SP சீனிவாசன் நினைவு உரை மற்றும் பெர்னாதா இல்லம் நாடகம்

 *யாழ் அரங்க நிகழ்வுகள் 29.01.2023* 

புதுச்சேரியில் எப்போதும் தொடரும் நாடக செயல்பாடுகளின் இன்றைய முகம் ஞா கோபி. நாடக நடிகரும், இயக்குனரும், பயிற்றுநருமான கோபி, 'யாழ் அரங்கம்' என்னும் அமைப்பை வில்லியனூர் அருகேயுள்ள தட்டாஞ்சாவடியில் நடத்தி வருகிறார். தொடர்ந்து நடிப்புப் பயிற்சி, நாடக அரங்கேற்றம், படைப்புகளின் வாசிப்பு மற்றும் விவாதம் இவை நிகழும் இடமாக யாழ் அரங்கம் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து  'நாடகம் குறித்த உரைகள்' நிகழ்கிறது. 29.01.2023 அன்று அரங்க அமைப்பாளரும், ஓவியருமான S P சீனிவாசன் நினைவு  உரையை திரு. ராஜு அவர்கள் வழங்கினார், திரு சந்தான பூபதி ஒருங்கிணைத்தார். அதை அடுத்து வெளி ரங்கராஜன் இயக்கிய பெர்னாதாவின் இல்லம் என்ற நாடகம் அரங்கேறியது. 

ஞா கோபி                                         


பேராசிரியர் இரா இராஜு புதுவை பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக் கலைத்துறையின் மேனாள் தலைவர். S P சீனிவாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர். SPS (அப்படித்தான் இராஜூ அழைக்கிறார்) அவர்களை தனது 10 வயது முதல் அறிந்தவர், மேலும் SPS அவர்களுடைய மனைவிதான் தனது தலைமை ஆசிரியை என்ற நினைவின் குரல்களின் வழி உரையை துவங்கினார். இசை கற்றுக்கொள்ள சென்ற இடத்தில் SPS பரத நாட்டியம் ஆடிக்கொண்டு இருந்த காட்சிதான் அவரது மனதில் பதிந்த அறிமுகமாக இருந்தது, பன்முகத்தன்மை கொண்டவர் SPS.  




SP சீனிவாசன் 


கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற திரைப்படங்களில் SPS கலை இயக்க பணிகள் செய்திருக்கிறார். அங்கு சரியான அங்கீகாரமும், அவரது கலைக்கான போதிய சுதந்திரமும் இல்லை. அங்கு முரண்பட்டு வெளியே வந்தவர் பின்னர் கலா ஷேத்ராவிலும் பணிசெய்திருக்கிறார். அங்கும்  நீண்ட காலம் தொடர அவரது மனம்  விரும்பவில்லை. இறுதியாக காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். ஏற்கனவே சாந்தி நிகேதன் தொடர்புடைய SPS தனது தாகூரிய கலை பாணியும், காந்திய கொள்கைகளும் இணையும் வாய்ப்பான அந்த இடத்தை தேர்வு செய்தார். அரங்க அமைப்பாக்கத்தில் அவரது தெரிவு பானைகள், சுளகு மற்றும் தர்மாகோல்.     

     SP சீனிவாசன்  - புத்தகம் 

பேராசிரியர் ராமானுஜனும் SPS -ம் இரட்டையர் போல இருந்தார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும்போதிலும் நீண்ட கால நட்பு அவர்களுடையது.  ராமானுஜம், SPS மற்றும் சங்கரப்பிள்ளை மூவரும் ஒருகாலகட்டத்தில் நவீன நாடகங்களை தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உருவாக்கி வலுப்படுத்தியவர்கள். அனைத்திற்கும் மேலாக நாடகத்தின் உள்ளடக்கம் முழுமையாக வெளிப்படும்படி பணியாற்றக்கூடிய ஒருவர் SPS. கையுறை பொம்மைகள் கொண்டு ஒருவரே நடத்தும்  GLOVE PUPPETRY-ல்  SPS ஒரு மேதை, பெரும்பாலானோர் அறியாத தகவல் இது.  

இரா இராஜு


இவ்வாறு இராஜு அவர்களின் உரை அமைந்தது, அவரது ராமர் ப்ளூ குர்தா மிகவும் அழகாக இருந்தது. நிகழ்வின் துவக்கத்தில் SPS-க்கு  மலரஞ்சலி செலுத்தும்போது நடக்க சிரமப்பட்ட, சக கலைஞரான காந்தி  மேரியை கைப்பிடித்து அழைத்துச்சென்றார்.    

உரையின் தொடர்ச்சியாக 'வெளி ரங்கராஜன்' இயக்கத்தில் உருவான 'பெர்னாதா இல்லம்' நாடகம் நிகழ்த்தப்பட்டது. 

