நாடக வடிவில் பஷீரின் மதிலுகள்

 


விவரமறியாத வயதில் எங்கள் வீட்டில் சிறுவர் புத்தகங்கள் பல கிடைக்கும், சிறுவர் மலர், சிறுவர் மணி இவையிரண்டும் நாளிதழ்களில் இணைப்பாக வருபவை. அம்புலி மாமா எப்போதாவது அம்மா திண்டுக்கல் தசரதன் புக் ஸ்டோரை கடக்கையில் அதன் முகப்புப்படங்களை ரசிக்க நேர்ந்தால் கிடைப்பது. முத்து காமிக்சின் முகமூடி மாயாவி வேதாளர் அண்ணன் மூலம் கிடைப்பார். பூந்தளிர், கோகுலம் இவை இரண்டும்  அண்ணனது தேர்வா அல்லது அம்மாவினுடையதா என்று தெரியாது. அந்த காலத்திலேயே வீட்டில் கல்கண்டு, தேவி, ராணி முதலிய பத்திரிக்கைகளை பார்த்த நினைவும் இருக்கின்றது. பூந்தளிரில் வந்த கதைகளில் ஆலிஸின் அற்புத உலகம் வெகுநாட்கள் நினைவிலிருந்தது. வித்தியாசமாக இருந்த மற்றுமோர் கதையை, இது குழந்தைகள் படிக்கக்கூடிய கதையா என்று அப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  கதை சித்திரமாக இன்றும் மனதில் இருக்கின்றது.  வெளியூரில் கடையில் சாப்பிட போகும் ஒருவனின் பர்ஸ் காணாமல் போய்விடுகிறது. கடையில் உள்ள அனைவரும் அவனை பரிகசிக்கிறார்கள்,  அவன் பணத்தை வைக்கவில்லை என்றால் அவனது ஆடைகளை கழற்றி அவனை அம்மணமாக்கப்போவதாக மிரட்டுகிறார்கள். அவன் தனியன், செய்வதறியாது தவிக்கிறான், நடக்கப்போகும் அவமானத்தை அஞ்சுகிறான். அப்போது தைரியமான ஒரு குரல் எழுகிறது, பர்ஸை இழந்தவனுக்காக பேசுகிறது. சாப்பாட்டுக்காக பணத்தை அந்த கொஞ்சம் கரடுமுரடான புதிய ஆள்  தருகிறான். பர்ஸ் இழந்தவனை ஆறுதல்படுத்தி வெளியே அழைத்து வருகிறான். பின் அவன் தன்னிடமுள்ள பல பர்ஸ்களை அவனிடம் காட்டுகிறான், இதில் உன்னுடையதை எடுத்துக்கொள் என்கிறான். 





அவமானம் தாளமுடியாததாக நிற்கும் ஒருவரை தான் எனவே உணரும்  சிறுவன், அன்று வீட்டு வாசலில்  நிற்கும் கடன்காரர்களை காண பயந்தவன். வெகுநாட்கள் கழித்து இந்த கதையை எழுதியவர் வைக்கம் முகம்மது பஷீர் என்றறிந்தேன். படித்தவரை  மனதிற்கு அணுக்கமான ஒருவர். பஷீரின் படைப்புகளில் ஒன்றான மதிலுகள் சில வருடங்களுக்கு முன்பு வாசித்தது, கதை முடியும் இடத்தில் கண்ணீர் துளிர்விட்டது. ஏதென்றறியாத தனிமை, இழப்பு தனிஒரு வாழ்வுக்கான நிகரனுபவம். புதுவை யாழ் அரங்கில் பஷீரின் மதிலுகள் நாடகமாக நடத்தப்படுவது அறிந்து மிகவும் உற்சாகத்துடன் பார்க்க சென்றேன். 





மதிலுகள் கதையில் பஷீர் ஒரு கைதி, சிறையில் இருக்கையில் வெறும் குரலாக ஒரு பெண் அறிமுகமாகிறாள் அவள் பெயர் நாராயணி. அவர்களுக்கு இடையில் சிறையின்  பெரும்சுவர் நிற்கிறது, அதைத்தாண்டி இருவரும் அன்பை பகிர்ந்துகொள்கின்றனர். பெண்கைதியான நாராயணி பஷீரை காண விரும்புகிறாள். கதை முழுக்கவே உருவமற்ற அனைத்து உணர்வுகளுக்கும் உயிர்கொடுக்கும் நாராயணி ஒரு குரல் மட்டுமே. நாடகம் கனவு வெளி குழுவினரால் நடத்தப்பட்டது, இயக்குனர் ஆழி வெங்கடேசன். நாடகம் மதிலுகளின் நாராயணியை நிஜ பெண்ணாக எடுத்து வந்திருந்தது. பஷீராக நடித்தவர் மட்டக்களப்பு நாடக ஆசிரியரும், தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் படிப்பவருமான கௌரீஸ்வரன், ஆகவே பஷீர் கொஞ்சம் இலங்கை தமிழில் கதைக்கும்படி ஆகியது. நாராயணியாக நடித்தவர் இடுக்கியை சேர்ந்த சரளா. நடிகர்கள் அனைவரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள். நாடகம் கதையை அப்படியே நடிக்காமல் அதன் எளிய அழகியலை காட்டுவதற்கான ஒரு நல்ல முயற்சி என அமைந்தது.  


