களியாடல்

 இருநாள் பயணமாக தெற்கே சென்றிருந்தேன். நாகர்கோவில், திருக்குறுங்குடி மற்றும்  கோவில்பட்டி செல்வதாகத் திட்டம் . முதல் நாள் 03.12.2022 சனிக்கிழமை இரவு ரயிலில் முன்பதிவு செய்யாமல்  ஏறிவிட்டோம், அடுத்தநாள் இரவு திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி நம்பாடுவான் நாடகம் பார்த்தோம், இருநாட்கள் தூக்கமின்மை அலைக்கழித்தது. அத்தோடு  திடீரென பெய்த மழை காரணமாகவும் கடைசியில் கோவில்பட்டியைக் கைவிட வேண்டியதாயிற்று. இந்தப்பயணம் நானும் நண்பர் அனங்கனும் சென்றது. அவன் சென்னையிலிருந்து நாகர்கோவில் ரயிலேறியிருந்தான், நான் வேறுபெட்டியிலேறி பின் திருச்சி நிறுத்தத்தில் ஓடிப்போய் அவன் பெட்டியில் ஏறிக்கொண்டேன்.  திங்கள் காலை மதுரையில் இறங்கி அவனை மாட்டுத்தாவணி பேருந்தில் ஏற்றிவிட்டு, நான் ஆரப்பாளையத்திலிருந்து திண்டுக்கல் சென்று என் பாட்டி வீட்டாரக் கண்டுவிட்டு அன்று இரவே திருவாண்டார்கோவில் வந்தேன். 



ஒரு விளையாட்டாகத்தான் ஏன் நம் நண்பர்கள் விஷ்ணுபுரம் விருந்தினர்களது படைப்புகளை எடுத்துக்கொண்டு எழுதக்கூடாது என்று தோன்றியது. உடனே யார் யார் எழுதுவது , எந்த எழுத்தாளர்களை எடுத்துக்கொள்வது என்று அப்போதே திட்டமிட்டு பிரித்து நண்பர்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்றேன். வளவ.துரையன்  சாரது கட்டுரை முதலில் வந்தது அடுத்தடுத்து நான்கு     கட்டுரைகள் இன்றுவரை படித்துவிட்டேன். இன்னும் இரண்டு மூன்று கட்டுரைகள் வரக்கூடும். இறுதியாக கைக்குக் கிடைத்த விக்னேஷ் கட்டுரையை தான் பெரிதும் விரும்பினேன், காரணம் திண்டுக்கல் போல ஒரு ஊரிலிருந்து அவன் பணியாற்றும் சூழல். அங்கிருந்து ஒருவர் இன்று அடிப்படை இலக்கியப்புரிதல்களை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்புதான்.

வருடம் முழுவதும் எழுதவும் பயணிக்கவும் வேண்டும், சமமாக வாசிக்கவும் வேண்டும். பார்ப்போம் நாமிருப்பது பேரருளாளன் திருநிழலில். பெரும் மகிழ்ச்சியைத்தரும் இன்னொரு விஷயம் நாகர்கோவிலில் ஆசிரியர் அ கா பெருமாளை சந்தித்தது, தமிழ்நாட்டில் இன்றைக்கு அப்பேர்க்கொத்த அனுபவசாலி இன்னொருவர் இல்லை. மூன்றரை மணிநேர உரையாடல். அவரிடமிருந்து இன்று நான் கற்றுக்கொள்வதெல்லாம் என் வயலைப்பண்படுத்துதலே. வித்துக்கள் முளைக்கவும் ஒரு காலம்வரவேணும்.  எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதவேண்டும், அதற்கான மொழி கைவரவேணும், எதுகண்டும் நின்றுவிடக்கூடாத துணிபு வேண்டும்.

 உண்மையில் நீர்கண்டதும் ஓடிக்குதிக்கிற அந்த பிள்ளை மனநிலையைப்போல இவற்றிலெல்லாம்  முழுமையாக திளைத்துக்கொண்டு  இருக்கிறேன்.  அடுத்தடுத்து கைசிக நாடகத்தை குறித்து எழுத வேண்டும், அ வெண்ணிலா நூலை படித்து எழுத வேண்டும், சிறு தெய்வங்கள் குறித்து புதுவையெங்கும் தகவல்கள் சேகரிக்க வேண்டும்,  ஜனவரியில் செல்கிற பயணங்களுக்கு திட்டமிட வேண்டும். ஒவ்வோர் கணத்தையும் களிப்புடன் எதிர்கொள்வதே இன்றுநான் கண்டுவிட்ட  ஒரே வழி.  


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

06.12.2022


Comments