விசும்பின் துளி




பறவையாக விண்ணிலிருப்பது எத்தகைய ஒரு அனுபவம், அகல்விசும்பின் துளியான புள். சிறகுகளை உணர்ந்து பறவையின் கால்கள் மண்ணிலிருந்து எழும்புதல் போன்ற ஒருவருடம்தான் 2023 எனக்கு. 


எழுத்தாளர் ருத்ர துளசிதாஸ் மற்றும் சீனு அண்ணா

2023 புதுவருடம் பிறக்கையில் நானும் கடலூர் சீனுவும் பாண்டிச்சேரி வீதிகளில் அலைந்துகொண்டிருந்தோம். எழுத்தாளர் இளையபாரதியை சந்திப்பதற்காக. அவரது இலக்கிய பங்களிப்புகளில் முதன்மையானது மொழிபெயர்ப்பு. மய்யழிக்கரையோரம் அவர் செய்தது. அதற்காக சாகித்திய அகாதெமி பெற்றவர். கிராவின் இளையவராக அவரது நினைவுகளை பகிர்ந்துகொண்டார், உற்சாகமாக இருந்தார். எங்களையும் மொழிபெயர்ப்புகள் செய்யச்சொன்னார், வருடத்தின் முதல்நாள் அவரது ஆசியுடன் துவங்கியது. பின் புதுவை தேவாலயங்களுக்கு சென்றோம். அன்றிரவு நண்பர் விஷ்ணுகுமாரின் மகன் குட்டி நவிலின் பிறந்தநாள் விழா. பத்மபாரதி அக்கா முதல் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர், வருடம் மிக உற்சாகமாக துவங்கியது.

நவில் மற்றும் நண்பர்கள்


எனது பெயரைக்கொண்டிருப்பதாலேயே அவிநாசி தாமரைக்கண்ணன் மேல் எனக்கு தனிப்பிரியம் உண்டு. பெரும்பாலும் அவன் கஷ்டப்பட்டு எழுதும் நல்ல கட்டுரைகளுக்கான, மொழிபெயர்ப்புகளுக்கான பாராட்டுக்கள் எனக்கும், எப்போதாவது எனக்கு கிடைக்கும் திட்டுகள் அவனுக்கும் மாற்றி கிடைத்துவிடுகிறது. இரண்டுக்கும் சரியாப் போச்சேடா என்றால் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறான். அனங்கனை விழா ஒன்றில் பார்த்தபோது யாரோ பெரியவர் என்று நினைத்து ஒதுங்கி வழிவிட்டேன், வழிவிடுவதற்கு வேறு காரணமும் உண்டு, மிகக்குறுகலான வழி. உண்மையில் அங்கனான அவனுக்கு அனங்கன் என்று பெயர் வைத்தவரின் மீது கோபம் அடிக்கடிவரும், குறிப்பாக என்தோள்மீது அவன் கையைப்போட்டு நடக்கும்போது. ஒருநாள் பெயரை மாற்றக்கோரி மூச்சிரைக்க திட்டியபோது, அது அவர் என்னை பார்க்காமல் வைத்த பெயர் என்று வேறெங்கோ பார்த்தபடி சொன்னான். விதி மூவரையும் ஒன்றிணைத்தது, யாருடைய விதி என்பதில் அவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு உண்டு, எனக்கில்லை. 


இடைநாழி பெரியவர்


2022 டிசம்பரில் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டபோது அங்கிருந்த ஒரு அறையில் அமர்ந்து, நின்று, கிடந்தது மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் கோவில்கலை சார்ந்து என்னென்ன செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன், உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தோம் என்ற பொருளில் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். பின் மூவரும் சேர்ந்து குருகு இதழ் துவங்கினோம். குருகு அபுனைவு தளங்களுக்காக தமிழில் துவங்கப்பட்ட தருணம் அதுதான். இன்று நினைக்கையில் ஒரு வருடத்தை நிறைவு செய்யப்போகிறோம் என்பது மரபுப்படி எங்களுக்கே ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இதழுக்காக அதிகம் உழைப்பவர்கள் அவர்கள் இருவரும்தான் என்றாலும் நான் செய்வதற்கான விஷயங்களும் இருந்தன. 

