ஒளி நின்ற கோணங்கள்

"இன்றென இருத்தியல்" என்று அனுமனைப் பார்த்து சீதை சொல்கிறாள் கம்பராமாயணத்தில், அதுக்கு நீ நித்யசிரஞ்சீவியா இருக்கணும்னு வாழ்த்தறான்னு அர்த்தம். இந்த சுந்தரகாண்ட வரிகளை கம்பனில் தோய்ந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பலமுறை சொல்லுவார். தொழிற்சாலைகளில் சில கோப்புகளை Living Document என்பார்கள், ஒரு உற்பத்திப்பொருள் தோன்றுமுன்னே துவங்கி அது மறைந்து சிலகாலத்துக்கும் அந்தக்கோப்பு வாழவேண்டும், ஒவ்வோர் நாளும் அதனுடைய வளர்ச்சியும் மாற்றமும், தவறுகளையும் கூட பதிவு செய்ய வேண்டும். ஒரு கலைக்களஞ்சியமும் அவ்வாறான Living Document தான். இங்கு நித்ய சிரஞ்சீவித்தன்மை என்பது நாள்தோறும் மாறுவது, வளர்வது, தொடர்ந்து நிற்காது இயங்குவது. 






தமிழ் விக்கி என்னும் கலைக்களஞ்சிய தொகுப்பு, இன்று தமிழில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவர் வாசகர்களான விஷ்ணுபுரம் வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் ஒரு அரிய முயற்சி. இதன் ஒரு பகுதியாக தமிழில் கலைக்களஞ்சியம் கொணர்ந்த பெரியசாமித்தூரன் அவர்கள் பெயரால் ஆண்டுதோறும் விருது வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்கான விருது ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையொட்டிய இருநாள் நிகழ்வுகள் ஈரோட்டில் நடந்தேறின. 


சுவாமி பிரம்மானந்தா, ஆய்வாளர்கள் அ கா பெருமாள் மற்றும் மகுடீஸ்வரன், தாவரவியல் பேராசிரியை லோகமாதேவி, விருதாளர் பத்மபாரதி ஆகியோருடன் வாசகர் கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஏறத்தாழ நூற்று ஐம்பது பேர் எல்லா அமர்வுகளிலும் இருந்தார்கள். விருது விழாவில் இன்னும் நூறுபேர் அதிகமாக கலந்துகொண்டார்கள்.  இங்கு வாசகர்கள் என்பது பொது வாசகர்கள், விஷ்ணுபுரம் வட்டத்தினர், எழுத்தாளர்கள், முக்கியமான ஆளுமைகள் என பலதரப்பினரை உள்ளடக்கியது. ஆகவே விவாதங்கள் உரையாடல்கள் நல்ல தரத்தில் நிகழும் எப்போதும் . பேசப்பேச விரிந்தும் ஆழ்ந்தும் செல்லும் கலந்துரையாடல்  தலைப்புக்கள். நாட்டாரியல், கொங்கு வட்டார வரலாறு, தாவரவியல், மானுடவியல் ஆய்வு, ஆன்மிகம் என ஒன்றுக்கொன்று விலகிநிற்கும் விநோத ரஸ மஞ்சரி போல. வழக்கமாக விஷ்ணுபுரம் விருது விழாவில் இலக்கியம் சார்ந்தும் அந்தந்த படைப்பாளரின் படைப்புலகம் சார்ந்தும் மட்டுமே கலந்துரையாடல் நிகழும். எனவே வாசிப்புத்தீவிரம் அங்கு முதன்மைப் பொருள்.  தூரன் விருது விழா அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்திருக்கிறது, இதில் பண்பாட்டு ரீதியிலான உரையாடல் மேலோங்கியிருந்தது. இது வேறோர் உலகு என்னும் உணர்வு இப்போது மீண்டும் தோன்றுகிறது. 


 குப்பம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர் பத்மநாபன் இதில் கலந்துகொள்ள வந்திருந்தார். நெடுநேரம் அவர் கைகளைப்பற்றிக்கொண்டு அலைந்தேன், மென்மையான கைகள்,  இனிமையான குரல். கிளப்ஹவுஸ் செயலியில் இராமாயண வாசிப்பு அமர்வுகளில் அவர் அறிமுகமானவர். குரலைக்கேட்டவுடனே என்னைக் கண்டுகொண்டார். நண்பர்கள் அனங்கன், அவிநாசி தாமரைக்கண்ணன் இவர்களுடன் பேசி ஓர் இரவு கழிந்தது. விழா நடந்த கவுண்டச்சி பாளையம் ஊரிலிருந்து வெள்ளோடு பறவைகள் சரணாலயம் வரை அடுத்தநாள் காலை ஒரு நடை சென்றோம். வெள்ளோடு துவக்கத்திலேயே உச்சிமாகாளியம்மனோடு முனீஸ்வரன் பிரம்மாண்டமாக அமர்ந்திருந்தார், உச்சிமாகாளிக்கு ஒரு ஆலயமும் கூட இருந்தது. ஊருக்குள் போகும் வழியில் சிறிய களம் கட்டி அதில் தெய்வமாக சிறு கற்களுக்கு வெள்ளை பூசி அதில் வண்ணப்பொட்டுக்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டிருந்தது, இறைவன் இறைவி எதிரே ஒரு வாகனம் என்பது போல மூன்று கற்கள், வழியில் பெரிய கொம்புக்காளை ஒன்றை அழைத்து வந்த ஊர்க்காரர் அதை மந்தைப்பிடாரி என்றழைத்தார். ஊர்த்திருவிழா நிகழ்கையில் இங்கும் கிடாவெட்டு உண்டு என்றார். சரணாலயம் செல்வதற்குள் மேலுமிரு அம்மன் கோவில்கள். 


