ஆயிரம் கோடி முகத்தொன்று

ஒவ்வொரு வருடமும் என்ன செய்திருக்கிறேன் என்று தொகுத்துக்கொள்வேன். இந்த 2022 ஆண்டு முழுவதும் விழாக்களாலானது போல ஒரு தோற்றம். புதுவை வெண்முரசு கூடுகை இரு விழாக்களை நடத்தியது, தனது ஐம்பத்தி ஒன்றாவது கூடுகை விழா. இரண்டாவது எங்கள் ஒருங்கிணைப்பாளர் திரு அரிகிருஷ்ணனின் அறுபதாம் அகவை விழாவின் ஒரு பகுதியாக நிகழ்ந்த, ஆய்வாளர் பத்மபாரதிக்கான பாராட்டு விழா.  இரண்டு நிகழ்வுகளிலும் எழுத்தாளர் திரு ஜெயமோகன் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார் . பின்னர் தமிழ் விக்கி முன்னெடுப்பான பெரியசாமித்தூரன் விருது விழா. ஆண்டு முடிவில் நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா. இவை ஒவ்வொன்றிலும் பங்கெடுத்தேன், எனக்கு அளிக்கப்பட்ட பணியை மகிழ்ச்சியுடன் நிறைவாக செய்தேன். 



சென்ற ஆண்டுபோல நீண்ட பயணங்கள் செய்யவில்லை. இருப்பினும் வருட துவக்கத்திலும் , இறுதியிலும் மட்டும் பயணங்கள் நிறைந்திருந்தது. நண்பர்கள் மணிமாறன், திருமாவுடன் உலகாபுரம், பேரங்கியூர் என இரு பயணங்கள் சென்றோம்.  பேரங்கியூர் பயணத்தில் கண்ட சிந்தாமணி கோவில் குறித்து எழுதிய கட்டுரையான "அண்டம் உற நிமிர்த்தாடும் அப்பன் இடம்" என்னும் கட்டுரை நல்ல வாசிப்பை பெற்றது. இம்முறை நானும் விஷ்ணுவும் சென்னை புத்தகக்கண்காட்சி சென்றோம்.  அனங்கனுடன் திருக்குறுங்குடி, மேல் சித்தாமூர், குந்தவை ஜிநாலயம் என  மூன்று பயணங்கள் சென்றேன். ஆய்வாளர் அ கா பெருமாளை கண்டு அனங்கனுடன் சேர்ந்து பேட்டி ஒன்று எடுத்தேன். சந்தோஷுடன் இணைந்து ஒரு ஆவணப்படம் எடுக்க முயற்சி செய்தேன், ஆனால் வெளிவரவில்லை. அடுத்த ஆண்டு வெளிவரலாம். நான் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள சில தொல்லியல் தளங்களுக்கு திருமா அண்ணணுடன் சென்று வந்தேன். 


கிளப் ஹவுஸ் செயலியில் இம்பர்வாரி என்னும் குழுவில் சிலகாலம் கம்பராமாயண வாசிப்பில்  பாலகாண்டம்  வரை கலந்து கொண்டேன், சூழல் காரணமாக தொடர இயலவில்லை. புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் அண்ணன் கோபி நடத்தும் யாழ் அரங்கத்திற்கு சில நாடகங்களுக்கு சென்று வந்தேன். நாடகங்கள்  இந்திரா பார்த்த சாரதியின் "புனரபி ஜனனம் , புனரபி மரணம்"  , கோபியின் - "உலகின் அதிநவீனக்கழிவறை", புரிசை கண்ணப்பத்தம்பிரானின் "அபிமன்னன் படுகளம்  " தெருக்கூத்து   ஆகியவற்றை பார்க்க முடிந்தது . சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா சார்ந்து கோபி, உரை ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார், அருமையான உரை 'ஆதிராமன்' என்னும் நாடக மன்றத்தலைவர் நிகழ்த்தியது. 