ஆழி வெங்கடேசன் நாடக உலகில் நன்கு அறியப்பட்டவர். வெங்கடேசன் பாண்டிச்சேரியை சேர்ந்தவர், பாரதியார் கலைக்கூடத்தில் இளங்கலை சிற்பவியல் படித்தார், பின்பு புதுவை பல்கலைக்கழகத்தில் முதுகலை நாடகவியல் படித்தார். வேலு சரவணனின் ஆழி நாடகக்குழுவில் நடிகராக இணைந்த பின்னர் அது அடையாளமானது. வெங்கடேசனின் தந்தை ஒரு கூத்துக்கலைஞர். 


வெங்கடேசன் ஒரு தேர்ந்த கைவினைஞர், நாடக வடிவமைப்பு மற்றும் அரங்கப்பொருள்கள் தயாரிப்பில் அது அவருக்கு தனித்த இடத்தை பெற்றுத்தந்தது. இராமானுஜம் நாடகங்களில் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் அதன் நீட்சியாக  எஸ் பி  ஸ்ரீனிவாசனுடன் அரங்க வடிவமைப்பில் இணைந்து செயல்படவும் முடிந்தது. எஸ் பி  ஸ்ரீனிவாசன் பாணியிலிருந்து வெங்கடேசன் வளர்த்துக்கொண்ட குறைந்த எடை முகமூடிகள் தயாரித்தல் பல சமயங்களில் வெங்கடேசனின் அடையாளமாக இருக்கின்றது. தொடர்ந்து நாடக சூழலில் இருந்தும் நிலையான வேலை இல்லாதது வெங்கடேசனுக்கு சிரமமாக இருந்துள்ளது. சில வருடங்கள் தொடர்ந்து சென்னையில் இருக்க தனியார் பள்ளி ஒன்றில் கற்பித்தல் தொடர்பான கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி உதவியுள்ளது. பிறகு அங்கிருந்தும் வெளிவரக்கூடிய சூழல். அநேகமாக தமிழ் அரங்குகளில் முக்கியமான நாடக செயல்பாட்டாளர்கள் அனைவருடனும் அரங்க வடிவமைப்பு, ஒளியமைப்பு, அரங்கக் கலைப்பொருள்கள் சார்ந்து பணியாற்றியிருக்கின்றார். 


ஆழி வெங்கடேசன்


தற்போது  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் தற்காலிக ஆசிரியப் பணி. இத்தனைக்கும் நடுவில் அவரது சொந்த நாடக அமைப்பான கனவுவெளியில் நாடகங்கள் செய்து அரங்கேற்றிவருகிறார். மதிலுகள் அவரது ஐந்தாவது  படைப்பு. வெங்கடேசன் அங்காளம்மன் மயான கொள்ளை குறித்து ஆவணப்படம் ஒன்று இயக்கியிருக்கிறார். இராமானுஜன் தொடர்பாக ஒரு ஆவணப்படம் செய்யும் முயற்சிகளில் இருக்கிறார்.      வெங்கடேசனின் மனைவி ஜோன் லிண்டன் அவர்கள், சம்ஸ்கிருத நாடகவியல் சார்ந்து ஆய்வுகள் செய்து வருகிறார். அவர் ஜெர்மன் பயிற்றுவிக்கும் ஆசிரியை கூட. அவருடன் உரையாடியது மகிழ்ச்சியான கற்றல் தருணமாக அமைந்தது 








ஒரு நல்ல கலைப்படைப்பானது பிறகலைவடிவங்களை தூண்டும்படி அமையும், ஒன்றிலிருந்து இன்னொன்று என அழிவில்லாமல் பரவுவது படைப்பு. மதிலுகள் நாடக வடிவம் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. புதுச்சேரியில் தொடர்ந்து சகோதரர் யாழ் கோபி இத்தகு முயற்சிகளை முன்னெடுக்கிறார். பஷீரை மேடைப்படுத்தியமைக்கு திரு வெங்கடேசனிடம் எனது நன்றியை தெரிவித்தேன்.  



தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

 10.12.2023   






Comments