புலவர் தொழில்

https://anandhkumarpoems.wordpress.com/ 

https://www.jeyamohan.in/164848/

கவிஞர் குமரகுருபரன் விருது விழாவிற்கு சென்னை சென்றிருந்தேன். இவ்வருடம் விருது கவிஞர் ஆனந்தகுமாருக்கு அளிக்கப்பட்டது. ஒருநாள் அமர்வாக நடத்தப்பட்ட நிகழ்வில் மாலை நான்கரை மணிக்கு கலந்துகொண்டேன். காலையிலிருந்து நான்கு அமர்வுகள் முடிந்து விட்டிருந்தன, நல்லவேளையாக அது இடைவெளி நேரம். 


கவிஞர் ச துரையின் குமரகுருபரன் கவிதைகள் முதலமர்வு. சென்ற இரு வருடங்களாக கோவிட் காரணத்தினால் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயன், கவிஞர் மதார் இவர்களுக்கு தனியே விழா நிகழவில்லை எனவே  அவர்களது கவிதைகள் குறித்த இரு அமர்வுகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மலையாள கவிஞர் வீரான் குட்டி  அமர்வு நிறைந்து அனைவரும் தேநீர்க்கடைக்கு சென்றிருந்த நேரத்தில் வாடகை இருசக்கர வாகனத்தில் சென்று நிகழ்விடத்தில் இறங்கினேன். 


அனங்கன் வாசலிலேயே சிரிப்போடு வரவேற்றான், விஷ்ணுவிடம் போனில் வந்துவிட்டதை கூறிக்கொண்டு   இருந்த போதே நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து  ஏன் தாமதம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். புதுச்சேரி கேங் என்றறியப்பட்ட எங்களது பெருமையை காப்பாற்ற சிவாத்மா மட்டும் விழா துவக்கம் முதலே இருந்தார்.  விஷ்ணு நண்பகலில் வந்து விட்டிருந்தார். மற்ற நண்பர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. தேநீர் குடிக்க நாங்களும் சென்றோம் அங்கும் நண்பர்கள் கூட்டம். 


கடலூர் சீனு அண்ணனுக்கு என்றாவது மயக்கம் தெளிவிக்க வேண்டிவந்தால் அண்ணே டீ சாப்பிடலாமா என்று கேட்டால் போதும் என்று நினைக்கிறேன் அல்லது கொஞ்சம் தேநீரை மேலே தெளிக்கலாம், அவ்வகையில் அவர் எஸ் ராவின் அணுக்கர். இளம் எழுத்தாளர்கள் படையே வந்திருந்தது, அனோஜன், சுரேஷ் பிரதீப், சதீஷ்குமார் சீனிவாசன், அகர முதல்வன், செந்தில் ஜகந்நாதன், தமிழ் விக்கியில் தீவிரப் பங்காற்றும் மற்றோர் அணி மது முதல் ஜெயராம் ஈறாக. ஈதன்றியும்  ஆன்லைனில் கம்பராமாயணம் வாசிக்கும் குழுவினர் குழுமியிருந்தனர். 


நிகழ்வு துவங்கும் முன் என்னுடைய பெயர் இரட்டையரான அவிநாசி தாமரைக்கண்ணனை குடும்ப சகிதமாக பார்த்தேன், காலையில் இம்பர்வாரி குழுவில் ஏன் இப்போதெல்லாம் கம்பராமாயண அமர்வில் கலந்துகொள்வதில்லை என்று அவரை விசாரித்திருக்கிறார்கள், மனிதர் கண்ணாடியைத் தாண்டியும் விழித்திருக்கிறார். இப்படித்தான் ஒருமுறை அவரது தமிழினி மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு கோகுலப்பிரசாத் என்னை முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.  

