சிறுவந்தாட்டில்
இருந்து வளவனூர் செல்லும் சாலை
மிகவும் அழகானது ஏரிக்கரை, வயல்கள்,
சவுக்குத்தோப்புகள் நிறைந்தது. முன்பு அங்கு ஏரிக்கரை
தாண்டி கங்காநகர் பகுதியில் சாலை ஓரத்திலேயே கொற்றவை
சிலை ஒன்று கண்டிருந்தேன்.
மரநிழலில் மண்ணில் காலூன்றி நின்றுகொண்டிருந்த
சிலை காலப்போக்கில் தளமிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது,
பின் சுற்றிலும் தகரக்கொட்டகை எழும்பியது, சூலங்கள் பெருகின. இன்னும்
சிலகாலம் சென்றால் சிலை கருவறை
புகுந்துவிடும் எல்லா சாத்தியங்களும் ஏற்பட்டுவிட்டது,
இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். திருமா அண்ணனும்
இருந்ததால் தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு
சிலையை அருகில் சென்று பார்க்க
அனுமதி கேட்டோம், நான் பயந்ததிற்கு மாறாக
அருகிலிருந்த பெரியவர் தாராளமா பாருப்பா
என அனுமதி அளித்தார்,
எட்டுக்கைகளுடன் வெள்ளிக்கண்கள் பொருத்தப்பட்ட அழகிய
கொற்றவை மான் வாகனத்துடன் நின்றிருந்தாள்,
கண்ணாரக் கண்டபின் சிலையை சுற்றிவந்தோம்
எழுத்துப்பொறிப்பு ஏதும் கிட்டவில்லை. மீண்டும்
அழகாக உடுத்திவிட்டு மலர்களையும் சூட்டி வைத்தேன். திருப்திதானே
என்பதுபோல சிரித்தாள், நானும் சிரித்தேன் கிளம்பும்போது
எங்க போயரப்போற இங்கதான என்று முதுகுக்குப்பின்
குரல் கேட்டது.
தாய் தெய்வ வழிபாடு பலகூறுகளை
உள்ளடக்கியது, சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய உரை
ஒன்றில் பெண்தெய்வங்களை மூதாய், கன்னி, அன்னை,
ஆற்றல்மிக்க இரக்கமற்ற தெய்வம் என நான்கு
வகையாக பிரித்துக்கொள்ளலாம் என்கிறார்.
தமிழகத்தில் கொற்றவை வழிபாடு தற்போது
துர்க்கை வழிபாடாக மாறி சைவத்தின்
ஒருபகுதியாக மாறியிருக்கிறது. ஆனால் அது அப்படிமட்டுமல்ல
என்று பலவகையில் நிறுவமுடியும்.
பல இடங்களில் பல்லவர்களின்
கொற்றவை விஷ்ணுவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டதுண்டு, மாமல்லை மகிஷாசுரமர்த்தனி மண்டபம்
ஒரு உதாரணம், அதுபோலவே சிங்கவரம்
ரங்கநாதர் ஆலயத்திலும் உண்டு, கவனித்தால் தெரியும்
ஒரே கற்பாறையில் ரங்கநாதரும் சற்று தள்ளி கொற்றவையும்
புடைப்புச்சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பது. திருக்கோவிலூர் பெருமாள் கோவில் கொற்றவையை
திருமங்கையாழ்வார் ‘விந்தம் மேவிய கற்புடை
மடக்கன்னி காவல் பூண்ட கடி
பொழில்’ என்று மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
தொண்டை மண்டலத்திலும், நடுநாட்டிலும் நிறைய தவ்வை மற்றும்
கொற்றவை சிற்பங்களை பார்க்க முடியும். பெருங்கோவில்களிலும்
காணலாம், ஏரிக்கரை மரத்தடிகளில் காணலாம். சிவன்
ஆலயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோட்டத்தின்
தெய்வமாக வடக்கு நோக்கி நிற்கிறாள்
கொற்றவை, பின்னர் அவள் நான்கு
கரங்களுடன் மகிஷத்தலை மீது நிற்கும் துர்க்கையாக
மட்டும் சுருங்கிப்போகிறாள். பலகைக்கற்களில்
உள்ள கொற்றவைகளின் பட்டியல் பெரிது, பலகைக்கல்
இல்லாவிட்டாலும் தச்சூர் கொற்றவை சிலை
விவரிக்கஒண்ணாத அழகி. சிங்கம்
மீதமர்ந்த கைலாசநாதர் ஆலய கொற்றவை பல்லவர்
கலைப்பாணியில் அழகியது. மலையமான்கள் பணியில்
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலய கொற்றவை அற்புதமானது.
சோழர்கால கலைப்பாணியில் தன்னிகரற்ற கொற்றவை புள்ளமங்கையில் இருக்கிறாள்,
பட்டீஸ்வரம் ‘துர்க்கை’ வரமருளும் தெய்வமாக புகழ்பெற்றவள்.
