செத்துப் பிறக்கின்ற தேவு - அரிசங்கரின் உடல் சிறுகதைத் தொகுதி

சித்தர் பாடல்கள் மூலம்  உடல் குறித்த உரையாடல்கள் இங்கு நடந்திருக்கின்றன, அவை அனைத்துமே ஆன்மீகமான விடுதலையை நோக்கியவை. மனதிற்கு ஒரு துணைக்கருவியாக உடலை முன்னிறுத்துபவை. நவீன இலக்கியம் தொடர்ந்தும் வெவ்வேறு களங்களில் உடலின் இச்சையை, நோய்மையை பேசியிருக்கிறது. மருத்துவ அறிவியல் அதன் இயக்கத்தை, வளர்சிதை மாற்றங்களை துல்லியமாகக் கண்டு செல்கிறது. அரிசங்கர் தனது உடல்  தொகுதியில் உள்ள 9 சிறுகதைகள் மூலமாக உடல் மீதான மாறுபட்ட கோணங்களை எழுதியிருக்கிறார்.    

புதுச்சேரியை சேர்ந்த  எழுத்தாளர்அரிசங்கரின் மூன்றாவது சிறுகதைத்தொகுதி இது. இதற்கு முன்னர் 'பதிலடி மற்றும் ஏமாளி' என்ற இரு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருக்கிறது. 'பாரீஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்று இரு நாவல்களும் எழுதியிருக்கிறார். 

அரிசங்கரின் புனைவுலகம் அன்றாடம் நாம் காணும் எளிய மக்களை முன்வைத்து எழுதப்படுவது. சாமானியர்களின் சிக்கல்களை, மாறிவரும் சூழலில் மனித மனங்கள் திரியும் தருணங்களை மிக இயல்பாக காட்டிச்செல்வது. நான் அரிசங்கரை விரும்புவது அவர் எழுத்தில் நான் காணும் புதுச்சேரிக்காக, நான் இன்று காணும் புதுச்சேரியும் அவர் சொல்லும் நேற்றைய புதுச்சேரியும் இணைந்து எழும் புது நிலத்திற்காக எனக்கு அவர் முக்கியமானவர்.  




உடல் கதைகள், காட்சி ஒன்றை சொல்லி நம்மை கதைக்குள் கொண்டு செல்கின்றன. இந்த துவக்க உத்தி பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங் களிலும் நன்றாக வந்திருக்கிறது.  உரையாடல்கள் எல்லாமே குரல் உயர்த்தாத சிறிய உரையாடல்கள். அரி கதைகளில் அகத்தில் ஒலிக்கும் குரலுக்கும், காட்சி சித்தரிப்புகளுக்கும் உரையாடல்களுக்கும் இடையே ஒத்திசைவு இருக்கிறது, செயற்கையான காட்சிகளோ, நீண்ட உரையாடல்களோ இல்லை, தன்னியல்பில் காணும் காட்சிகள் தான். அவரது கதைமாந்தர்கள் சமயத்தில் மிகவும் சூடான தருணங்களிலும் நிதானம் தவறாமல் இருக்கிறார்கள், மிகையான உணர்வுகள் என்றோ, எதிர்மறை என்றோ இல்லை. மிக நீண்ட முடிவிலாத முத்தம், ஒரு ஏக்கத்தை முன்வைக்கிறது, அதையே சில காட்சிகள் உரையாடல் வழி சொல்கிறது காமுறுதல். இரண்டும் இன்றைய சூழலில் பணிக்கு செல்லும் பெண்கள் இழக்கும் உடலின் தன்விருப்புகளை சொல்கிறது எனலாம். காமுறுதல் இன்னும் தவிப்பை முன்னிறுத்தியிருக்க வேண்டிய கதை. 

கூண்டுக்கு வெளியே எளிய, உணர்வுப்பூர்வமான கதை, முன்பு தான் சிறையில் இருந்த அறையை  பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது சுப்பையாவுக்கு, அதை நெருங்க அவருக்கு உடல் நடுங்குகிறது, மனைவி விஜயாவோ அந்த அறையை பார்த்துவிட பேரார்வத்துடன் இருக்கிறாள். 

