விஷ்ணுபுரம் விருது விழா 2022



 நண்பர்கள் சிலர் இம்முறை (2022) விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு வரவில்லை, தொடர்ந்து புகைப்படங்கள் பதியக்கேட்டனர். நான் சுருக்கமாக அங்கு நிகழ்ந்தவற்றை தொகுத்திருக்கிறேன், வீடியோ பதிவுகளாக்கப்பட்டவை தவிர்த்து பிறவற்றையே இங்கு தருகிறேன். 







இம்முறை நான், விஷ்ணு குமார், கடலூர் சீனு, மயிலாடுதுறை பிரபு நால்வரும் விஷ்ணுவின் காரில் கோவை செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தோம். விஷ்ணு, கடலூர் சீனுவை வில்லியனூரில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்தார்.  பாண்டி - விழுப்புரம் தடத்தில் நால்வழிச்சாலை போடப்படுகிறது. எங்கெங்கு காணினும் பள்ளமடா என்று பொறுமையாக திருப்பதி வரிசையில்தான் மாலை போக்குவரத்து நிகழ்கிறது. நான் அலுவலகத்திலிருந்து மதகடிப்பட்டு வந்து நாற்பது மணித்துளிகள் கழித்துதான் ஒற்றையடிப்பாதையில் கார் வரமுடிந்தது, அவ்வளவு நெரிசல் . 


வளவனூர் தாண்டியவுடன் கொஞ்சம் வாகன ஓட்டிகள் ஆசுவாசம் அடைய முடியும். சீனு அண்ணன்  வந்ததிலிருந்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தார். சாரு மீதான  அதீத அன்பின் வெளிப்பாடுதான் என்று நினைத்துக் கொண்டேன். மயிலாடுதுறை பிரபு அண்ணனை வரவேற்க விழுப்புரம் ரயில் நிலையம் சென்றிருந்தோம். நாங்கள் தேநீர் குடிக்கும் இடைவெளியில் ரயில் வந்தது. அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட பிரச்சனை குறித்தான உரையாடல்களுக்கு பிறகு பிரபு அண்ணனை பார்க்க அனைவரும் ஒரு மெல்லிய தவிப்புடன்  இருந்தோம், பிரபு வந்ததும் நலம் உசாவினோம், அப்படித் துவங்கி  விஷ்ணுபுரம் விருது விழா விருந்தினர்கள் குறித்த உரையாடலாக அது வளர்ந்து கொண்டே சென்றது. 


அங்கிருந்து  நாங்கள் கிளம்பும்போது, விழுப்புரம் விஷ்ணுபுரம் நண்பர் சிவகுமாருக்கு பேசினோம். அவர் அப்போதே உளுந்தூர் பேட்டையில் இருந்தார், பேருந்தில் வரும் யோசனையில் இருந்தவர் கார் எடுத்து வந்திருந்தார், அடுத்து வரும்  சுங்கச்சாவடி அருகில் சந்திப்போம் என்றார்.  ஏற்கனவே புதுச்சேரி நண்பர்கள் முத்துக்குமரன் மற்றும் இளையராஜா தனித்தனியே பஸ் மற்றும் ரயிலில் கோவைக்கு பதிவு செய்திருந்தனர். நண்பர்கள் புதுச்சேரி சரவணன் மற்றும் வில்லியனுர் திருமலை இருவரையும் தொடர்புகொண்டபோது  இம்முறை வர இயலவில்லை என்றனர். 


