பாணன் கனவு 2

 



மேடையிலிருந்த பாணன் வாயை அகலமாகத் திறந்தான், காற்றைப் பருகும் உடல் என்பது நல்ல தலைப்பு, இதுவரை யாரும் கவிதைத்தொகுப்புக்கு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்கு அதிர்ச்சி, மேடையில் அவன் மீண்டும் தூங்கித்தொலைத்தால் எனக்கு மேலும் குழப்பமாக இருக்கும். அதற்குள் கீழே தூங்கும் பாணனின் கனவுக்குள் விழுந்தேன். 



அங்கு நல்ல காற்று, யாரோ ஒருவரின் இருசக்கர வாகனத்தின் பின்னே பாணன் உட்கார்ந்திருந்தான். அவனைச்சுற்றி அரசர்களின் தேர்கள், மீன்கொடி, புலிக்கொடி, விற்கொடி, சிம்மக்கொடி எல்லாம் காற்றில் பறக்கின்றது. பாணன், வாகனத்தை நிறுத்திவிட்டு பெரிய தோரண வாசலின் உள்ளே போகிறான். நல்ல காற்றுள்ள விசாலமான மண்டபம். அங்கு உட்கார்ந்துகொண்டு கையசைக்கிறான். வரிசையாக அந்தக்கோவிலிலுள்ள கல் சிலைகள் வருகின்றன, கையிலுள்ள பேரேட்டில் குறித்துக்கொள்கிறான். ஒருசிலரை மட்டும் மீண்டும் போய் வரிசையில் நிற்கச்சொல்கிறான்.  ஒன்றிரண்டு சிலைகளுக்கு மட்டும் சிறிய புன்னகையைத் தருகிறான். 


ஒரு படக்கதை புத்தகம் போல ஒரு அடி சதுரங்களாக சிற்பங்கள் முதலில் வந்தன, திருப்பித் திருப்பிப்பார்த்தான் , உம் அடுத்து என்றவுடன் இரண்டடி சிற்பங்கள் வந்தன, அடுத்து நான்கடி, ஐந்தடி சிற்பங்கள்.பின்னர் யாளிகள் வரிசையாக வருகின்றன, அவற்றின் கண்களில் நெருப்பு சிந்துகின்றது. யானை போல துதிக்கை உள்ள யாளி, மகரம் போன்ற யாளி, சிங்கத்தை ஒத்தது எல்லாம் ஒரே வரிசையில் நிற்க சிரமப்படுகின்றன. பாணன் அதைக்குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை, அற்பன். பின்னர் மெல்ல எழுந்து அங்குள்ள ஒரு கல்தூணை சென்று பார்க்கிறான், அங்குள்ள சிறிய செதுக்குவேலைகளை கண்டு பரவசமடைகிறான். கண்ணற்றவன் போல வருடி வருடி அதை அணைத்துக்கொள்கிறான், சிரிக்கிறான், நான் எதிர்பார்க்காத நேரத்தில், வேகமாக ஓடிவந்து அந்தத் தூணை நோக்கி மோதித்தெறிக்கும் கணத்தில், அந்தத்தூண் அவனை விழுங்கிக்கொண்டது. அவன் தூணில் மறைந்துவிட்டான். 



Comments