சிறுவந்தாடு சேஷங்கனூர் பயணம் 1

  வழக்கத்தைவிட பெரிய காரியங்களை ஒப்புக்கொள்ளுகையில் அது இன்னும் கொஞ்சம் நம்மை உந்துகிறது. நிகழும்போது மட்டுமே கிட்டும் இயக்கஆற்றல் அது, நிற்கும் தேரும், குதிரையும் அந்த ஆற்றலின் குறியீடு மட்டுமே. அடுத்த வருடத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னுடைய பேராசை, மற்றோன்று தென்னகத்தில் நிகழும் பெரும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமென்பது.  அதன்படி இரண்டு விதமாகவும் திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறேன். ஒவ்வோர்நாளும் சில வரிகளாவது எழுதவேண்டும், ஏன் ஒருமாதம் முன்பாக இன்றிலிருந்து துவங்கக்கூடாது. 

 எனது நண்பர் திருமாவளவன், திருமா எனக்கு மூத்த சகோதரரும் தான்.விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்.எங்கள் புதுவை வெண்முரசு கூடுகையின் முக்கியப்புள்ளியும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நீண்டகாலப் புள்ளியுமாவார்.  அருகாமையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவமுள்ள  இடங்களுக்குசெல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம். 27.11.2022 ஞாயிறு அன்று காலை மடுகரைக்கு சென்றேன் அங்கு வந்து என்னை அழைத்துக்கொள்வதாக திருமா கூறியிருந்தார். 

மடுகரை புதுச்சேரியைப் பொறுத்தவரை பலவகையில் முக்கியமானது, அந்த ஊர் புதுவையின் எல்லைகள் ஒன்று.  மடுகரைக்கு தெற்கே  தமிழ்நாட்டின் கொங்கம்பட்டும்  மேற்கே  சிறுவந்தாடும் உள்ளன. மடுகரையில் உள்ள சிவன் ஆலயம் மரக்காலீஸ்வரர் கோவில், அருகிலேயே திரௌபதை அம்மன் ஆலயமும் உள்ளது. புதுவையை சுற்றியுள்ள கிராமங்களில் திரௌபதை அம்மன் கோவில்கள் கட்டாயமிருக்கும். ஆனால் அரவான் வழிபாடு சில ஆலயங்களில் தான் விமரிசையாக நடக்கும். புதுவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிள்ளையார் குப்பமும் மடுகரையும் அரவான் தேரோட்டம் (களப்பலி சடங்குக்கு) பெயர்பெற்றவை.  புதுவையின் முன்னாள் முதல்வரான வேங்கடசுப்பா ரெட்டியார் பிறந்த ஊர் மடுகரை. அவரது சிலையும் நினைவு வளைவும் ஊரில் உண்டு . முன்னொரு காலத்தில் பட்டிமன்றங்களும், அரசியல் கூட்டங்களும் விமரிசையாக நடத்தப்பட்ட ஊர். ஒருவகையில்  பட்டாம்பாக்கம், வளவனூர், கரியமாணிக்கம் ஆகியஊர்களின் மையமாகையால் பாண்டிச்சேரி வழித்தடத்தோடு கடலூர், பண்ருட்டிக்கும், விழுப்புரத்திற்கும்கூட கிராமங்களை இணைக்கும் வழியாகவும்  இந்த ஊர் முக்கியமானது. எங்களது பயணத்திட்டம் மடுகரையிலிருந்து துவங்கியது.

 திருமா அண்ணன் வழக்கமான தன்னுடைய பரபரப்பு முகமனுடன் தனது வீட்டிற்கு கொங்கம்பட்டு வழியே அழைத்துச்சென்றார்.  அழகிய கிராமம், மலட்டாறு அவர்கள் வீட்டின் எதிரே  கூப்பிடுதூரத்தில் ஓடுகிறது, ஒருகணம் அகம் பொங்கியது.நீருக்காக பல மைல்கள் அலைந்து,பலநாட்கள் தூக்கம் தொலைத்திருக்கிறோம், எனக்கு பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் அம்மை போட்டிருந்தது . தம்பி வேறுவழியின்றி அடிகுழாயில் நீர் பிடித்துக்கொண்டிருந்தான், அவனுக்கு அன்றுபத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு, காலையில் ஐந்து  மணிக்கு எழுந்து நீர்பிடிக்க வேண்டும், இறுக்கமாக குழாயின் கைப்பிடியை அழுத்திக்கொண்ருக்கும்  அவனதுமுகம் நினைவில் மின்னல் போல்வந்து போனது. தயக்கத்தோடு வீட்டிற்குள் சென்றேன் அவரது தந்தை தொலைக்காட்சி பெட்டியில் கோவில்களை பார்த்துக்கொண்டிருந்தார். முகமன் சொல்லிவிட்டு புழக்கடைக்கு சென்றேன் அவரது அம்மா பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தார், எங்களைக்கண்டதும் எழுந்து வந்தார் அன்னையருக்கே உண்டான இனிய முகம், அக்கணம் அந்த வீடு என்னுடையதாகிவிட்டது, என்னுடைய இறுக்கங்களையெல்லாம் பிரகாசமான அந்தப்புன்னகை நீக்கிவிட்டது. அண்ணி காப்பி கொண்டுவந்தார் பேசிக்கொண்டே அங்கிருந்த புத்தகங்களை புரட்டிக்கொண்டு காபி குடித்தேன். வீட்டாரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மீண்டும் மலட்டாறு கடக்கையில் எல்லா ஆறுகளும் ஒரு துணையாறு மலட்டாறு என்னும் பெயரில்உண்டு என்றார். திருமா ஆழ்ந்துபடிப்பவர், வாசகராகவே இருப்பது என்னும் கொள்கையுடையவர்.இலக்கியக்கூடுகைகளில் சிறப்பாகப் பேசுவார், எழுதுங்களேன் என்றால் சிரித்துக்கொண்டே மறுத்துவிடுகிறார்.என்றேனும் எழுதுவார் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

