சுரேஷ் என்னும் புதிய பணியாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தார். அவருக்கு தொழிற்சாலையில் உள்ள அனைவரையும் அறிமுகம் செய்யும் பொறுப்பு என்னுடையது. என்னை விடவயதில் கொஞ்சம் பெரியவர். பின் சுரேஷ் எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் ஆனார்.
சுரேஷ் அந்த நிறுவனத்தில் அனைவருக்கும் பிடித்தவனாக மாற குறைந்த அவகாசமே எடுத்துக்கொண்டான். அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது. எப்போதும் பரபரப்பாக இருப்பான் வேலை செய்ய முகம் சுளித்ததில்லை. அவனது குறைந்தபட்ச ஆங்கிலத்தை கொண்டு எந்த ஊருக்கும் சென்றுவருவான், வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வருகையில் அவனை தனியாக விசாரிப்பார்கள். ஆச்சரியமாக இருக்கும், அவன் படித்தது ஐடிஐ தான் பின் பகுதி நேரமாக டிப்ளமா படித்திருக்கிறான். துவக்கத்தில் சுந்தரம் கிளைடன் நிறுவனத்தில் பணிபுரிந்தான், ஓசூர் அவனுக்கு பிடித்தமான ஊர் .
அவன் பணிபுரிந்த தரக்கட்டுப்பாட்டு துறையில் பிறரை பகைத்துக்கொள்ளாமலிருப்பது பெரிய காரியம். இவனோ ஒரு பெரிய நிறுவனத்தின் எல்லா துறைகளிலும் புகுந்து வெளியே வருவான். என்னை சிலநாட்களிலேயே புரிந்துகொண்டான். அவனுக்கு என் திறமைகள் தெரியும், நிறுவனத்திற்கான பிரசன்டேஷன் செய்ய எப்போதும் என்னுடன் இருப்பான். ஒரு கட்டத்தில் அவனது துறைக்கு தலைவராக்க அவனை நிர்வாகம் நினைத்தது, இன்னும் கொஞ்சகாலம் போட்டும் சார் சீனியர்கள்ளாம் இருக்காங்க என்று சொல்லிவிட்டான் .
நிறுவனத்திற்கு வெளியே உண்மையில் சுரேஷ் ஒரு சமூக மனிதன், கடலூரில் வெள்ளம் வந்தபோது பிரட் பாக்கெட்டுகளை சேகரித்து நண்பர்களை அழைத்துக்கொண்டு ஓடினான். யாருக்கும் எப்போதும் உதவி செய்ய தயாராக இருந்தான். வில்லியனுரில் அவன் தங்கியபிறகு , நிறுவனத்தில் சேரும் அனைவருக்கும் அங்கேயே வாடகை வீடு பார்த்துக்கொடுத்தான். எங்கள் நிறுவனம் அந்த தடத்திற்கு தனி வண்டி விடவேண்டி வந்தது. வாய்ப்பு கிடைத்தால் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிரிக்கெட், அவன் வீட்டிலேயே சாப்பாடு . நிறுவனத்திற்கு பயிற்சிக்கு வரும் அப்ரண்டிஸ்களும் , நிறுவனத்தின் தலைவரும் அவன் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார்கள் . அவனால் அதிகம் சாப்பிட முடியாது, மீன் என்றால் கொள்ளைப்பிரியம். அவனே குழம்பு வைத்து எடுத்து வருவான், எனது மனைவிக்கு குழம்பு எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுத்தான்.