விஷ்ணு இரு நாட்கள் முன்புதான் கேரளாவிலிருந்து கோவை வழியே ஊர் திரும்பியிருந்தார், அத்தாட்சியாக  நேந்திரமும், சக்கையும் மொறுமொறுப்பான சிப்ஸ் வடிவில் பின்னிருக்கையில் உடனமர்ந்து எங்களை பசியாற்றின. ஆத்தூர் அருகேயிருந்த உணவகத்தில் இரவு உணவுக்கு நிறுத்தினோம். விஷ்ணு பயணம் முழுமைக்கும் ஏதேனும் இனிப்பு உண்ண ஆவலாக இருந்தார்,  இரவு உணவு முடிந்து மீண்டும் அடுத்த சுங்கச்சாவடியில் சிவகுமாருடன் தேநீர். அங்கிருந்து பிரபு அண்ணன் சிவகுமார் காருக்கு மாறிக்கொள்ள, நாங்கள் மூவரும்  கிளம்பினோம். பொன்னியின் செல்வன் பாடல்கள் முதலில் ஒலித்தன ஒவ்வொரு பாடலும் எவ்வகையில் தனித்துவமானது என்று சீனு பேசிக்கொண்டே வந்தார், மூவரும் மாற்றி மாற்றி மராட்டி, ஹிந்தி பாடல்கள் என்று போய் வீ வில்  ராக் யூ காலத்து ஆல்பம் பாடல்களை சீனு ஒவ்வொன்றாக  ஒலிக்கச்செய்ய கேட்டுக்கொண்டே கோவை வந்தோம். குஜராத்தி சமாஜம் எதிரேயே சிறிது நேரம் காரில் உறக்கம், பின் அதிகாலை அறை புகுந்தோம். பெரிய மைதானம் அளவில் இருந்த அறை முழுக்க படுக்கைகள், முத்துக்குமாரும் இணைந்துகொள்ள , நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் அளவலாவல்கள், அறிமுகங்கள். 


நண்பர் அநங்கனை கண்டேன், இருநாட்களும் பெரும்பாலும் அவனுடன்தான் இருந்தேன். காலை அமர்வுகள் துவங்கின, மரபாக ஜெ வரவேற்று அமர்வுகளை நெறிப்படுத்தும் வகையில் குறிப்புகள் தந்தார். சாரு வாழ்த்தி விழாவை துவங்கி வைத்தார். இம்முறை கூட்டம் அதிகமாக இருந்தது, உண்மையில் வழக்கமான நண்பர்கள் தவிர வெளியாட்கள் அனைவருக்கும் ஒரு சிறிய  கலகத்துக்கான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த பரபரப்புக்கு காரணம் வெகுகாலம் முன்பு  ஜெ மற்றும் சாருவுக்கு இடையேயான வாதங்கள் , இலக்கிய சர்ச்சைகள், அப்போதைய எதிர்மனநிலை பிம்பங்கள். 

முதல் அமர்வு எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியம், நெறியாள்கை நண்பர் விஜய பாரதி. பாரதி மிக இலகுவாக பார்வையாளர்களை விவாதத்திற்குள் அழைத்து வந்தார். கார்த்திக் மிக நிதானமாக தன் பதில்களை அளித்தார். பெரும்பாலான கேள்விகள் அவரது மென்பொருள் துறை சார்ந்தது மற்றும் நட்சத்திரவாசிகள் நாவல் குறித்து. ஒருகட்டத்தில் நண்பர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு சார்ந்து அவரது அபிப்பிராயம் என்ன என்னுமளவுக்கு உரையாடல் சென்றது. ஆனால் ஜெயமோகன் இங்கு துவங்கி வைத்த ஒரு படைப்பாளி அடையும் திருப்தி மென்பொருள் துறையில் என்னவாக உள்ளது என்ற கேள்வி, வெவ்வேறு பேசுபொருளாக உருவெடுத்து அரங்கை வலம்வந்தது. ரம்யா அவரது படைப்புகள் குறித்து மிக முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டார்.     நாம் பார்த்தவரை ஒருவகை படைப்பாளிகள் உரையாடலில் மிகுந்த விருப்பமுடையவர்களாக இருப்பார்கள், பேசிப்பேசி கடந்து செல்வார்கள். அதன் வாயிலாக ஒரு இடம் அங்கிருந்து வெவ்வேறு என்று செல்வார்கள், பெரும்பாலும் ஒவ்வோர் உச்சத்தருணமும் அவர்களுக்கு ஒரு புனைவுப்பொறிதான், தன்னையேதான் அவர்கள் விலக்கிப் பார்க்கிறார்கள். மற்றோர் வகையினர் கார்த்திக் பாலசுப்ரமணியம் போல, எங்கும் நிதானம், ஒரு வார்த்தை தேவையின்றி வராது, ஒரு திறந்த உரையாடலுக்கு இசைய இன்னும் நீண்ட வழி உள்ளது,  அவர்களாக அதை அனுபவிக்க விரும்பாமல் எதிராளி என்ன செய்ய? நம்மிடம் ஒன்றும் மலர்க்கணைகள் இல்லை . 