மீண்டும் மடுகரையிலிருந்து சிறுவந்தாடு செல்லும் சாலைக்கு திரும்பினோம்,சிறுவந்தாடு பேருந்து நிறுத்தத்திற்கு சற்றுதூரம் முன்பே மோட்சக்குளம் என்னும் இடத்தில் வயல்களுக்கு நடுவே ஒரு காளியம்மன் கோவில் உண்டு. சிறுவயதில் அங்குஅடிக்கடி வந்திருப்பதாக திருமா சொன்னார் . திருமா ஒரு திருமண் தரித்த சாக்தர், தெய்வங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கிறார். எனக்கும் நீண்ட நாட்களாகவே அங்கு செல்ல வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. சாந்த காளியம்மன் என்ற பெயரில் ஓரிரு வருடங்களுக்கு முன்புதான் குடமுழுக்கு செய்யப்பட்டிருந்தது. தொல்லியல் ஆர்வலர்களுக்கு குடமுழுக்கு என்னும் சொல் அச்சமூட்டும் ஒன்று. பெரும்பாலான கல்வெட்டுகள் சிமெண்ட் பூசி மறைக்கப்படும், மின்சார தேவைக்காக சகட்டுமேனிக்கு துளைகளிட்டிருப்பார்கள் . பல்லவர் கால சிலைகளைக்கூட சிமெண்டு கொட்டி கால்வரை புதைத்துவைத்திருப்பார்கள். அதிட்டானம் எந்தவகை ,தூண்களின் வேலைப்பாடுகள் என்னென்ன என்றே தெரியாத படிக்கு பூசி வைத்திருப்பார்கள். கோபுர கலசம் வரை கல்லால் ஆன கோவில்களைக்கூட விடாது வண்ணங்களை கொட்டி மெழுகியிருப்பார்கள்.  மக்கள் அறியாமையால் செய்வது வேறுவகை அவர்களைஆற்றுப்படுத்த முடியும், பல இடங்களில் தொல்லியல்துறை கோவில்களில் கதியே இதுதான்.     

சாந்த காளியம்மன் ஆலயம் மிகச்சிறியது, சாலையிலிருந்து திரும்பி முப்பது அடிகள் வரை இருபுறமும் வயல்களுக்கு நடுவே உள்ள பாதையின்முடிவில் கோவில் இருக்கிறது . எங்களை அதிகம் ஏமாற்றாமல் வெளியேயே  ஒருநந்தி சிலை இருந்தது, அதிகவேலைப்பாடில்லாத பழைய பாணி. கோவில்வாயிலுக்கு பக்கவாட்டில் தரையில் இச்சிலை மட்டும் வேப்பமர நிழலில் , எதிரிலுள்ள வயல் கதிர்களை நோக்கியமர்ந்திருந்தது. எதிரே ஈசனில்லாத நந்திக்கு இந்த பெருவெளியே இறைவனாகிவிகிறது. எல்லா ஒற்றை நந்திகளும் அருவமான சிவனைக்கண்டு அமர்ந்திருக்கிறது, மற்றவர்களுக்கு கிடைக்காத இந்த தரிசனத்தை உணர்ந்தவர்கள் நந்தியை மட்டும் பெரிதாக அமைத்து வழிபடுகிறார்கள். கர்நாடகத்தில் இம்மரபு உள்ளது.  

ஆலயத்திற்கு வெளிப்புறமாகவே இரும்பு கதவுகளுக்கு பின்னேஒரு பலகைக்கல் கொற்றவை எட்டுக்கரங்களுடன் அருள்செய்கிறாள். பல்லவர்காலமோ சோழர்காலமோ தெரியவில்லை. ஞாயிறு ராகுகாலத்தில் சிறப்புபூசைகள் ஊடாக பகுதி மக்களிடம் பிரசித்தி பெற்றிருக்கிறாள்.  அதே ஆலய வளாகத்தில் தனிச்சந்நிதியில் உள்ள விநாயகரை பல்லவர்பாணியென்றே உறுதியாக சொல்லலாம் கைகளில் பாசாங்குசம் இல்லாது முள்ளங்கி, கனி& கரும்புக்கட்டுடன் உள்ள அழகிய கணபதி. முன்சொன்ன நந்தியின் ஈசன்  இப்போது ஆலய வளாகத்தினுள்ளே வைக்கப்பட்டிருக்கிறார். மையக்கருவறையிலுள்ள காளியம்மனை காணமுடியவில்லை இணையத்தில் பார்த்தமட்டில் பிற்காலப்பணியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். கருவறை வெளியிலிருந்தே வணங்கிவிட்டு வந்தோம் . 


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

01.12.2022 


Comments