மூன்று பேர் கொண்ட குழு

இந்த புதிய முயற்சிக்காக பல ஆளுமைகளை சந்தித்தோம், பல்வேறு தளங்களில் இருந்து பல புதியவர்களை எழுதவைக்க முயற்சிகள் செய்தோம், சமண தலங்களுக்கு பயணங்கள் சென்றோம், கற்றுக்கொண்டே இருக்கிறோம், பக்குவப்பட்டோம். குருகு பண்பாட்டுத்தளத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து செயல்படக்கூடிய இடம். ஒவ்வொரு இதழிலும் புதிய நண்பர்களின் ஆர்வமும் பங்களிப்பும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது , மேலும் இது மிகுந்து செல்லும் என்று நம்புகிறேன். குருகு இவ்வாண்டு மேலும் விரிவான களங்களில் தனது தேடலை தொடரும். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் குருகின் தனித்தன்மையை சுட்டி, குருகு இதழை புத்தாண்டு தினத்தன்று அனைவரையும் வாசிக்க பரிந்துரைத்திருக்கின்றார்.

இலக்கிய அறிமுக பயிற்சி வகுப்பு


புதுவை வெண்முரசு கூடுகையின் சார்பில் இவ்வருடம் இலக்கிய பயிற்சி முகாம் ஒன்று நடத்தினோம். கடலூர் சீனு அண்ணன் தான் பயிற்றுனர். 04.02.2023 - சனிக்கிழமை அன்று புதுவையில் நடந்த ஒருநாள் இலக்கிய அறிமுக பயிற்சி வகுப்பில், 28 பேர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தோம். 4 பெண்கள் உட்பட 25 நண்பர்கள் கலந்துகொண்டனர். வழக்கமான விஷ்ணுபுரம் பயிற்சிகளுக்கான விதிகளையே இதற்கும் கொடுத்திருந்தோம். கூடுதலாக பாண்டிச்சேரியிலிருந்து நண்பர்களை எதிர்பார்த்தோம், ஆயினும் பெரும்பாலும் சென்னையிலிருந்தே நண்பர்கள் வந்திருந்தனர், ஆனால் யாரும் அதை பூர்விகமாக கொண்டவர்கள் அல்ல. பங்கேற்க வயது வரம்பு இருந்ததை பல நண்பர்கள் தளர்த்தக்கோரினார் ஆனாலும் இது புதியவர்களுக்கான திறப்பாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தோம். சீனு அண்ணா அழகாக ஒருநாள் முழுவதையும் கையாண்டார், துவக்கத்தில் இலக்கியத்துக்கு அவர்கொடுத்த முன்னுரை இதுவரை அவர் பேசி / எழுதியதில் மிகச்சிறந்த பகுதி என நினைக்கிறேன். பயிற்சி முடிந்த பிறகு நடந்த கலந்துரையாடலில் புதுவை வெண்முரசு நண்பர்களும் பங்குகொண்டனர், பயிற்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட பலதரப்பட்ட கேள்விகளை சீனு தெளிவான பதில்கள் மூலம் எதிர்கொண்டார். பயிற்சி முடிந்ததும் அவ்வளவுநாள் பார்த்த சீனு அண்ணா இன்னும் கொஞ்சம் புதிதாக தெரிந்தார். வகுப்பில் கலந்து கொண்டவர்களில் ஒருசிலர் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுப்பதை கவனிக்கிறேன், அவர்களில் ஒருசிலர் எழுதவும் கூடும் என்பது எனது அனுமானம்.    