அடுத்த அமர்வு  எழுத்தாளர் கமலதேவியினுடையது. எழுத்தாளர் ரம்யா ஒருங்கிணைத்தார்.  இடையிடையே மைக்கை பரிசோதிக்கும் மூச்சொலி இன்றி ரம்யாவின் பேச்சுமொழி மணிக்கு முப்பதாயிரம் சொற்கள் கொண்டது, கமலதேவியோ ஒரு சொல்லுக்கும் மற்றோர் சொல்லுக்கும் ஐந்து வினாடி இடைவெளி விட்டு பேசினார். கமலதேவியின் குரல் மூன்றாம் வகுப்பு மாணவியினுடையது, ரம்யாவுக்கு சொல்லாவிட்டாலுமே அப்பள்ளி  தலைமையாசிரியையின் குரல். உரையாடலை தேவி கம்பீரமாகவே துவங்கினார், மிக முக்கியமாக பெண்ணிய ஆணிய கேள்விகளை அழகாக கையாண்டார். மிகவும் நன்றாக படிக்கும் மாணவி பரீட்சை நேரத்தை பாதியாக சுருக்கிக்கொண்டது போல அமர்வின் பாதியிலேயே தான் கூறவந்தது அனைத்தும் எளிய சொற்களில் கமலதேவி கூறிவிட்டார். பின்பாதியில்  கேட்ட கேள்விகளே வெவ்வேறு வடிவில் வந்துநின்றன.  கமலதேவியின் எளிய பதில்கள் பல பார்வையாளர்களின் கைத்தட்டல்களை பெற்றன. யாரேனும் அவரது படைப்பூக்கம் குறித்து கேட்பார்கள் என்று நினைத்தேன். வாரம் இரண்டு சிறுகதைகளை வெளியாகின்றன , நானுட்பட யாரும் கேட்கவில்லை. 


அடுத்த அமர்வு பதிப்பாளர் விஜயா வேலாயுதம் அவர்களுடையது, எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் நெறிப்படுத்தினார். இந்த அமர்வு பெரும்பாலும் அவருடைய அனுபவங்களை பகிர்வதாக அமைந்தது. 


இடைவேளைக்கு பிறகு அகரமுதல்வன் அமர்வு, நெறியாள்கை விக்னேஷ் ஹரிஹரன். அகரனுக்கும், அவர் நண்பன் கார்த்திக்கிற்கும் (கா புகழேந்தி) இளவயதிலேயே ஒரு அண்ணன்களின் சாயல் உண்டு, மேடையில் அமர்ந்தவர் விக்னேஷ் என்பதால் அது அழகாகப் பொருந்திப்போயிற்று. அகரன் நல்ல பேச்சாளி, எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவாக விடை சொன்னார். தன் படைப்புகளில் ஒலிக்கும் சத்தம் பற்றி நீண்ட பதிலளித்தார். சைவப் பற்று குறித்த கேள்விகளின்போது அவரது அழகியல் மாணிக்கவாசகரிடமிருந்து துவங்குவது என்றார். போருக்கு  எதிரான அவரது நிலைப்பாடு குறித்து அகரமுதல்வனின்  தீபாவளி சிறுகதையை முன்வைத்து அரங்கில் கேள்வியெழுந்தது. அவரது படைப்புகளை குறித்த ஆழ்ந்த கேள்விகளை விக்னேஷ் ஹரிஹரனே கேட்டார்.   