துணிக்கடை பொம்மைகள் அழகழகாய் உடை அணிந்திருப்பதை பார்க்கிறோம், உடல் சிறுகதையின் செல்வம் அப்படி ஒரு பொம்மையை நேசிக்கிறான். நிஜ மனிதர்களுடனான சிக்கல்களை விட்டு பொம்மைகளின் உலகில் வாழ விரும்புகிறான். ஒருநாள் பொம்மை அவனது நிஜவாழ்வின் சிக்கல்களை சீண்டுகிறது, அவனது எதிர்வினைதான் கதை. ஒரு மெல்லிய இழையாக சந்தேகத்தை அடைபவன் தன் வன்முறையை வெளிப்படுத்தும் இடம், பல வகைகளில் இதைப்பொறுத்திப்பார்க்க முடிகிறது. நிஜ வாழ்வின் சிடுக்குகளை மெய்நிகர் உலகில் நாம் சமரசம் செய்துகொள்வதைப்போல.  

அதற்கு எதிராக கடும் பணியிலிருந்து வெளி உலகில் இருக்கத்துடிப்பவனின் கதை, பைனரி மழை. ஒரு நிஜ மழையிலிருந்து பைனரி மழைக்கு வீழ்ந்து விடுபவனின் கதை. சிறிய அழகான மாய யதார்த்தம் போன்ற கதை, இவ்வகைக்கதைகளை இன்னும் அரி எழுதலாம்.   

அம்மா இன்னும் சாகவில்லை, தொகுப்பின் தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் முக்கியமான பேசும் பொருள். ஆனால் கதையில் வேறு அடுக்குகளும் இருக்கின்றன. மனநிலை சரியில்லாத ஒருமகனை குடும்பம் அணுகும் முறையை சொல்கிறது. குமரனின் உடல் இளைஞனாக மாறும்போது அவன் அண்ணன், அப்பா எல்லோரும் அதைக்கையாள மனம்குன்றிப்போகிறார்கள். குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களையும் கதை இணைத்து ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. 

ஒலிக்குறிப்புகள் இந்தத்தொகுதியின் முக்கியமான கதை, ஒருகுடும்பத்தில் கணவனுக்கு கண் பார்வை போய்விடுகிறது. அவன் முன்பு இருந்ததை விட துல்லியமாக பார்க்க ஆரம்பிக்கிறான், அது அவனை சுற்றியிருப்பவர்களுக்கு பிரச்சனையாகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அவன் இறந்தும் போகிறான். கதைகளில் மனஓட்டத்தின் குரலும் உரையாடலும் இவ்வளவு சீராக தொனிமாறாமல் எழுதப்படுவது அரிது. 

முகம் தன் முகத்தை வெறுக்கும் ஒருவனது கதை, இதற்கான காரணம் ஒரு கனமான ஒரு விஷயம், ஆனால் கதை அதை மெலோட்டமாகவே கையாள்கிறது. முடிவில் வேறு ஒரு கோணம் கிடைக்கிறது. 

 மாகாளி இந்த தொகுப்பின் முத்தாய்ப்பான கதை, சரவணன் மாகாளி இருவருக்கும் இடையில் நடக்கும் கதை, இவர்கள் நண்பனான கதிர் இருவரையும் பார்க்கும் விதம் கதையில் உள்ளது. திருநங்கை ஒருவரின் உளவியலை மெல்லுணர்வுகளோடு அணுகும் கதை. உண்மைக்கு அதிகமும் நெருக்கமான கதை. 

                                                  எழுத்தாளர் அரிசங்கர்

அரி அதிகமும் கதைகளை நிஜ மனிதர்களை தொட்டே எழுதுகிறார். நடை மெதுவாக நகரும் ஓடை போன்றது, காட்சிகளை விவரிக்கும் விதத்தில் வலுவான எழுத்து. உளவியல் சிக்கல்களைக் காட்சிகளின் வழியே சொல்கிறார். நிச்சயம் 'ஒலிக்குறிப்புகள்' அரிசங்கரின் பாணிக்கதைகளில் முக்கியமானது. நான் அரி இன்னும் மாகாளி, அம்மா இன்னும் சாகவில்லை போன்ற கதைகளின் வழி பயணிக்கவேண்டும் என எண்ணுகிறேன். உடல் கதைதான்  அதுபோன்ற தேடலில் அவர் செல்லலாம் என்று என்னிடம் சொன்னது. 


-தாமரைக்கண்ணன்

புதுச்சேரி

23.05.2023


உடல் சிறுகதைகள்  - புத்தகம் வாங்க 









Comments