எப்போதும் எல்லாருக்கும் கேட்காமலே விஷயங்களை சொல்லிக்கொண்டிருப்பான், குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது, எந்த மருத்துவமனையில் என்ன வசதி இருக்கிறது, எந்த ரயில் தென்காசிக்கு போகும், எது நாக்பூருக்கு, எந்த நாட்டுமருந்து கடையில் பிள்ளை மருந்து கிடைக்கும். எந்த பிரச்சனைக்கு அரசு ஆன்லைனில் தீர்வு வைத்திருக்கிறது, எந்த வண்டி நீடித்து உழைக்கும் இன்னும் என்னென்னவோ. நண்பர்கள் திருமணத்துக்கான பரிசுகளை அவன்தான் முடிவு செய்வான், குழுவாக சென்றுவருவது வரை எல்லாமே அவன் பொறுப்பு. பணி காரணமாக அவசரமாக யார் வெளியூர் சென்றாலும் அவர்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறதா, ஏதும் தேவையா என்று விசாரித்துக்கொண்டு இருப்பான். கோவிட் சமயம் வந்தபோது, நிறுவனம் இயங்குமா என்ற சந்தேகம் வந்தது, நாளை மீது அனைவருக்குமே பயம் வந்தது. நானும் அவனும் ஒரு மாதத்திற்கு மேல் தாங்கக்கூடியவர்கள் அல்ல, பின் அவனே நிலைமை சீராகும் வரை ஒவ்வொருநாளும் என்னை நிறுவனத்திற்கு அவனது வண்டியில் அழைத்து சென்றான். அந்த குழப்பமான காலகட்டத்தை எனக்கு நம்பிக்கையின் காலமாக மாற்றியது அவன்தான். வில்லியனுரிலிருந்து கிராமத்து சாலைகளின் வழியே செல்லும்போதெல்லாம் அங்கிருந்த சிறு கடைகளில் வீட்டுக்கு தேவையானதை வாங்குவோம், கிராமங்களில் காய்கறிகள் பழங்கள் வாங்குவோம். நிறுவனம் மீண்டும் செயல்பட அரசு சொன்ன வழிமுறைகளையும், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் மனதில்கொண்டு ஒவ்வொன்றாக மாற்ற ஆரம்பித்தோம், எப்போதும்போல அவன்தான் முன்னால் நின்றான்.
ஏதோ பதைபதைப்பு அவனுக்கு இருந்தது. அவன் மனைவியை அரசுப்பணிக்கு தயார் செய்தான் , இயலாது போகவே மீண்டும் அவர்களை எம்டெக் வரை படிக்க வைத்தான். மகன் கௌஷிக், மகள் சாய் எனது மகனின் வயதுக்கு ஒத்தவள், இருவருக்கும் எட்டு நாட்கள்தான் வித்யாசம். அவனுக்கு ஓசூர் சென்றுவிடவேண்டும் என்று இருந்தது, பணி மாறுதல் விண்ணப்பித்திருந்தான். மனைவிக்கு அங்கு வேலை வாங்கியிருந்தான். சென்ற 2022 நவம்பரில் நிறுவனத்தில் நடந்த குழந்தைகள் தின விழாவில் என் மனைவி குழந்தையிடம் பேசியிருந்தான், வீட்டுக்கு வர்றேம்மா என்று சொன்னான். நவம்பர் இறுதியில் காய்ச்சல் மிகுதியாக இருந்தது ஓசூர் பெங்களூரில் சென்று பரிசோதனை செய்தார்கள். சிறிது நாட்களிலேயே இரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. வேலூரில் அவர்கள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருந்தது. சென்னை அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனை அவனுக்கு பெரும் அசுவாசத்தை கொடுத்தது. அவனது இறுதி நாட்கள் அங்குதான் கழிந்தது. ஒருமுறை தான் அவன் சிகிச்சை தருணத்தில் சந்திக்க முடிந்தது. மீண்டு வந்துவிடுவேன் என்றான், எல்லோருக்கும் எப்படி அவன் புற்றுநோயிலிருந்து மீண்டேன் என்று நம்பிக்கை உரையாற்றுவேன் என்றான். அது நிகழவில்லை. 2023 மே மாதத்தில் இறந்துபோனான். அவனது இறுதி அஞ்சலி அறிக்கையை நான் தான் தயார் செய்தேன்.
எல்லா ஊர்களிலும் சுரேஷ்கள் இருப்பார்கள், அருகி வரும் அவர்களால் தான் இன்னும் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவன் என்னுடன் இருந்த காலத்தில் எனக்கு பெரும்நம்பிக்கையாக இருந்திருக்கிறான். நான் சோகமாகவும் கோபமாகவும் இருந்த சமயங்களில் என்னை கொஞ்சி சிரிக்க வைத்திருக்கிறான். நான் அவனுக்கு என்ன செய்தாலும் அவன் எனக்கு அளித்தவற்றுக்கு ஈடாகாது. இப்போதும் அனிச்சையாக அவனை தேடுகிறேன், சில நேரங்களில் அருகே அவனை பார்க்கவும் செய்கிறேன்.
இதயம் கனத்தது.கண்கள் பனித்தன.
ReplyDelete