அடுத்த அமர்வு மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மூ யூசுப்பினுடையது. மொழிபெயர்ப்பாளர் அழகிய மணவாளன் அமர்வை மட்டுறுத்தினார். முதன்மையாக மணவாளன் யூசுஃப் அவர்களது ரசிகர்,  குளச்சல் யூசுப்பின் அனைத்து மொழிபெயர்ப்பு பணிகளையும் அழகாக தொகுத்துச் சொன்னார். தேவைப்படும்போது அத்தகவல்களைக்கொண்டு கேள்விகளுக்கான பதிலை இன்னும் தெளிவுபடுத்தினார், அவரது நெறியாள்கை தனித்துத் தெரிந்தது. சென்ற ஆண்டு சோ தர்மனின் அமர்வு மிகுந்த கலகலப்பாக இருந்தது, இம்முறை அது  யூசுப்பினுடைய அமர்வாக இருந்தது. அழகிய குமரித்தமிழில் நேரடியான பதில்கள். எந்த அலங்காரமுமில்லை ஆனால் நல்ல அழகு. அவரது மொழிபெயர்ப்புக் கொள்கைகள் வியப்பளித்தன, பெரும்பாலும் அது அவரது தனிக்கொள்கைகள். ஒரு கல்வியாளரின் கொள்கைகள் அல்ல, ஒரு பெட்டிக்கடைக்காரரின் கொள்கைகள், அவைதான் வென்றிருக்கின்றன.  யூசுப் சுந்தர ராமசாமியிடம் இருந்து மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தை பெற்றதாக சொன்னார். அவரது சங்க கவிதைகளின் மலையாள மொழிபெயர்ப்பை காதாரக்கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன், பார்ப்போம்.   


தேநீர் இடைவேளைக்குப்பிறகு முதல் அமர்வு எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியினுடையது. சிறிய பதற்றத்துடன் நான்தான் அதை ஒருங்கிணைத்தேன். கார்த்திக் தோழமை உணர்வு மிகுந்தவர். எந்தப்பின்புலமும் இன்றி தானெழுந்த சுயம்பு. இயன்றவரை உரையாடலை அவரது ஆளுமை வெளிப்படும் வகையில் எடுத்துச்சென்றதாகவே நம்புகிறேன். இன்னும் கேட்காத கேள்விகள் நிறைய உண்டு, பின்னும் பேசவேண்டும். 

அன்றையநாளின் இறுதி அமர்வு அ வெண்ணிலா அவர்களுடனானது, நண்பர் யோகேஸ்வரன் நெறிப்படுத்தினார். யோகி மிக விரிவான ஒரு துவக்கத்தை அளித்தார். அ வெண்ணிலா பாந்தமான தோற்றத்தில், அவ்வாறே விடைகளையும் கொடுத்தார். மிக அதிகமான கேள்விகளை எதிர்கொண்டு விரிவான பதில்களை அளித்தார். அவரது உரையாடல் மொழி அழகியது, அது கேள்விகளையே தன் விருப்புக்கு வளைத்தெடுத்து விடுகிறது. அவர் ஒரு படைப்பாளியாக மேலெழுந்த தன்  பின்புலத்தை விரிவாகப்பேசியது, முக்கியமாக தன தந்தை குறித்து பேசியது ஆழமாக மனதில் நிற்கிறது. அவர் எதிர்கொண்ட பெரும்பாலான கேள்விகள் கங்காபுரம் நாவல் தொடர்பானது. மேலும் வரலாற்று நாவல்களில் அவர் எடுத்துக்கொள்ளும் தரப்பு , தகவல்களுக்கான தரவுகள்  இவை நீண்ட விவாதத்துக்காளாயின. 