ரங்கராஜன், நாடக உலகில் பன்முகத்தன்மை கொண்ட சுவாரஸ்யமான ஆளுமை. ஸ்ரீரங்கம் அவரது பூர்வீகம், சென்னையில் வசிக்கிறார்.  தொண்ணூறுகளில் வெளி என்னும் நாடக இதழை நடத்தியவர். சிற்றிதழ்ச்சூழலில் கலை, இலக்கியம் சார்ந்து புனைவு மற்றும் அபுனைவுகளில் பங்களித்திருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளது, அவை நாடகமும் இலக்கியமும் சார்ந்தவை. நாடகம் மட்டுமில்லாது நவீன இலக்கியத்தில் நகுலனையும், பிரமிளையும் பேசக்கூடியவர் என்பதுதான் இவரது தனிச்சிறப்பு. இவரது மாதவி, ஊழிக்கூத்து ஆகிய நாடகங்கள் மிகவும் புகழ்பெற்றவை.    

               வெளி ரங்கராஜன்

'பெர்னாதாவின் இல்லம்' என்னும் ஸ்பானிய நாடகம் (La casa de Bernarda Alba) ஸ்பெயின் கவிஞரும், நாடகவியலாளருமான கார்சியா லோர்காவால்   (Federico García Lorca) எழுதப்பட்டது. கார்சியாவின் மூன்று துன்பியல் நாடகங்கள் புகழ்பெற்றவை, ஸ்பானிய கிராமங்களை கதைக்களமாக கொண்டவை. பிற இரண்டு நாடகங்கள் Blood Wedding மற்றும் Yerma. ஸ்பானிய அரங்க செயல்பாடுகளின் இரண்டாம் மறுமலர்ச்சிக்கு கார்சியாவின் நாடகங்கள் காரணமாக இருந்தன. ஸ்பானிய சிவில் போரின்போது 1936- ல் கார்சியா தனது கொள்கைகளுக்காக, தன்பால் தேர்வுக்காக கைதுசெய்யப்பட்டு  சுட்டுக்கொல்லப்பட்டார்.  

              கார்சியா லோர்கா

'பெர்னாதாவின் இல்லம்', கார்சியா  சுடப்பட்டு இறக்கும் முன்னர் 1936ம் ஆண்டு எழுதிய நாடகம், அவரது இறுதி நாடகமும் கூட. ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம்  (The House of Bernarda Alba) செய்யப்பட்ட இந்த நாடகம், எழுத்தாளர் பிரேமால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி ரங்கராஜனால் நாடகமாக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் திரைப்படமாக 1987-ல் வெளிவந்திருக்கிறது, அதுமுதல் நேரடியாகவும் இந்த நாடகத்தின் பாதிப்புடனும் திரைப்படங்கள் வந்துள்ளன. 

பெர்னாதா இல்லம் -ஓவியம் 

பெர்னாதா ஸ்பெயின் கிராமம் ஒன்றில் வாழும் 60 வயது சீமாட்டி, அவளது கணவனின் இறப்பிற்கு பின் ஏழாண்டுகள் தனது ஐந்து பெண்களையும் துக்கம் அனுசரிக்க செய்கிறாள். சுதந்திரத்திற்காகவும்  தனது துணைக்காகவும் எங்கும் அவர்களை அடக்குமுறையால் கட்டுப்படுத்துகிறாள். இறுதியில் அவளது அடக்குமுறைக்கு ஒரு மகள் உயிர்ப்பலியாகி விடுகிறாள். பல கோணங்களில் யோசிக்க வைக்கும் இந்த நாடகம், தமிழில் வெளி ரங்கராஜன் முயற்சியால் அரங்கம் கண்டிருக்கிறது. மூல நாடகத்தில் ஐந்து மகள்களாக இருந்தது தமிழில் செய்யும்போது நான்காக மாறியுள்ளது.  வீட்டின் வேலைக்காரி முக்கியமான பாத்திரம், மகள்களுடனும் பெர்னாதாவுடனும் பேசிக்கொண்டேயிருக்கும் பாத்திரம். மஞ்சு ஸ்ரீ இந்த பாத்திரத்தை அழகாக கையாண்டார். நவீன நாடகங்களில் வெளி ரங்கராஜனுக்கே உரிய செவ்வியல் அணுகுமுறையும் நாடகம் சிறப்பாக வருவதற்கு ஒருகாரணம்.  


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

30.01.2023 


வண்ணம் சூழ் தூரிகை  - எஸ் பி சீனிவாசன் நினைவுக்கட்டுரை, சண்முகராஜா, காலச்சுவடு 

https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/277/articles/11-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88








   

Comments