பாணன் கனவு 3

திடீரென பாணனை தூண் தனக்குள் புகுத்திக்கொண்டதை நான் அறிவால் உணர நேரமாகியது, சற்றுமுன் அவன் அங்கிருந்தது எந்தக் கற்களிலும்  தெரியவில்லை. சிறிது நேரம்  சுற்றிச் சுற்றி வந்தேன்,  எந்தத் தூண் என்பதையும் மனதில் இருந்து தொலைத்து விட்டேன்.  மேலே கூரையை பார்த்தேன், எதோ சவுக்குத்தோப்பில் நிற்பதுபோல அந்த மண்டபம் பதினாறடித் தூண்களால் நிரம்பியிருந்தது. 


தளர்ந்து போய் மதில் சுற்றில் சாய்ந்தேன், தூரத்து மலைச்சிகரத்தை  ஆயாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன், நல்ல இளங்காற்று மிதமான குளிருடன் வீசியது. சற்று நேரத்தில் அடர்ந்த காட்டுக்குள் நான் தனியே நின்றிருந்தேன், பெரும் மரத்தடிகள், மண் ஈரமில்லாமல் இருந்தது. அப்போது ஒரு குழந்தை  இரு பெருமரங்களுக்கிடையில் தவழ்ந்து தவழ்ந்து வந்தது அதன் இடுப்பில் கட்டிய சிறுதேர் அசைந்து ஒரு மரத்தில் இடிக்க, அருவியில் நீர் விழும் ஒலியுடன் அந்த மரம் பிரம்மாண்டமாக சாய்ந்து மற்றோர் மரத்தின் மீது விழுந்தது. நான் பயந்து மறுதிசையில் திரும்பினேன் அங்கு பழங்குடி ஆடையணிந்து ஒருவன் கல்நுனி கொண்ட அம்பை ஆறு மரங்களை துளைக்க எய்தான் அது ஏழாவதாக என்னை நோக்கி வந்தது, கண்ணை மூடிக்கொண்டு மண்ணில் விழுந்தேன். பெரிய மரப்பொந்தில் அமர்ந்திருந்த விழுதுகளுக்கு போட்டியாக தாடிவளர்த்த முதியவர் என்னைப்பார்த்து சிரித்து, அத்தைத்தின்று அங்கே கிட, சரியா என்றார். புரண்டு வானைப்பார்த்தேன் அங்கே ஒரு வெண்பறவை ஒளிக்கீற்றெனப் பறந்து சென்றது.



அந்த வெண்மை கண்ணை நிறைத்தது, எங்கும் ஒளியாக இருந்த கூசும் வெண்மை இரங்கிக் கனிந்து பின் பொன்னொளியாகியது, பொன்னொளி தளிரெனவும் பருந்தின் அலகெனவும் இருவேறு நிறமாக திரண்டது, இளந்தளிரை அங்கு ஓடி வந்த கொம்புப்பன்றி கவ்வி பறித்தது, அதைக்கண்ட பருந்து தன்னை பெருந்தம்பமாக மாற்றிக்கொண்டு விண்ணும் மண்ணும் தொலைய வெளிகளில் வளர்ந்தது. பன்றி அதன் அடியை அகழ்ந்து சென்று மறைந்து போனது. பின் அந்தத்தம்பத்தில் இரு சிவப்புப்புள்ளிகளாக விழிகள் தோன்ற அதைப்பிளந்து எங்கும் செந்நீர் வழிய ஒரு சிம்ம மனிதன் வந்தான், அவன் எழுப்பிய ஒலி அண்டங்களை செவிடுபட வைத்தது, யாவும் அஞ்சிய கணத்தில் அவனை உள்ளிருந்து பிளந்துகொண்டு சரபம் ஒன்று வெளிவந்து அவனை ஏதும் எஞ்சாமல் உண்டுமுடித்தது, நாக்கை சுழற்றியபடி அங்கு நின்றிருந்த என்னைக் கூர்ந்து பார்த்தது.   


உடனே விழித்துக்கொண்ட நான், முதலில் எதையும் காணவில்லை கையூன்றி தரையை உணர்ந்தேன், பின் கனமான கல்லில் சாய்ந்திருந்ததை, பெருமூச்சுவிட்டபடி தலையை நிமிர்த்தியபோது எதிர் மண்டபத்திலிருந்து கல் யாளி ஒன்று என்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்தது.    

Comments