பாணன் கனவு 1

 பாணனுக்கு தூக்கம் வந்தது,  எழுத்துப்பிழையல்ல அவனுக்கு துக்கம் அப்பப்போது வந்து செல்லும் தான். இப்போது தூக்கமின்மைக்கான துக்கத்தை மனம் உணருமுன்னர் தூக்கம் நேரடியாகவே வந்துவிட்டது. அப்பிடி சலித்துக்கொள்ளாமல் ஒரு காரியம் செய்வது மரபில்லை. 

நல்ல நெடுஞ்சாலையின் ஒருபுறத்திலுள்ள வசதியான நிழற்கூரை. துணைக்கு சில பக்தர்கள், பாதசாரிகள், படுத்துறங்க மனமில்லாமல் தனது போனிடம் காலம் கழிப்பவர்கள், இரண்டு காவலர்கள் கூட இருந்தார்கள், எனவே தைரியமான தூக்கம் வந்தது. போர்த்திக்கொள்ள பையில் ஒரு வெள்ளைவேட்டி இருந்ததும் கூட ஒரு காரணம், அந்த வெள்ளைவேட்டி விளம்பர நடிகர்கள் டிவியில் கட்டுவதுபோல போல தொட்டாச்சிணுங்கி வகையறா அல்ல, சிலவருடங்கள் முன்பு நியாயவிலைக்கடையில் பொங்கலுக்கு கொடுத்தது, கண்ணுக்கழகிய சிவப்பு மஞ்சள் நூல்புடைவை ஒன்றோடு வீட்டுக்கு வந்தது. அரசின் முத்திரையும், விவரங்களும் கூட ஒரு நுனியில் அச்சிடப்பட்ட கனமான, கதகதப்பான வேட்டி. 

மேற்சொன்ன பக்தர்கள் என்ற வார்த்தையை நீங்கள் அரசியல் நோக்கில் புரிந்துகொண்டால் பாணன் கடும் மனத்தாங்கல் கொள்வான், அல்லது அப்படிக்கொள்ளாமல் போவான் என நான் நினைக்கவில்லை. மேல்மருவத்தூர் என்ற ஊரின் பேருந்து நிறுத்தம், அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக பாணன் கொஞ்சம் ஒதுங்கி படுத்துக்கொண்டான். அந்தக்கால அரசர்கள் கல்வெட்டுகளில் வெட்டிவைத்தாற்போல பக்தர்களின் பாததூளி தன்மேல் படக்கூடும் என்பதும் ஒரு காரணம். 

இருக்கட்டுமே என்று இருந்தபோது திடீரென்று இந்த எண்ணம் வந்தது, பாணனின் கனவுக்குள் போகலாம், அசந்துதான் தூங்குகிறானா அல்லது, கிட்டே போனால் எழுந்துவிடுவானா என்று தெரியாது. கைவசம் இருந்த பாணனின் சித்தப்பா, அவரும் ஒரு பாணன் தான். சொல்லிக்கொடுத்த ஸ்வப்னப்ரவேச பலஸ்மிருதி நினைவுக்கு வந்தது, அது பாணர்களுக்குள் மட்டுமே செவிவழியாக புழங்கும் மந்திரம்.  பின் பாணனின் அருகே அமர்ந்து அந்த மந்திரத்தை சொன்னேன், வேறொரு இடம். ஆனால் நல்ல இருட்டு கனவிலும் பாணன் உறங்கிக்கொண்டிருந்தான், மீண்டும் மந்திரம், ஸ்வப்னப்ரவேசம். 


இப்போது ஒரு இருண்டகுகைவழியே வெளியே வந்துவிட்டேன் நல்ல வெளிச்சம். மனிதர்கள் ஆங்காங்கே கூடிக்கூடி நிற்கிறார்கள், எதோ திருவிழா நடக்கிறதுபோல. டக்கென பாணனின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறேன், என்னவென்றால் பாணன் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டுதான் இருந்தான். புரிந்துவிட்டது அதுஒரு இலக்கியக்கூட்டம்.  இந்தப்பக்கம் திரும்பினால் ஒரு டிப்டாப்பான முதியவர் மேடையை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார், இது பெருந்தன்மையான வரி. உண்மையான வரி, ஒரு குண்டுப்பையனால் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. அது அவர் மேடையை முறைத்துக்கொண்டிருந்தார். 

மேடையிலும் பாணன் அமர்ந்திருந்தான்,அருகே உட்கார்ந்திருக்கும் ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை கன்னத்தில் கைவைத்து கேட்டுக்கொண்டிருந்தான்.     

Comments