உணவுக்குப்பிறகு இலக்கிய பொதுஅறிவு போட்டி, நண்பர்கள் ஆவலாக எதிர்பார்த்தது. க்விஸ் செந்தில் போட்டியை நடத்தினார், 30 கேள்விகள். தம்பி சக்திவேல்  இரு சரியான பதில்களை  சொல்லி புத்தகங்களை வென்று அசத்தினான். எனக்கும், அனங்கனுக்கும், பிரபுவுக்கும் புத்தகங்கள் கிடைத்தன. மீண்டும் குஜராத்தி சமாஜுக்கு திரும்பினோம். முதல்நாள் சரியாக தூக்கமில்லாததால் அரட்டைக் கச்சேரியில் பங்கேற்கவில்லை.  


அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு முன்னே அண்ணன்கள் சீனுவும் பிரபுவும் ராஜஸ்தானி சங் மண்டபத்திற்கு சென்றனர்.  நாங்கள் பின்னே  சென்றோம், ஜெ-வுடன் காலையில் ஒரு தேநீர் நடை உண்டு அது உணவுக்கு முன்பான சுவை தூண்டல் போல ,  தேநீர் நடை  அன்றைக்கு மாலை மேடையில் சாருவும் போகனும் பேசும்பொருளாக மாறும் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. 


இரண்டாம் நாள் விழா துவங்குமுன் மூன்று அமர்வுகள். முறையே பதிப்பு விளம்பரம் மற்றும் முன்னெடுப்பு தொடர்பாக கனிஷ்கா குப்தா மற்றும் மேரி தேரசி குர்காலங்  இருவரும் கலந்துகொண்ட அமர்வை  க்விஸ் செந்தில்  மொழிபெயர்ப்பும்  செய்து ஒருங்கிணைத்தார். முற்றிலும் புதிய துறை, புதிதாக அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்தன, செந்தில் அரங்கில் எப்போதும் ஒரு க்விஸ் நடத்துபவராகவே நடந்துகொள்கிறாரோ என்ற எண்ணம் திடீரென எழுந்துவிடுவதை தவிர்க்க முடியவில்லை. 


அடுத்த அமர்வு அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்த எழுத்தாளர் மமங் தய் கலந்துரையாட ராம்குமார் மொழிபெயர்த்து மட்டுறுத்தினார்.  மமங் தாயுடனான உரையாடலில் தற்போதைய அருணாச்சலின் பண்பாட்டு மாற்றங்கள், பூசகர் சன்னதம் கொள்ளும் நிலை, அவர் படைப்புகளில் உள்ள பாத்திர, நிலவியல் சித்திரங்களை குறித்து பேசப்பட்டது. மேலும் மமங் தய்யை எவ்வகையிலும்  அயலானவராக நினைக்க முடியவில்லை, உடல்மொழி முதற்கொண்டு. நதிகள் குறித்த கேள்வி, பேராசிரியை லோகமாதேவிக்கான அவரது பதில் இவை முக்கியமானவை.

அனைவரும் எதிர்நோக்கியிருந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா அமர்வு எழுத்தாளர் ஜெயமோகனால் ஒருங்கிணைக்கப்பட்டது. சாரு தன் அமர்வை அஜிதனில் இருந்து துவங்கிப் பேசினார். உண்மையில் சாரு அவருக்கே உரிய மெல்லிய பகடியோடும், நேர்மையோடும் கேள்விகளை எதிர்கொண்டார். ஒரு கேள்வியையும் மறுக்கவில்லை. நல்ல கேள்விகளென்றார், எதையும் மறைத்துப்பேசவும் இல்லை. அரங்குக்கு வெளியே அவரது புத்தகங்களைப் பார்க்கும்போது, இவ்வளவும் செய்திருக்கிறாரா என்று வியக்கத்தான் தோன்றியது. அவ்வாறு துவங்கி விருதுவிழா இறுதியில் தன் இளையவரான ஜெயமோகனுக்கு ஆசிகள் கூறி நீடூழி வாழ வாழ்த்தி தான் துவங்கிய நிகழ்வை முடித்தார் சாரு. விஷ்ணுபுரத்தவர் இவ்விருதை ஏற்று தங்களை கௌரவித்ததற்காக சாருவிற்கு நன்றி தெரிவித்தனர். 

