"மழையும் மணியின் நினைவுகளும்" - கணியன்

 புதுச்சேரியில் உள்ள ஒரு சிறிய ஊர் நெட்டப்பாக்கம். அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி உள்ளது இன்னும் சிறிய ஊரான பண்டசோழ நல்லூர். முதல்முறை இந்த ஊரின் பெயரை கேள்விப்பட்டபோது ஏதோ வித்தியாசமானதாக இருக்கிறதே என்று தோன்றியது, பின்னர் தெரிந்துகொண்டேன் அது பண்டிதசோழன் என்னும் சிறப்புப்பெயர் கொண்ட சோழமன்னனின் பெயரால் ஆன ஊர். நண்பர் கணியன் (புஷ்பநாதன்) பண்டசோழநல்லூரை சேர்ந்தவர். 


கணியன்


கணியன் 2022ல் இரு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார், இரண்டுமே அவரது அப்பாவைக் குறித்தவை.  "சிறுகடை  வியாபாரி" மற்றும் "மழையும் மணியின் நினைவுகளும்"  சிலகாலம் முன்பு எழுத்தாளர் வடிவரசு எழுதிய' ஐயா' என்னும் நூலை தனது தந்தையை முன்னிட்டே எழுதியிருந்தார். அது இலக்கிய உலகில் நாஞ்சில் நாடன் முதலிய மூத்த எழுத்தாளர்களும் பேசும் பொருளானது. அந்த வகைமையில் கணியன் தனது சொந்த வாழ்விலிருந்தே இந்த இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார். 




"மழையும் மணியின் நினைவுகளும்"  பக்க அளவில் ஒரு சிறிய நூல். ஒரு மழைநாளில் தகப்பனுக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடல் தான் முழு நூலும்.  அப்பா தனது வாழ்க்கையை சொல்கிறார், அவரது கதையென்பது அந்த ஊரின் கதையாகிறது. அதுவே கிராமப்புற புதுச்சேரி மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, போன தலைமுறையின் காலத்தை காட்டும் கதையுமாகிறது. அவர் அடைந்ததும் இழந்ததும் உள்ளபடியே புத்தகத்தில் வந்துள்ளது. 


என்னளவில் புதுச்சேரி பல்வேறு கலாச்சாரங்கள் கலந்துபோன ஒரு நகரம், வார இறுதிநாட்களில் இங்கு களியாடுபவர்கள் அறிந்த வாழ்க்கையல்ல இங்கு கிராமப்புறத்திலுள்ள வாழ்க்கை. புதுவை நகரமே இன்னும் இலக்கியத்தில் ஒழுங்காக பதிவுபெறாத குறை எனக்கு உள்ளது. கணியன் தனது நூலில் நனவோடை முறையில் ஒரு குறு வரலாற்று பதிவை செய்திருக்கிறார். கணியனது எழுத்து லகுவில் வாசிக்கும் தன்மை கொண்டது, யாரும் ஒரேமூச்சில் படித்துவிடும் எளிய கூறுமுறையும்  புனைவின் அழகும் கொண்டது. புனைவுத்தளத்தில் அவர் நீண்ட தூரம் செல்ல வேண்டியவர், இடையில் எங்கும் கவிதைப்பக்கம் ஒதுங்கிவிடாமல் இருந்தால், செல்லக்கூடியவரும் கூட... 


இன்று புதுச்சேரியில் நவீன இலக்கியத்தை நோக்கி வரும் எவரும், ஆரவாரத்தோடு வரவேற்கப்பட வேண்டியவரே. அடுத்த தலைமுறையிலாவது நவீன இலக்கியம் இங்கு நிலைபெற இன்னும் இன்னும்  கணியன்கள் எழுந்துவர வேண்டும்.     


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

11-02-2023 

 

Comments

Post a Comment