தாராசுரம் புல்வெளி


மார்ச் மாதம் பரத்வாஜ் ஜெயக்குமார் அவர்கள், தனது ஆலயக்கலை பயிற்சியில் கலந்துகொண்ட நண்பர்களுடன் தாராசுரம் ஆலயம் செல்வதாக இருந்தது, அஜிதன் மற்றும் நண்பர்கள் முன்னெடுப்பு அது. கடலூர் சீனுவுக்கு வந்த அழைப்பில் இஷ்டமித்ர பந்துக்களுடன் வரவும் என்று சம்பிரதாயமாக அச்சிட்டிருந்ததால், மூன்று வகைகளிலும் முதலிடத்தில் உள்ள நானும், இரண்டாவது இடம் பிடித்த மணிமாறனும், திருமாவளவனும் உடன்வர தாராசுரம் சென்றுவந்தோம். இதற்கு ஓரிரு வாரங்கள் முன்புதான் ஒருநாள் தாராசுரம் சென்றேன், உள்ளே செல்ல எதோ ஒரு தடங்கல் வந்தது, வாசலை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன், மீண்டும் செல்ல வந்த வாய்ப்பை சிக்கெனப் பிடித்துக்கொண்டேன்.ஜெயக்குமார் வகுப்பை துவங்கியிருந்த வேளையில் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றோம், பொறுமையாக ஒவ்வொன்றாக விளக்கினார். அவர் சிறுத்தொண்ட நாயனார் கதையை விளக்கிய விதம் எனக்கு பிடித்திருந்தது.  அப்போது உடனிருந்த அஜிதன், சீராளன் அறுபடும் சிற்பத்தை பார்த்து தலையை உலுக்கிக்கொண்டான் அப்பாவைப்போலவே. பின்னர் அஜிதன்  இவ்வருடம் குழந்தை இறப்புப்பாடலும், அல்கிஸாவும் எழுதினார். 

மதிய உணவு இடைவேளையில் நாங்கள் திட்டமிட்டபடி, அருகிலிருந்த சிற்பக்கலைக்கூடத்திற்கு சென்றோம். செந்தில் என்னும் கலைஞரின் கூடம் அது. கலையை உருவாக்கும் எடையின்மையை என குங்கிலியம் கலந்த மெழுகில் அச்சுக்கான சிலைகள் தயாராகிக்கொண்டிருந்தன. அங்கு குறைந்த நேரமே செலவிட்டோம் என்றாலும் செந்தில் போன்ற இயல்பாக பேசத்தயாராக இருக்கும் ஒருவருடன் உரையாடியதில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அங்கு வடுவூர் இராமன் அச்சிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு தரையிலிடப்பட்டிருந்தார், நீராட்ட காலிலிட்டு கிடக்கும் குழந்தையை போல. 



உணவு முடிந்து அம்மன் ஆலயத்திற்கு சென்ற குழுவை தொடர்ந்தோம். பெரியநாயகி ஆலய முகப்பில் இருந்த சோபன அமைப்பும், பேடியாட்டம் நிகழ்த்தும் சிலையும் என்னை கவர்ந்தன, சப்த மாதாக்கள் சிலையில் ஒன்றிரண்டு மதில் மேல் வைக்கப்பட்டிருந்தது. இரு ஆலயங்களிலும் பயிற்சி முடிந்ததும் நன்றி சொல்லி திரும்பி விட்டோம், வரும் வழியில் சிறப்பான மழை. சந்தேகப்பட்டபடி இல்லாமல் மணிமாறனின் ஆல்டோ எங்களை பத்திரமாக வீடு சேர்த்தது.  

***

மனைவிகளை எப்போதும் நம்பக்கூடாது என்பதற்கு இந்த வருடமும் நல்ல உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது. மிகவும் நம்பிக்கையோடு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய  ஒருவருட தொல்லியல் படிப்பில் சேரவா என்று கேட்டேன், சின்ன யோசனைக்குப்பிறகு சரி சேர்ந்துகொள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புக்கு புதுவையிலிருந்து சென்னைக்கு சென்று வரவேண்டும்,  வாரத்தில் ஆறுநாட்கள் நான் வேலைக்கு செல்பவன், பலநாட்கள் தாமதமாக இரவுணவுக்கு வீட்டுக்கு வருபவன். அவர்களோடு நான் செலவிடும் இந்த ஒருநாளையும் மகனும் மனைவியும் மிகுந்த சிரமங்களோடு விட்டுக்கொடுத்ததை உண்மையில்  எனக்காக அவர்கள் அளித்த பெரிய பரிசாக கருதுகிறேன். தொல்லியல் மேல் எனக்கு ஆர்வம் மட்டுமே இருந்தது, அதன் அடிப்படைகளை கற்றுக்கொள்ள விரும்பினேன். ஒருவருடம் என்பதில் அடிப்படைகளை மட்டுமே கற்றுக்கொள்ள முடியும், எங்களுக்கு பயிற்றுவிக்க துறை சார்பாக ஆய்வாளர்கள் பூங்குன்றன், குழந்தைவேலன், வசந்தி ஆகியோரை நியமித்திருந்தனர், வகுப்புகளை ஒருங்கிணைக்க ஆய்வாளர்கள் ஜீவா மற்றும் முருகன் உதவினர். என்னோடு இவ்வருட வகுப்புகளுக்கு எழுத்தாளர் வடிவரசும் வந்தார். வடிவரசு தமிழில் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் எழுதிவருபவர், அவரது படைப்புகளில் நிலைத்திணை முக்கியமான நூல். வடிவரசு இதழாளர் மற்றும் பாடலாசிரியரும் கூட. 

