விருதுநகர் மாவட்ட தொல்லியல் தடயங்கள்

 நண்பர் ஸ்ரீதர் ,தொல்லியல் தடயங்கள் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் ஒவ்வொரு வார இறுதியிலும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டே இருப்பார். முனைவர் செல்ல பாண்டியனுடன் இணைந்து தனது முதல் படைப்பாக விருதுநகர் மாவட்ட தொல்லியல் தடயங்கள் என்னும் புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறார்.





எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இது போன்ற தொல்லியல் ஆர்வம் உள்ள மனிதர்கள் ஐந்நூறு  பேராவது உண்டு. அவர்களில் பெரும்பாலானோர் பயணம் செய்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதோடு விட்டுவிடுகின்றனர், மீறி சிலர் முகநூல் வீடியோ பதிவுகளும் youtube இல் video பதிவிடுவதுமாக இருக்கின்றனர். வெகு சிலரே எழுதுகின்றனர், வலைப்பூவில் பதிவதோடு இல்லாமல் புத்தகமாகவும் அவர்கள் கண்டடைந்ததை கொண்டு வர வேண்டும் என்பதையே நான் தொல்லியல் ஆர்வமுள்ள நண்பர்களிடம் சொல்லுவேன்.


விருதுநகர் மாவட்ட தொல்லியல் தடயங்கள் புத்தக முன்னுரையிலேயே முனைவர் சொ சாந்தலிங்கம் மற்றும் பொ ராசேந்திரன் எழுதிய *வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்* என்னும் முக்கியமான நூலையும் குறிப்பிடுகிறார்.  ஆகவே ஸ்ரீதர் தன்னுடைய  நண்பர்களுடன் கண்டறிந்த புதிய தொல்லியல் தடயங்களை மட்டும் இந்தப்புத்தகத்தில் ஆவணப்படுத்தி உள்ளார். நூலானது சிற்பங்கள், கல்வெட்டுக்கள், நடுகற்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் இருந்து மட்டும் கண்டடையப்பட்டவை.பிற தடயங்களுக்கான சேகரிப்பு பின்னர் புத்தகங்களாக வெளியிடப்படும் என்று ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார்.


சிற்பங்கள் பகுதியில் முருகன், அய்யனார், சமண தீர்த்தங்கரர், தவ்வை ஆகிய சிற்பங்களை அடையாளப்படுத்தி உள்ளனர்.ஒவ்வொரு சிற்பத்தை குறிப்பிடும் போதும் அதனுடைய அமைப்பு, அதனுடைய கால அமைதி, மற்றும் சிறப்புகளை எளிய மொழியில் வர்ணிக்கிறார்.செந்நிலை குடி, இருஞ்சிறை ,கல்லூரணி என மூன்று அய்யனார்களின் தகவல்கள் அடுத்தடுத்து கொடுத்து  நாமே எளிதாக இவற்றை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்னும் வகையில் பதிப்பித்துள்ளார். கீழ் இடையன்குளம் சமண தீர்த்தங்கர சிலையை பாதுகாப்பவர் ,சுப்பிரமணி என்னும் விவசாயி. அவர் கூறியிருப்பது, தீர்த்தங்கரரை சவணர் சுவாமி என்னும் பெயரில் வழிபடுகின்றனர், விவசாயத்தை துவங்கும் போதும் முதல் அறுவடையின் போதும் இவரை வணங்கி விட்டு தான் துவங்குகிறார்கள். பூர்வ சமணர்கள் விவசாயம் குறித்து  கொண்டுள்ள கருத்துக்களை நாம் அறிவோம்.  கடவுள்கள் பொதுமக்களிடம் வந்துவிட்ட பிறகு அவை அவர்களது தெய்வங்கள்தாம்.


கல்வெட்டுகள் பகுதியில் திருச்சியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் கண்மாய் அருகே கண்டறியப்பட்ட ராஜராஜ சோழன் காலத்தில் வட்டெழுத்து கல்வெட்டு குறித்த தகவல் உள்ளது . இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்து கல்வெட்டுகள், திருச்செந்நெல் குடி கல்வெட்டுகள், எல்லிங்க நாயக்கன்பட்டி, கூத்திப்பாறை கல்வெட்டுகள் குறித்த ஆய்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக வரகுண பாண்டியனின் காலத்தை குறிப்பிடக்கூடிய தனிப்பட்ட முறை ஒன்று சொல்லப்பட்டுள்ளது, இது பாண்டியர்களுக்கே உரித்தான தனி வழக்காகும்.மேற்கொண்டு நிறைய தகவல்களை ஆர்வம் உள்ளவர்கள் இதன் வழி அறிந்து கொள்ள முடியும்.


நடுகற்கள் பகுதியில்  வெவ்வேறு பகுதிகளில் கிடைத்த பாம்பு கொத்தி பட்டான், மான் குத்தி பட்டான் கற்களும், வீரக்கல், சதிக்கல் முதலியவையும்  படங்களுடன் விளக்கப்படுகின்றன. கூத்திப் பாறையில் காணப்படும் நடுகல் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது,இதன் வணிகத் தொடர்பு குறித்த தகவல்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.


இறுதியாக கிழவனேரி பகுதியில் கண்டடையப்பட்ட முதுமக்கள் தாழியையும் சுருக்கமாக இவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சிறிய புத்தகத்தின் சிறப்பே  இது எளிய நேரடியான  மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதுதான், வரலாற்றில் ஆர்வமுள்ள எவரும் இதை படித்து புரிந்து கொள்ள முடியும்.  அதேசமயம் ஒருவருக்கு வரலாற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்த புத்தகத்தை வாங்கி கொடுக்கலாம், அவருக்கு இது ஒரு நல்ல துவக்கமாகவும்  அமையும். சகோதரர் ஸ்ரீதர் மற்றும் செல்ல பாண்டியனுக்கு, புத்தகத்தை அழகாக வெளியிட்டுள்ள பாண்டியநாடு பண்பாட்டு மையத்துக்கு  என்னுடைய வாழ்த்துக்கள்.


புத்தகம் வேண்டுவோர்  தொடர்பு கொள்ள வேண்டிய  எண்   (விலை ரூ 60)  : 98429 66137 (திரு ஸ்ரீதர் )


ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரிதான  கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களும் இவரை அணுகலாம். 




தாமரைக்கண்ணன்


 புதுச்சேரி 


12.12.2022

Comments