இரு நாட்களிலும் நிகழ்வு துவங்கும்போது ஒலித்த பாடல்கள், சகலகலாவல்லி மாலையிலிருந்து பார்கவி அழகான பாடல்களை பாடினார். திருமூலநாதன் திருப்புகழும், திருப்பாவையும் பாடினார்,தண்டையணி வெண்டையம் என்னும் பாடல் நாஞ்சில் நாடனை நினைத்தால் நாவில்  எழுவது. அது கும்பமுனி கும்பிடும் தம்பிரானே என்று முடியும் அருணகிரியாரின் பாடல். இரண்டாம் நாள் திருமூலநாதன் ஓங்கி உலகளந்த என்னும் பாவை பாடினார். அது வைணவர்கள் வாழ்த்தும் பாவுமாகும், அவ்வாறுதான் சாருவின் அமர்வு துவங்கியது, அவருக்கான பிறந்தநாள் வாழ்த்தாகவும் ஆனது. குக்கூ  தாமரை பாடிய பாடல் தாயுமானவரா வள்ளலாரா தெரியவில்லை இனிமையாக இருந்தது. இருநாட்கள் முழுக்க வெவ்வேறு முகங்கள், பற்றிக்கொள்ளும் கரங்கள், பத்மநாபன் சார், ஜெயராம், சக்திவேல், திருமூலநாதன், புதிதாக அறிமுகம் செய்துக்கொண்ட முரளி சார், ஈநாடு ராஜு,  எல்லாம் மதுரம் ததும்புதல்.  எனது புதுவை நண்பர் சிவபாலன் குடும்பத்தோடு வந்திருந்தார், நான் அவரது   மகன் தர்ஷனின் பால்ய  நண்பன்.    

  

 உண்மையில் சீனு தொடர் பயணத்திலிருந்தார், திருநெல்வேலி பின் ஓசூர்,  அங்கிருந்து கோவை எல்லா பயணமும் கடலூர் வழியே . கண்கள் வீங்கியிருந்தன, நீர் கசிந்தது.  மெட்றாஸ் ஐ இருக்குமோ என்ற எண்ணம் அவருக்கு இருந்தது,எங்களுடைய நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்து உள்ளே லேசாக குளிரடித்தது. ஆனால்  எப்போதும் குளிர் கண்ணாடி அணிந்திருக்கும் சாரு அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இரண்டாம் நாள் வெகுநேரம் சீனுவுடன் கதைத்துக்கொண்டிருந்தார் .  பலமுறை நாங்கள் வலியுறுத்தியும் சீனு மருத்துவரை பார்க்க மறுத்துவிட்டார். அவருக்கு இரு நாட்களும் முழுமையாக அங்கிருக்க வேண்டும். மிகவும் வருத்திக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும், ஆனால் தான் வழிபடும் இலக்கியத்துக்காக அவர் என்னமும் செய்யத்துணிவார் . சேய்மையின் ஆதூரத்தால் இம்முறை மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார் கூட.     


தாமரைக்கண்ணன் 

19-12-2022

(விழா) புகைப்படங்கள் : மோகன் தனிஷ்க் 

Comments

  1. மிகவும் அருமை மகனே. நான் விழாவிற்கு வராத குறையை நீ தீர்த்து விட்டாய். நானும் முறையில் விழா முழுதும் சுருக்கமாகக் கூறி உள்ளது சால்ப்ய். ஜெ-க்கு அனுப்பலாமே

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பா. நான் விழா முழுவதையும் பதிவு செய்யவில்லை நண்பர்களுக்காக எழுதியது. 🙏

      Delete

Post a Comment