பூங்குன்றன் அய்யா வகுப்பில்


தொல்லியல் வகுப்புகளில்  பூங்குன்றன்  ஐயா மிகுந்த உற்சாகத்தோடு பாடம் நடத்துவார், பெரும்பாலும் கி ரா வகுப்பெடுப்பது போலத்தான், நிமிஷத்துக்கு நூறு தகவல் சொல்லும் ஆசுகவி, அவர் இன்றிருக்கும் தளர்ச்சியில் குடிநீர் புட்டியிலிருந்து நீர் அருந்த அவரால் முடியாது, ஒருவர் உதவிதேவை. ஆனால் எங்களுக்காக தொடர்ந்து வகுப்பெடுத்தார், எல்லோரிடமும் உரையாடுவார், முதிர்ச்சியற்ற கேள்விகளை அதற்கான நிபுணர்கள் கேட்கும்போது கோபிக்க மாட்டார், பொறுமையாக விளக்குவார். இன்றைய சமூக சூழலில் சிக்கலான கேள்விகளை எதிர்கொள்ள தெரிந்த, அதை நேர்மையாக விளக்கி புரியவைக்கும் திறனும் கொண்ட ஆசிரியர் அவர். வகுப்புகள் தாண்டி களப்பயணங்கள் பயிற்சி பட்டறைகள் ஒருங்கிணைக்கப்பட்டது அனைவருக்கும் உதவியாக இருந்தது. நான் கட்டிடக்கலை, அகழாய்வு, வரலாறு, தமிழி எழுதுதல் ஆகியவற்றை ஓரளவு கேட்டு தெரிந்துகொள்ள இந்த வகுப்புகள் மிகுந்த உதவியாக இருந்தன. வருட முடிவில் புயல்காரணமாக தேர்வுகள் சரியாக விஷ்ணுபுரம் விழா நாட்களில் வைக்கப்பட்டது, வேறுவழியில்லை. குறுஞ்சிற்பங்கள் தொடர்பான எனது ஆய்வேட்டையும் சமர்ப்பித்தேன்.    

***



ஒருவருடம் முழுக்க நிகழ்த்துக்கலை பார்ப்பதற்காக பயணங்கள்  செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் தொல்லியல் வகுப்புகளுக்கு சென்றதால் அதை முழுமையாக செய்யமுடியவில்லை. சென்ற வருட இறுதியில் திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி திருவிழாவில் கைசிக புராணம் நாடகம் பார்க்க நானும் அனங்கனும் சென்றிருந்தோம். பின் அழகிய மணவாளன் மற்றும் கோவை விக்ரம் அண்ணாவுடன் கொடுங்கல்லூர் மீனபரணிக்கு சென்று வந்தேன், அம்மையை கோயிலுள் சென்று பார்க்க இன்னொருமுறை போகவேண்டும். அந்த பயணத்திலேயே கார்த்தியாயினி ஆலயத்தில் நிகழ்ந்த ஒரு கதகளியும் கண்டோம், கல்யாண சௌகந்திகம் ! கடலூர் சீனு அண்ணா, மணிமாறனுடன் சேர்ந்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி சென்று வந்தேன், திருவையாறு ஆராதனைக்கு விஷ்ணுவுடன் சென்றேன். வருட இறுதியில் உடுப்பியில் சென்று யக்ஷகானா பார்த்தோம். அடுத்த வருடமும் திட்டங்கள் இருக்கின்றன. உண்மையில் ஒரு கலைவடிவத்தை நேரில் காணும்வரை நமக்கிருக்கும் எண்ணமும், நேரில் பார்த்தபிறகு கிடைக்கும் அனுபவமும் வேறுவேறானவை. பல இடங்களில்  நானே மேடையில் அனைத்துமாக இருப்பதாக ததும்பிக்கொண்டிருந்தேன், அங்கு என்னை தவிர யாரும் இல்லை. 

