சிறுவந்தாடு சேஷங்கனூர் பயணம் 2

 

சென்ற பகுதியில் புதுவையின் இரண்டாவது முதல்வர் வேங்கட சுப்பா ரெட்டியாரை குறிப்பிட்டிருந்தேன் இல்லையா, அவரது பெயரில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அந்த பெயரின் உருமாற்றம் கீழ்க்கண்டவாறு நிகழ்வது, வேங்கட சுப்ரமணியன் - வேங்கட சுப்பராயர் - வேங்கடசுப்பா இப்படி. திருப்பதி மலையில் வாழும் வெங்கடேசன் திருமால் அல்ல முருகன் என்றொரு வாதம் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துள்ளது, நீண்டகாலம் சைவர்களால் முன்வைக்கப்பட்ட வாதம் இது. கெடிலக்கரை நாகரீகம் நூலை எழுதிய பேராசிரியர் சுந்தரசண்முகனார் இந்த விவாதத்தைப்பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்  (இலக்கியத்தில் வேங்கட வேலவன்)அதற்கு சான்றாவணங்களாக குறிப்பிடும் விஷயங்களில் வேங்கட சுப்பிரமணியன் என்னும் பெயர்ப்புழக்கமும் ஒன்று.

ராமானுஜர் காலத்திலிருந்து இந்த விவாதம் இருந்துள்ளது, கடவுள் சிவனா, விஷ்ணுவா  என்று  பரிசோதிக்க சைவ, வைணவ சின்னங்களை கருவறையில் வைத்து பூட்டிவிடுகின்றனர், ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் ஆகையால், இரவில் நாகமாக உருமாறி கருவறைக்குள் சென்று சங்கையும் சக்கரத்தையும் இறைவனின் கைகளில் சேர்ப்பிக்கிறார், காலையில் இதைக்கண்டு  இறைஉருவம் திருமாலே என்று அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இது கதை , ஆனால் ராமானுஜரின் பல்வேறு திருநாமங்களில் ஒன்று 'திருமலையப்பனுக்கு சங்கும் ஆழியும் அளித்த பிரான் என்பது'. 

திருப்புகழில் வேங்கட மாமலை நான்கு பாடல்களில் குறிப்பிடப்படுவதும், தேவியர் சன்னதி அற்ற ஏக இறைவனாக திருமலை தெய்வம் திகழ்வதும்,  சங்கும் சக்கரமும் மூலத்திருமேனியில் இல்லாமலிருந்தது பின் ஏற்கப்பட்டதும், கந்த புராணத்தில் முன்பிருந்த தெய்வம் என வேங்கட மாமலை தெய்வமாக முருகன் சொல்லப்படுவதும் சுந்தரசண்முகனார் கூறும் பிற காரணங்கள், இவற்றை கிவாஜ உட்பட  பலர் வலியுறுத்தியுள்ளனர்.  எங்கள் புதுவை வெண்முரசு குழும நண்பர் மணிமாறன் சுந்தரசண்முகனார் வம்சாவளியில் வந்தவர், சண்முகனாரது பெயரன்களுள் ஒருவர். சண்முகனார் முடிவுரையில் இவ்வாறு கூறுகிறார், எங்களுக்கு எம்மதமும் சம்மதமே, எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு முதல்முடி வைத்தீஸ்வரன் கோவிலில் எடுத்தால் அடுத்த மொட்டை திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் கோவிலில் தான் எடுக்கிறோம். மணிமாறன் சமீபத்தில் தனது மகள் நிலாஞ்சலிக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் மொட்டை போட்டது நினைவுக்கு வந்தது, அடுத்து திருவந்திபுரம் எப்போது செல்கிறார் என்று கேட்க வேண்டும்.  

 

திருவேங்கடத் திருப்புகழ்

 

வரிசேர்ந்திடு சேல்கயலோ எனும்,

     உழை வார்ந்திடு வேலையும், நீலமும்,

          வடு வாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே,

 

வளர் கோங்கு இள மாமுகை ஆகிய

     தன வாஞ்சையிலேமுக மாயையில்,

          வள மாந்தளிர் போல் நிறம் ஆகிய ...... வடிவாலே,

 

இருள் போன்றிடு வார்குழல் நீழலில்,

     மயல் சேர்ந்திடு பாயலின் மீது உற,

          இனிது ஆம் கனிவாய் அமுது ஊறல்கள் ......பருகாமே,

 

எனது ஆம்தனது ஆனவை போய் அற,

     மலமாம் கடு மோக விகாரமும்

          இவை நீங்கிடவே இரு தாளினை ...... அருள்வாயே.