பல்லவர்கள்
கொற்றவையை சிங்கமேந்தி போருக்கு தயாராக நிற்பவளாக,
மகிடனுடன் போரிடுபவளாக, போர்வென்று அவன் தலைமேல் நிற்பவளாக
மூன்று நிலைகளில் வடித்திருக்கிறார்கள். நாம்
பலகைக்கற்களில் காணும் கொற்றவை சிங்கத்தோடு
சேர்ந்து கொம்புடைய மானையும் வாகனமாக்கிக்கொண்டவள். எட்டுக்கைகளில் பிரயோகச்சக்கரமும்
சங்கும், நீண்ட மூவிலைவேல் சூலமும்,
வில்லும், வாளும் கேடயமும், அம்பும்
கொண்டு வரமருளும் கையும், இடைமீதமர்ந்த கையுமாக
நிற்பவள். இரு தோளிலும் ஆவநாழி
சூடி, சன்னவீரமும், மார்க்கச்சும் அணிந்து தான் முடித்த
போர்த்திறம் சொல்பவள். ஆரம்ப கால கொற்றவைகள்
(சிங்கவரம், திருவக்கரை) வேட்டையாடி சிங்கத்தின் மீது காலூன்றி நிற்கும்
வேட்டைக்காரன்போல ஒருக்காலால் மட்டும் மகிடத்தின் தலையை
மிதித்து நின்றனர். அழகியலும் பரவலுமாக பின் மகிடத்தலை
பீடம்போலாகிவிட்டது. கால
அமைதி கொண்டு சந்திராதித்தியர்களோ, சாமரங்களோ,
காவல் பெண்களோ கொற்றவையின் அருகிருப்பர்.
மிக முக்கியமாக இந்த கொற்றவையின் இருபுறமும்
இரு ஆண்கள் அமர்ந்த வண்ணம்
இருப்பார்கள், அக்கால தற்பலிச்சடங்கின் படி,
ஒருவர் தன் தலையரிந்து நவகண்டம்
கொடுப்பார், மற்றோருவர் தன் தசையரிந்து அரிகண்டம் கொடுப்பார். அரிதாக நவகண்டமும் அதை
ஏற்கச்செய்யும் பூசகனும் வடிக்கப்பட்டிருப்பார்கள். சிலப்பதிகாரத்திலும்,
முருகாற்றுப்படையிலும் வரும் கொற்றவை, கொற்றி
இந்த வடிவம்தான்.
அங்கிருந்து
மதகடிப்பட்டு மையச்சாலைக்கு வந்தோம், வழியில் உள்ள
மேலுமிரு அம்மன் கோவில்களை குறித்துக்கொண்டோம்,
இன்று சேஷங்கனூர் சிவன் கோவிலை பார்த்துவிட
வேண்டும் என்பதால் இந்த முடிவு,
வேறெங்கும் தாமதிப்பதிற்கில்லை. திருமா திருபுவனை கடக்கும்போது
முன்பு நண்பர்களுடன் திருபுவனை பெருமாள் கோவில் வந்ததையும்
தோத்தாத்ரிநாதர் மற்றும் பள்ளிகொண்ட பெருமாளை
வணங்கியதையும் நினைவு கூர்ந்தார். அங்கிருந்து
சந்நியாசிக்குப்பம் செல்லும் வழியில் ஏழன்னையர்
ஆலயமொன்றிருக்கிறது, சப்தமாதர்களுக்கு தனியே கோவில்கள் அமைவது
ஆச்சர்யமானது, இங்கு ஊருக்கு வெளியே
ஒரு குளக்கரையில் சப்தமாதர்களுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது
இங்கு சிவன் மற்றும் பரிவார
தெய்வங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு
சிவன் கோவில் போல மாற்றப்பட்டுள்ளது . தமிழகத்தில் ஆலப்பாக்கத்தில் இதே போன்று மற்றோர்
ஆலயம் உள்ளது. இந்தக்கோவிலின் அமைவிடம்
முந்தையகாலத்தில் இந்த வழிபாடுகள் மைய
கோவில் வழிபாடுகளில் இருந்து விலகி நின்றமை
காட்டுகிறது. கோவிலுக்கு உள்ளே இப்போதும் தற்பலி
கொடுக்கும் வீரனின் சிலையுண்டு.
சேஷங்கனூர்
சிவன் கோவில் குறித்து பாகூர்
புலவர் குப்புசாமி எழுதியிருக்கிறார். செழிய
கங்கநல்லூர் தற்போது சேஷங்கனூர் எனப்படுகிறது.
சிலகாலம் முன்பு இந்த கோவிலிருந்த
சிலைகள் திருடுபோய்விட்டன, அதன்பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டன. கோவிலும் திருப்பணிசெய்து குடமுழுக்கு
செய்யப்பட்டதாக திருமா கூறியிருந்தார்.
நாங்கள் சந்நியாசி குப்பம் தாண்டி வேறுவழியாக
சேஷங்கனூர் செல்ல நினைத்து, தடம்
மாறி பின் மீண்டும் சந்நியாசி
குப்பம் வந்து சேஷங்கனூரை அடைந்தோம்.
அந்த ஊர் முகப்பிலேயே இருபுறமும்
சூலம் பொறித்த நெடுங்கல் ஒன்று
இருபக்கமும் கல்வெட்டுகளை தாங்கி சற்றே சாய்ந்தாற்போல
நின்றது.
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
03-12-2022
Comments
Post a Comment