இந்த வருடமும் குறைவாகத்தான் எழுதியிருக்கிறேன், கவிஞர் ஆனந்தகுமாருக்கு குமரகுருபரன் விருது அளிக்கப்பட போதும், ஆய்வாளர் கரசூர் பத்ம பாரதிக்கு தூரன் தமிழ்விக்கி விருது அளிக்கப்பட்டபோதும் ஆனந்தகுமார் கவிதைகள் , தூரன் விருது விழா நிகழ்வு குறித்து கட்டுரைகள் எழுதினேன்.தமிழ் விக்கி விருதுவிழாவில் கலந்துகொண்டு எழுதிய ஒளிநின்ற கோணங்கள் கட்டுரையும் வாசிப்புக்கவனம் பெற்றது.  ஜெ 60 - தருணத்தில் வெளியிடப்பட்ட சியமந்தகம் என்ற நூலில் ஜெ எனக்கு என்னவாக இருக்கிறார் என்ற எனது சிறிய குறிப்பொன்று வந்துள்ளது. ஏனோ தமிழ் விக்கி முன்னெடுப்புக்கு முயன்றும் என்னால் பெரிதாக பங்களிக்க முடியவில்லை. அடுத்த ஆண்டாவது இந்த மனக்குறை எனக்கு  நீங்க வேண்டும்.  எனது வலைப்பூவில் இன்றுவரை 12 பதிவுகள் விட்டிருக்கிறேன், சில பயணக்கட்டுரைகளை துவக்கி முடிக்காமல் வைத்திருக்கிறேன், பார்ப்போம். 


எனது நிறுவனம் மிகச்சிறிய வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. நான் எனது பணிக்கு உண்மையாகவே இருக்கிறேன். எனது நிறுவனத்திற்கு பொதுவெளியில் புகழ் கிடைக்கும்  பல தருணங்களை உருவாக்கியிருக்கிறேன், அதற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கிறேன் . ஆனால் அங்கு எந்த இடத்திலும் எனது பெயரையோ, முகத்தையோ பதிவு செய்ய நான் விரும்புவதில்லை.  இது எனக்கான இடம் இல்லை என உணர்வேன். சிறுவயதிலேயே மேடையில் ஆட ஆரம்பித்ததால் மேடைக்கூச்சம் என்ற ஒன்றை நான் நடித்தால்தான் உண்டு. ஆனால் இயல்பாகவே அலுவலகத்தில் எந்தத்தடமும் இன்றி பணியாற்றி மீளவே விரும்புகிறேன். 


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 14 ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருது விழாவை நடத்துகிறது, ஒவ்வொரு விழாவும் பெரிய திருவிழா 500 - 1000 பேர் வரை பங்கேற்கிறார்கள். விழா முடிந்ததும் விஷ்ணுபுரம் குடும்பம் மொத்தமும் மேடையில் நெருக்கியடித்துக்கொண்டு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். புகைப்படக்கலைஞர்களுக்கு மொத்த மேடையையும் கவர் செய்ய கஷ்டமாக இருக்கும். இம்முறை இளம்நண்பர் ஒருவரை வற்புறுத்தி அழைத்தேன், அவர்  வரவில்லை என்று மறுத்துவிட்டார்.  தயக்கமாக இருக்கலாம், கூச்சமோ, கும்பலில் நிற்பதா என்னும் மனநிலையோ, தான் தனி என்னும் உணர்வோ இருக்கலாம். அது அவர் உரிமையும் கூட.


எனக்கு அப்புகைப்படத்தருணம் 'நான்' கரைந்து பிரபஞ்ச உருவில் நிற்பது போன்று பரவசமான ஒன்று. இதுவே  எனது இடம். மேட்ரிக்ஸ் படம் பார்த்தவர்களுக்கு தெரியும், வில்லன் ஒவ்வொருவரையும் தானாக்கிக் கொள்ளுவான். ஆரக்கிள் என்னும் மூதாட்டி அவனுக்குள் சென்று திடீரென அவனை மீறிப்பேசுவாள். ஹாரி பாட்டரும், லார்ட் வால்ட்டிமோரும் அவ்வாறே ஒருவரை ஒருவர் உள்ளறிவார்கள். நான் அந்த புகைப்படத்தில் நிற்கும் நூறு முகங்களில் ஒன்று. அனைத்து முகங்களிலும் ஒளிரும் ஒன்றுதான் என்னையும் இன்று  இயக்குகிறது, அனைத்துக்கொள்கிறது. நான் நாளை தனித்து மேலெழுந்தாலும் இந்த நினைவு மாறாது. 



கடந்த மாதம் புதுவை வெண்முரசுக் கூடுகையில் ஆய்வாளர் கரசூர் பத்ம பாரதி கலந்துகொண்டார். அவரது உறவினரான மருதமலை என்னும் சிறுவன் எங்கள் நண்பன். மருதமலை,நிகழ்வு நடக்கும் நண்பர்  அரிகிருஷ்ணன் வீட்டிலிருந்த கண்ணனின் விஸ்வரூப காட்சியை பார்த்துக்கொண்டிருந்து கேட்டான். இது என்ன சாமி ? .. நான் பகவத்கீதை தருணம் பற்றி சுருக்கமாக சொன்னேன். கேட்டவன் சொன்னான், ஆனா இந்தப்பக்கம் பிள்ளையார் இருக்கே, ஆமாடா இந்தப்பக்கம் அனுமார் கூட இருக்காரு. இது எல்லாம் ஒரே சாமியா என்ன ..?  மீண்டும் கேட்டான்.   