 

கரி வாம் பரி தேர் திரள் சேனையும்

     உடன் ஆமு துரியோதனன் ஆதிகள்

          களமாண்டிடவேஒரு பாரதம் ...... அதில் ஏகிக்

 

கன பாண்டவர் தேர் தனிலேஎழு

     பரி தூண்டிய சாரதி ஆகிய

          கதிர் ஓங்கிய நேமியனாம் அரி, ...... ரகுராமன்,

 

திரைநீண்டு இரை வாரியும், வாலியும்,

     நெடிது ஒங்கு மராமரம் ஏழொடு

          தெசமாம் சிர ராவணனார் முடி ...... பொடியாக,

 

சிலைவாங்கிய நாரணனார் மரு-

     மகனாம் குகனே! பொழில் சூழ்தரு

          திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே

 

அடுத்தது நாங்கள் செல்லவிருந்த ஊர் சிறுவந்தாடு . சிறுவந்தாடு, இந்தப்பகுதி மக்கள் பூவரசன்குப்பம் நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியாகும். பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ஆலயம் கவனிப்பாரன்றி இருந்தது ஒரே ஒரு அர்ச்சகர், ஏழ்மையிலும் விடாது ஒருகால பூஜையேனும் செய்துவந்தார். ஒருநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த ஆலயத்திற்கு வந்தார், பின்னர் கோவிலின் நிலை மாறியது. குடமுழுக்கு நடந்தது,  நரசிம்மருக்கு உகந்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில்  வேள்வி , அபிஷேகங்கள் செய்வதற்கு சுவாதி மண்டபம் கட்டப்பட்டது. இன்று பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிகோவில் என்னும் மூன்று நரசிம்மர் ஆலயங்களையும் ஒரே பௌர்ணமி நாளில் பார்க்கும் மரபு தோன்றி விட்டதுபூவரசன்குப்பத்திலேயே நரசிம்மர் ஆலயத்தின் காலத்தை சேர்ந்தது என்று கருதக்கூடிய நாகேஸ்வரசுவாமி என்னும் சிவன் கோவிலும் இன்று பரிகாரத்தலமாக புகழ்பெற்றுவிட்டது. பூவரசன்குப்பம் கூட தென்பெண்ணையின் கிளையாகிய மலட்டாற்றின் கரையிலுள்ள ஊர்தான்.

சிறுவந்தாடு பட்டு நெசவாளர்கள் அதிகம் வசித்த ஊர், இப்பகுதிமக்களின் காஞ்சிபுரம் சிறுவந்தாடுதான். எனது திருமண நிச்சயதார்த்த பட்டு சேலையை இங்கேதான் எடுத்தோம், எனது மனைவிக்குப்பிடித்த இளஞ்சிவப்பு நிறத்தில். திருமணத்திற்கு நாள்குறித்தால் சிறுவந்தாடுக்கு ஒருநடை போய்வருவோம் என்பது இப்பகுதி மக்களின் வழக்கம். இப்போது பட்டு சேலை கடைகள் அதிகம் பெருகி விட்டன, அரசும் ஒரு கடையை நடத்தி வருகிறது. இந்த பட்டுக்கடைக்காரர் ஒருவர்தான் மோட்சகுளம் சாந்தகாளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவியிருக்கிறார்.

இவ்வூரில் திரௌபதை அம்மன் ஆலயமும், அங்காளம்மன் ஆலயமும் சித்திரை, மாசியில் திருவிழாக்களால் பொலியும். இதுமட்டுமின்றி இங்கே ஒரு விஷ்ணு ஆலயமும், சிவன் ஆலயமும் உள்ளன. விஷ்ணு ஆலயம் உள்ளே சென்று வழிபட்டுவந்தோம், கோப்பெருஞ்சிங்கன் காலத்திருப்பணி என்கிறார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், அருகிலேயே கோதண்டராமர் சன்னதி உள்ளது. பழைய கோவிலின் திருச்சுற்று இப்போது எடுத்துக்கட்டப்பட்டுள்ளது, இந்த ஆலயத்தில் மட்டையோடு தேங்காய் படைத்து திருமணத்தடை நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளது. பிராகாரத்திலுள்ள சன்னதிகள் குடமுழுக்கின்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

பெருமாள் கோவிலளவு சிவன் கோவில் பழமையானதாக கருதப்படவில்லை. ஆனால் உயரமான மதில்கள் உள்ள கோவில். ஒருகாலத்தில் புகழ்மிக்கதாக இருந்திருக்கலாம். உள்ளே சென்றால் திருப்பணியின் காலத்தை ஓரளவுக்கு கணிக்க முடியும். செங்குந்த முதலியார்கள் நீண்ட காலம் இருக்கும் ஊராகையால் சிவன் கோவில் அல்லது முருகன் கோவில் கட்டாயம் எழுப்பியிருக்க வாய்ப்புண்டு. சமயங்களில் கல்வெட்டுகள் இல்லாவிட்டாலும் கோட்டத்தில் சிலைகள் பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுடையதாக இருக்கும், இல்லாவிடில் பழைய தவ்வை, கொற்றவை லகுலீசர் சிலைகளை பாதுகாக்கும் இடமாகவும் சிவன் கோவில்கள் இருக்கும், ஆகவே ஒருமுறை கோவிலை பார்க்க விரும்பினேன்.  அருகிலுள்ள ஆலயப்பொறுப்பாளரை அழைத்து வர திருமா அண்ணா சென்றார், அவர் வருவதாகத் தெரியவில்லை. பதிகம்பாடி தாழ்திறக்க திறனில்லாததால் அழகேஸ்வரரை அடுத்தமுறை வந்து பார்க்கலாம் என்று நினைத்து அடுத்த இடத்துக்கு கிளம்பினோம்.  


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

02-12-2022

Comments