***

இவ்வருடம் மூன்று இடங்களில் பேசியிருக்கிறேன்,  காவிய முகாமில் நாஞ்சில் நாடனின் அம்மை பார்த்திருந்தாள் கதையை பேசினேன், ஊட்டியில் நடந்த காவிய முகாம்கள் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. ஒருமுறைதான் சென்றிருக்கிறேன் என்றாலும் ஊட்டியில் 2018ல் நடந்த முகாம் எனக்கு இலக்கியம் குறித்த பல அடிப்படைகளை கற்றுக்கொடுத்த இடம். நாஞ்சில் தொன்று நிகழும் மரபிலிருந்து நம்மை தீண்டும் விரல். அவரது அம்மை பார்த்திருந்தாள் கதை என்னை மிகவும் பாதித்த ஒன்று, நண்பர் மணிமாறன் ஒருங்கிணைக்கும் சிறுகதைக்கூடல் அமர்வில் ஏற்கனவே பேசியுமிருந்தோம். எழுத்தாளர்கள் போகன், சுனில் கிருஷ்ணன், அகரமுதல்வன், எம் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கதை மீதான தங்களது பார்வையை முன்வைத்தனர். தனது பெருவலி கதையில் வலியை ஒருதரிசனமாக்கியிருக்கிறார் ஜெ. நாஞ்சிலோ பசியை ஒரு மனிதனாக்கி நமக்கு அருகில் அமர்த்தி வைத்து விடுவார், அவன் கண்களை நாம் பார்க்காமலிருக்க முடியாது. பசியையும் ருசியையும்  லிங்கோத்பவர் கதையுடன் இணைத்து நான் பேசினேன்.     

***

ஆகுதி நடத்திய ஒருநாள் எம் கோபாலகிருஷ்ணன் படைப்புலகு நிகழ்வில் எம் கோபாலகிருஷ்ணன் நாவலான தீர்த்தயாத்திரையை குறித்து பேச அகரமுதல்வன் அழைத்திருந்தார். சென்னையில் சென்று பேச முதலில் தயக்கம் இருந்தது, பின்னர் மனம் சமாதானப்பட்டது. கலந்துகொண்டேன், எழுத்தாளர்கள் வேல்கண்ணன் , அரிசங்கர் ஆகியோர் உரை நன்றாக வந்திருந்ததாக சொன்னார்கள். எனக்கு எம் கோபாலகிருஷ்ணன் படைப்புலகுடன் மேலும் அணுக்கமாக இது உதவியது. விழாவில் விக்னேஷ் ஹரிகரனது நிறைவுரை பிரமாதமாக இருந்தது. 

வருட இறுதியில் நண்பர் முத்து மாணிக்கம் ஒருங்கிணைக்கும் திருவாசக வாசிப்பு கூட்டத்தின் துவக்கமாக மாணிக்கவாசகர் குறித்து பேசினேன். தூலமாக வாதவூரர் எப்படி வரலாற்றில் தேவார மூவருடன் சேர்ந்து நால்வரானார் என்பது குறித்த உரை. மேலும் செறிவாக்கி இதை கட்டுரையாக வெளியிடலாம் என்று எண்ணுகிறேன். 

*** 



புதுவை வெண்முரசு கூடுகையில் எங்களுடைய இவ்வருட நாவலான இந்திரநீலம் நிறைவு தருணத்தில் நண்பர் ஜா இராஜகோபாலன் ஒரு உரை நிகழ்த்தினார். ஜாஜா சிலஆண்டுகள் முன்பு புதுவையில் நடந்த ஓராண்டு வெண்முரசு வாசிப்பு நிறைவு கூட்டத்தில் வெண்முரசு வசிப்பது எப்படி என்ற ஒரு உரை நிகழ்த்தினார், எனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதையொட்டி மழைப்பாடல் நாவலை பலஅடுக்குகளாக பிரித்து ஒரு கட்டுரை எழுதினேன். மீண்டும் இப்போது ஜாஜாவின் உரையை கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஜா ஜா தற்போது பிரபந்த வகுப்புகள் நடத்துகிறார், இந்திரநீலம் நாவலின் வாசிப்பை பேசுகையில் பல பிரபந்த பாடல்கள் வந்து விழுந்தன. மகத், நான் என்னும் விஷயங்களை முன்வைத்து ஜாஜா பேசிய உரை மிகச்சிறப்பாக இருந்தது, இந்திரநீலம் நிறைவில் எழும்  காளிந்தியின் நிலையை அழகாக விவரித்தார். 