பலதலைக் கடவுள்கள் நமக்குண்டு. அருவமான லிங்கம், இரண்டுமுக அக்கினி, மூன்று தலை சிவன், நான்கு முக பிரம்மா , ஐந்து தலை ஹேரம்ப கணபதி, ஆறுதலை முருகன், இருபத்தி ஐந்து தலையுள்ள சதாசிவமூர்த்தி, தலைமாலை அணிந்த பைரவன், தலையோடேந்தி அலையும் பிட்சாடனன்,   தன் தலையை தானே வெட்டி குருதியுண்ணும் சின்னமஸ்தா, தலையற்ற லஜ்ஜா கௌரி.  


PC : POET  'Anandha Kumar'

இம்முறை விஷ்ணுபுரம் விருது விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பேசினார், அவரது பேச்சின் இடையே ஒருகணம் பேசுவது ஜெயமோகனே என்று திடுக்கிடல் தோன்றியது. இருவரும் ஒன்றின் இருவேறு முகங்கள் என்ற எண்ணம் வந்தது. மறுத்தும், மீறியும், உடைத்தும், அணைத்தும், தொகுத்தும்   அனைத்தும் சென்றடையும் இடம் ஒன்றே என்றும். இலக்கியம்,  மொழி, கலை எல்லாம் தன்னை பலவாக்கி ஆடும் ஆடல் .


இந்த ஆண்டு , விஷ்ணு, அநங்கன், ஜெயராம், குப்பம் பேராசிரியர் பத்மநாபன், ஞா கோபி  என நிறைய நண்பர்கள். பெரும்பாலும் எனது நட்பு என்பது எனது இறுதிக்காலம் மட்டும் அவர்களுடன் தொடர்வதாக இருக்கவேண்டும்.


இந்த வருடம்  சிறு விபத்து ஒன்றும் எனக்கு நிகழ்ந்தது, அது உடலில் ஏற்படுத்தியதை விட மனதில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது. இறப்பை ஒருநொடி என் கண்முன்னே கண்டேன். வாழ்வின் அடிப்படைகள் குறித்தும், விழுமியங்கள் மீதான நமது நிலைப்பாடுகள் குறித்தும், அனைத்துமே நிலையாமை என்னும் ஒன்றின் மேல் நிற்பது போலவும்  எண்ணங்கள், கொடுங்கனவுகள். ஆனால் ஆகஸ்டு துவக்கத்தில் நடந்த அந்த நிகழ்வுக்குப்பின் குறுகிய காலத்திலேயே மீண்டு விட்டேன், அதற்கு முற்றிலும் எதிரான மனநிலையை ஏற்படுத்திகொண்டேன். என்னை செயல்களால் நிறைத்துக்கொண்டேன்.   


வரும் 2023ம் ஆண்டு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறேன்.  இப்போதே அனைத்தும் செயல் திட்டங்களாக எழுந்து முன்னிற்கிறது, என்னை இழுத்துச்செல்லவும் துவங்கிவிட்டது.  அனைத்தும் நண்பர்ககளோடு   செய்யப்பட வேண்டியது. தனித்து அல்ல இணைந்து இணைத்து மேலெழும் ஆற்றல் மேல் நான் இன்று பெருநம்பிக்கை கொண்டிருக்கிறேன்.  பயணம், எழுத்து என்று. 

ஆம், இந்த வெற்றுத்துகள்களிடமிருந்து, என்னை இத்தனை காலம் தளைத்திருந்த அனைத்தையும் விட்டு வெளிவந்துவிடுவேன். இனி ஒரு கணமும் வீணாக்குவதில்லை, ஒரு இருள் துளியையும் பற்றிக்கொள்வதில்லை. எரிவிப்பதுதான் எரிகிறது, எரியுமாகிறது, ஏதுமற்ற இடத்தில் வெப்பத்தையும், ஒளியையும், மணத்தையும் தந்து சென்றுவிடும் ஒன்றென ஆகிறது.    


எல்லாம் செயல்கூடும்.


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

20.12.2022



  


    

Comments