சிறுவந்தாடு சேஷங்கனூர் பயணம் 4

 செழிய கங்க நல்லூர் தற்போது சேஷங்கனூர் என்று (சேசாங்கனூர் - என்றும் )  அழைக்கப்படுகிறது. பாகூர் புலவர் குப்புசாமி மற்றும் வில்லியனூர் வெங்கடேசன் ஆகியோர் இந்த கோவிலின் கல்வெட்டுகளை படியெடுத்து எழுதியுள்ளனர். சிலகாலம் முன்பு இக்கோவிலின் உற்சவ விக்ரகங்கள் திருடு போய்விட்டன. தற்போது கோவில் உயரமான மதில்களுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.   நானும் திருமா அண்ணனும்  சென்றிருந்தபோது கோவில் பூட்டியிருந்தது, காத்திருந்து நாட்டாண்மைக்காரர் திரு சேதுராமன் உதவியுடன் கோவிலுக்குள் சென்றோம். அம்மையப்பன் கருவறை  தவிர அனைத்துமே புதிதாக கட்டப்பட்டுள்ளது. சுற்றுப்பிராகாரத்தில் விநாயகர், முருகன், பெருமாளுக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. 



புலவர் இந்த ஆலயத்தில் கிடைக்கும் முதன்மையான  கல்வெட்டுக்கள் மாறவர்மன் குலசேகர  பாண்டியன்(கி பி 1271) மற்றும் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தது என்று கண்டறிந்துள்ளார். கோவில் பலமுறை செப்பனிடப்பட்டிருப்பதால் கல்வெட்டுகள் சீராக படியெடுக்கும்படி இல்லை. சிதைந்தும் தொடர்பற்றும் உள்ளன. இத்தகவலை இவர் பதிவு செய்திருப்பது  1977ம் வருடம்.  ஆகவே இது சோழர் காலத்து கோவிலாக வாய்ப்பிருந்தாலும் முழுமையான கல்வெட்டுகள் ஏதும் கிடைக்க வில்லை என்றும் கூறுகிறார். 


அழகிய நாயனார் ஆலயத்து வெளிப்பகுதிகளில் பஞ்சர அமைப்பு மிகவும் அழகியது, கோபுர பஞ்சரம் மற்றும் கும்ப பஞ்சரம் இரண்டும் எனக்கு தாதாபுரத்தின் அழகியலை நினைவுபடுத்தின . அங்கு இருப்பது கபோத பஞ்சரம் என்னும் தனித்த வகை அழகு. பழைய சண்டிகேஸ்வரருக்கு முகமெல்லாம் சந்தனம் பூசி, புடவையும் அணிவித்து மரத்தடியில் வைத்திருந்தது. அவருக்கு யோகமிருந்தால் விரைவில் ஏதாவது அம்மனாக ஆகலாம். இவ்வூரிலேயே அம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளது, அதை நாங்கள் பார்க்க வில்லை. இன்னொரு முறை இதற்காக செல்லவேண்டும். 


  செழிய கங்க நல்லூர், திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து வடபிடாகையை சேர்ந்தது என்றும் வீராவதார வளநாட்டை சேர்ந்த ஊர் என்றும் கல்வெட்டுகள் சொல்கின்றன. இங்கு இருந்த தேவதான நிலங்களைக் எல்லைகள் சொல்லிக் குறிப்பிடுகையில் இவ்வூரின் நிலஅமைப்பு சொல்லப்படுகிறது. இங்கு வன்னைக்குளம், பூவங்குழி, போத்த நீர்வழி என்ற நீர்நிலைகள் இருந்ததும், சகடைப்பெருவழி, கோதண்டராமன் வழி ஆகிய பாதைகள் இருந்ததும் கல்வெட்டுகளில்  கூறப்படுகின்றன.


பாண்டியர் காலத்தில் இங்கு நெசவுத்தொழில் செழித்திருந்தது, நெசவு நெய்யும் கைக்கோளர்  மற்றும் அவர்களின் உற்பத்திப்பொருளான துணிகளை வாணிகம் செய்யும் சோழிய செட்டியார்கள், இங்கு இருந்தார்கள். கல்வெட்டில் சோழிய செட்டியார்கள் தெரு காணப்படுகிறது . இவ்வூரிலேயே பாவோடும் பிள்ளையார் என்னும் பெயருள்ள பிள்ளையாரை புலவர் எழுதியிருக்கிறார். நெசவுத்தொழில் செய்தோருக்கு வரிகள் இட்டு மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இவ்வூரில் நெசவுத்தொழில் ஏதும் இல்லை. 


அழகிய நாயனாரும்  அம்மையும் தனித்தனி கருவறைகளில் கிழக்கும் தெற்கும் நோக்கியபடிக்கு இருக்கிறார்கள். லிங்கத்திருமேனி பெரிய ஆவுடையாரோடு உள்ளது, இறைவன் சிரஸிலிருந்து கலசம் வரை  திறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் முகப்பிலேயே இருபக்கமும் சூலமும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்ட ஒரு நெடுங்கல் உள்ளது. சேஷங்கனூரின் மிக அருகிலேயே புராண சிங்க பாளையம் என்னும் பி எஸ் பாளையத்தில் விரைவில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட உள்ளது.   அங்குள்ள கோட்டைமேட்டில் பம்பையாற்றங்கரையில் சில மணல்மேடுகள் உள்ளன.அங்கு கிடைத்த மண்பாண்ட ஓடுகளை வைத்து, அப்பகுதிகளை  ஆய்வுக்குட்படுத்த ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.  


நிறைவு 

Comments