால் தெரியும் வடிவு, யாளி வேலைப்பாடுகளுடன் இடையணி , இருபுறமும் தொங்கும் கச்சை, சிறுமணிகள் தொங்கும் அணிகள் செறிந்திருக்கிறது, ஆடைகளின் சிறுமடிப்பும்கூட தெளிவாகக்காணும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. கழுத்தில் அணிகள், உதரபந்தம், புரிநூல், ஒருகை உயர்ந்ததால் மார்பின் காம்புகளில் ஒன்று மேலேறிச்செல்கிறது. கழுத்தணியின் முடிகயிறு உயர்ந்த கையின் கக்கத்தில் படிந்திருக்கிறது. அழகிய சடாமகுடத்துடன் உள்ள முகத்தின் அருகே சென்றால் உணர்வெதும் இல்லை, சற்று தொலைவில் சென்றால் புன்னகை பூக்கிறது. மீண்டும் அருகில் சென்றால் அது மறைந்துபோகிறது.
பரதம் போன்ற செவ்வியல் நடனங்களை ஒரு ஆண் ஆடுவதே அவனது இயல்பை மாற்றி நளினமாகிவிடும் என்பது பொதுப்பார்வை, ஆடலை தாண்டவம் லாஸ்யம் என இரு பாலாக பிரித்து தாண்டவத்தை ஆண்களுக்கானதாக வைக்கிறது பரதநாட்டியம். இது இரண்டையும் தாண்டி எண்ணக்கூடுவது, ஆடும் இறைவனின் அசைவுகள் அனைத்தும் ஆடலுக்குட்பட்டு நளினமானவை, ஆனால் அதிலிருந்து மேலெழும் கம்பீரத்தைத்தான் இந்த நடராஜ மூர்த்தங்கள் காட்சிப்படுத்துகின்றன, இந்த ஊர்த்துவ மூர்த்தியின் திருவடி விண்ணோக்கி முறுவல் செய்து சொல்வதெல்லாம், கலையின் பால் பேதமற்ற உறுதிப்பாட்டை. அந்தக்கம்பீரத்தைத்தான் அருகிருக்கும் சிவகாமியும் நகைமொக்குடன் ஆமோதிக்கிறாள்.
ஊர்த்துவதாண்டவத்தை காரைக்காலம்மை போல வேறெவரும் பாடப்புகவில்லை, அவளை நினைக்காது இதை முடிக்க முடியாது. அம்மையின் மூத்த திருப்பதிகப்பாடல்கள் சில...
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
நாடும் நகரும் திரிந்துசென்று
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்டமாடே
முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடுங் கடலும் மலையும் மண்ணும்
விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
வெகுநேரம் அங்கு நின்று விட்டு அடுத்த இடத்திற்கு கிளம்பினோம்.
குறிப்பு : 26.01.2022 அன்று சென்ற பயணத்தின் பதிவு
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
09.02.2021
மிகச் சிறப்பான பதிவு. ஆய்வோடு உள்ளது. வாழ்த்தி மகிழ்கிறேன்
ReplyDeleteநன்றி சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWords cannot explain Thambi Thamarai's language command... Richness in text... Deep historical knowledge and a thirst for analysing history... Continue the excellent work
Deleteநன்றி சார்
Deleteதாமறையுடன் கலைகோவில்கள் காண செல்வது ஒரு சிறந்த அனுபவம் எனக்கு. இப்போது எனக்கு ஒரு கோவிலை/சிற்பதை எப்படி அணுகுவது என ஒரு குறைந்த பட்ச புரிதல் உண்டு. இந்த பதிவும் அவருடன் பயணித்த அனுபவதையே அளிக்கிறது. உர்தவ தாண்டவரை காணும் ஆவலை என்னுள் எழுப்பியாயிறறு.
ReplyDeleteஅருமையான பதிவு.மொழியின் லாவகம் சொக்க வைக்கிறது.சிலா ரூபங்களின் வர்ணனைகள் காட்சிகளை நேரில் காண்பது போன்ற உணர்வினைத் தருகின்றது.இதுவரை பார்த்திராத கோயில்களின் வரலாற்றுத் தகவல்களோடு கூடிய சிற்ப நுணுக்கங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து(புரிந்து)கொண்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteபதிவின் கடைசியில் புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக தருவதற்குப் பதில் இடையிடையே வர்ணனைகளுக்கு ஏற்ப படங்களை பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தருமே என்பது என் விண்ணப்பம்.
சிறப்பானப் பதிவு. தொடருங்கள்.
ReplyDeleteமகிழ்ச்சியும் வாழ்த்துகளும்..!
நன்றி சார்..
Delete