***

இவ்வருடமும் நிறைய புதிய நண்பர்கள் ஏற்பட்டார்கள், எழுத்தாளர் அரிசங்கர், எழுத்தாளர் அகரமுதல்வன், மொழிபெயர்ப்பாளர் அழகிய மணவாளன், பன்னிர்செல்வம், முத்து மாணிக்கம் அனைவருடனும் தொடர்ந்து பேசுகிறேன். அழகனுடன் பயணங்கள் செல்ல துவங்கிவிட்டேன், பிறரோடு பயணங்கள் திட்டத்தில் இருக்கின்றது. ஏற்கனவே புதுவை முத்துக்குமார் அண்ணனோடு செல்ல வேண்டிய பயணமும் திட்டத்திலிருக்கிறது.

தமிழ் விக்கி தூரன் விழா இம்முறை இன்னும் சிறப்பாக நடந்தது, குருகு இந்நிகழ்விற்காக ஒரு சிறப்பிதழை கொண்டுவந்தது. விழாவை ஒட்டி நடந்த இசை நிகழ்வை குறித்து எழுதினேன். புத்தக வாசிப்பு அனுபவங்களை எழுதினேன். தூரன் விழாவின்போது சதா அண்ணா வழிகாட்டலில் கொடுமணல் சென்று வந்தோம், எழுத்தாளர் அரிசங்கருடன் பாகூர் ஆலயம் போனேன்.  கடவுள் பிசாசு நிலம் நூல் மீதான எனது மதிப்பீடுகள் கட்டுரையாக நாளிதழில் வெளிவந்தது.

முதன்மையாக இவ்வருடம் குருகு இதழுக்காக ஆடல் என்னும் தொடரை எழுதத்துவங்கினேன். நடனம் மற்றும் கடவுள்களுக்கு உள்ள பிணைப்பு இதன் மையம், முதலாவதாக முருகனது ஆடல் நடந்துகொண்டிருக்கிறது.  உண்மையில் எழுதுவது அவஸ்தை என்று கண்டுகொண்டேன். ஆய்வு நோக்கில் எழுதுவது இன்னும் மோசம். இத்தொடர் என்னை மாமல்லை, காஞ்சி, தாராசுரம், தஞ்சை, கும்பகோணம் கோவில்களுக்கு செல்லுமாறு அலைக்கழித்தது. வெவ்வேறு திசைகளில் சிவ மாதவன், கரு ஆறுமுகத்தமிழன் துவங்கி அஜிதன் வரை சந்தேகங்கள் கேட்டு பேசவைத்தது. நிறைய படிக்கவும் தேடவும் புதிய நூல்களை, நூலகங்களை கண்டடையவும் செய்தது. ஆடல் கட்டுரை குறித்து அகரமுதல்வன் நிறைய பேசினார், தனது தளத்தில் பாராட்டி எழுதினார். 


அடுத்த வருடம்  மேலும் சில முக்கியமான விஷயங்களை எழுத திட்டமிட்டுள்ளேன், ஒரு வகையில் வரலாற்றை மாற்றுப்பாதைகளில் அணுகுதல் எனலாம். ஒன்று உறுதி இனி இந்த அணங்கு என்னை விடப்போவதில்லை. படித்தும் எழுதியும் பயணித்தும் உரையாடியும் எனது ஆயிரம் கைகளால் விண்ணையும் மண்ணையும் ஆரத்தழுவிக்கொள்ள விரும்புகிறேன், இறைவன் எனது சிறகுகளுக்கான  வலிமையை கொடுக்கட்டும். 

புதுச்சேரி 

31.12.23

***

Comments