அவரது பெண்குழந்தை தாமரைக்கண்ணன் என்று சொல்வதை கேட்டேன், கவினை விட தெளிவாகத்தான் சொல்கிறாள். பெண்குழந்தைகள் பேச்சு குறைவாகப் பேசினாலும் சொல் உச்சரிப்பில் துல்லியம் மிகுதி. ஆனந்தகுமாரை தேநீர் குடிக்குமிடத்தில் பார்த்தேன் அவரது இளையமகன் கிச்சு இப்பவே வா வீட்டுக்குப் போகலாம் என்று அப்பா காலைக் கட்டிக்கொண்டார், கவிஞருக்கோ சொல்லவொண்ணா துக்கம். அப்பாவுக்கே இப்பதான் பிரைஸ் தராங்க கொஞ்சம் இருடா, காலையிலிருந்து இதேதான் சொல்றீங்க இன்னும் குடுக்கலியே..


விழா துவக்கத்தில் பரிசுக்கேடயமும் பரிசுத்தொகையும் கவிஞருக்கு அளிக்கப்பட்டது,முதலில்  பார்க்கவி ஆனந்தகுமார் கவிதைகள் மீதான தனது வாசகப்பார்வையை முன்வைத்தார். ஆனந்தகுமார், கம்பன், சங்கக் கவிதைகளை சேர்த்து ஒரு சித்திரம் அளிக்க முற்பட்டார், இருபக்க ஆடியாக விளங்கக்கூடிய நிலவு ஒன்றை கம்பனின் வரிகளில் சொன்னது நல்ல துவக்கம் . அடுத்து கவிஞர் வீரான் குட்டி பேசினார், ஆனந்தகுமாரின் உயரம் என்னும் கவிதையை மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்ததை வாசித்தார்.
 பின்னர் போகன் சங்கர்  பேசியதை கவிதை வாசிக்கும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் கேட்கவேண்டும் என்பேன். கவிதைகள் குறித்த வரைவிலக்கணம் ஒன்றை தந்துவிட்டார், ஒருபோதும் அள்ளமுடியாத மணத்தை புட்டியில் அடைத்தாற்போல. மேற்கோள்களுக்காக ஒருபோதும் தயங்காத நினைவாற்றல் அவரது வாசிப்புத்தீவிரத்தை காட்டியது. கவிஞனின் அறவுணர்ச்சி பற்றி அவர் பேசியது நீண்டநாள் என் மனதில் நீங்காதிருக்கும் . ஜெயமோகன் ஆனந்தகுமாரின் கவிதைகள் அளிக்கும் விடுதலை குறித்தும் அதை ஏன் கொண்டாட வேண்டும் என்றும் பேசினார் இன்று அரங்கம் முழுதையும் கண்ணீர் சிந்தி சிரிக்க வைத்தவர் அவரே. 

நிறைவாக ஆனந்தகுமார் ஏற்புரை, எந்த பேச்சு முறைமைகளும் இல்லாது துவங்கி முடிக்கும் தருணம் உணர்ச்சிகளின் கூர்மையோடு முடித்தார். குருஜி சௌந்தர் நன்றியுரை சொன்னார். 

அந்த சிறிய அரங்கில் ஒருவரும் ஒருவரிடமும் பேசாது செல்லமுடியாத நெருக்கம் இருந்தது. போகன், வீரான் குட்டி உட்பட அனைவரிடம் அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை வேணு நினைவு வைத்திருந்தார், பெயர் சொல்லி அழைத்தது இன்னும் பரவசமாக இருந்தது. அவர் துவங்கி எத்தனை கைகளை ஒருநாளில் பற்றிக்கொண்டிருக்கிறேன், அனங்கனை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என்று சொன்னதை விஷ்ணு நம்ப மறுத்துவிட்டார். எனக்கு ஜெயராமை, சுதா மாமியை சந்தித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. கற்றல் தாண்டி இந்த உவகைப் பெருக்கிற்காக , தீராத இனிமைக்காகவே வருகிறேன். எப்போதும் இதற்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறேன் போல.        



தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

Comments