அன்று மாலை கவுண்டச்சிபாளையத்திலுள்ள மற்றோர் ஆலயத்திற்கு சென்றேன், அது பாலமடை அம்மன் என்னும் பெண்தெய்வத்திற்குரிய கோவில். கையுயர்த்திய  பூதப்பெண்களால் வாயில் காக்கப்பட்ட அம்மன், கருவறை இருளில் விளக்கொளி சூழ தழல்முடியுடன் அசுரனை காலில்மிதித்து  நிசும்பசூதனியின் வடிவிலிருந்தாள். அருகிலேயே சேதமான அதேவடிவ  பழைய சிலைக்கும் ஒரு சந்நதி இருந்தது. காளிங்கராயன் கால்வாய் வெட்டும்போது அணைநிற்க இந்த அம்மன் உதவினாள் என்ற கதையை பூசகர் சொன்னார். அந்தக் கால்வாய் அந்த ஊரின் வழியாகச் செல்வது இல்லை எனவே இது ஒரு வழிநிலைக் கோவிலாக இருக்கலாம், அன்றியும் பிற்பாடு காளிங்கராயன் கதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் . இந்தத்தெய்வம் பெரும்பாலும் நீர்நிலை, அணை அல்லது பாலத்தை காக்க பலியிடப்பட்ட மற்றோர் கன்னி, பின் கடவுளான அன்னை. ஏனோ கி ராவின் கன்னிமை கதை இங்கு ஓர்மைக்கு வருகிறது. 

"திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு" என்றோர் குறளில் காலத்தில் செயலாற்றுவதை வள்ளுவர் சொல்லுவார். நாட்டாரியல் ஆய்வாளர் அ கா பெருமாள் சொன்ன விஷயம் ஒன்று, ஒரு ஆய்வாளன் ஐம்பது வயதுக்குமேல் களஆய்வுகளில் பணியாற்றுவது கடினம். தமிழகத்தின் தலை சிறந்த நாட்டாரியல், பண்பாட்டியல் ஆய்வாளர் அவர். ஒரு சிறு தரவுக்காக பல்லாண்டுகள் காத்திருந்து தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுபவர் என்பதால் அவரது கருத்தின் வலிமையை சோதிக்க முயலப்போவதில்லை. பண்பாடு சார்ந்து களஆய்வுகளை செய்வதற்கு கட்டாயம் ஒரு வயது வரம்பு உள்ளது. ஆய்வுக்கு வேறோர் சிந்தனை இன்றி படையலாக  தனது இளமையை வைக்க வேண்டும். ஆய்வை முடிக்கையில் அவர்கள் பல நல்ல தருணங்களை இழந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களது செயல் ஒரு வைரக்கல் போல இறுகிப் படிந்து விடுகிறது, அதற்கு காலத்தைத் தாண்டி ஒளிவீசி நிற்கும் தன்மை உள்ளது. 


கரசூர் பத்மபாரதி வெகுகாலம் முன்பு தனது முதல் ஆய்வான நரிக்குறவர் சமூக வரைவியலை தனது ஆசிரியர் அறிவுநம்பி வழிகாட்டி துவங்கியது தனது முதுகலைப்படிப்பின் போது, அநேகமாக 1999-ம் ஆண்டாக இருக்கக்கூடும். பிற்பாடு முனைவர் ஆய்வின் போதே இடையிடையே செய்த மற்றோர் ஆய்வு திருநங்கையர் குறித்தது. இவ்விரு நூல்களும் இன்று ஆய்வு எப்படி மேற்கொள்ளப்படவேண்டும் என்ற எடுத்துக்காட்டுகள். அரங்குகளில் பத்மபாரதி பேசத் துவங்கும்போது அங்கு ஆய்வாளர் என்ற ஒருவர் இல்லை. எங்கோ உறைந்திருந்த காலத்திலிருந்து புத்துணர்வோடு இன்றென வெளிவந்திருந்தார். எனது தொழிற்சாலைக்கு பணிக்கு வரும் புதுச்சேரி வட்டாரத்திலுள்ள துடுக்கான கிராமத்து இளம்பெண்களை அறிவேன், அவர்கள் உடல்மொழியை கொண்டு தூரத்திலேயே இந்தப்பெண் இந்த ஊர் என்றுகூட சொல்லிவிடமுடியும். பத்மபாரதி இடுப்பில் கைவைத்து கூட்டத்தை நோக்கி பேசும்போதெல்லாம் அவர் அந்த ஒளிநின்ற இளமையில் இருந்து மீளவே வேண்டியதில்லை என்று தோன்றியது.    


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

17.08.2022         


Comments

  1. தாமரைக்கண்ணன்,
    நல்லா இருக்குப்பா,
    அடுத்து கடலூர் வரும்போது வீட்டுக்கு வா உன் நண்பன் சீனுவுடன். பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். அவசியம் சசந்திப்போம்.

      Delete

Post a Comment