குடும்ப சுற்றுலா

 


குடும்பத்துடன் புத்தகக்கண்காட்சிக்கு போகவேண்டும் என்பது எனது ஆசை. இம்முறை மனைவி மற்றும் கவினை அழைத்து சென்றேன்.  மூவரும் புத்தகங்களை வாங்கினோம், எனது மனைவி சிலநாட்கள் முன்புதான் அசோகமித்திரனை படிக்க துவங்கி இருந்தாள். எனவே அவளது தேர்வாக அசோகமித்திரன், ஜெயமோகன் மற்றும் சுஜாதா இருந்தனர். கவின் பெரும்பாலும் என்னை எல்லா அரங்கங்களுக்கும் அழைத்துச்சென்று இந்த புத்தகத்தை நீ ஏன் வாங்கிக்கொள்ள கூடாது என்று பரிந்துரை செய்துகொண்டிருந்தான். அவ்வளவு மோசமான பரிந்துரைகள் அல்ல. அவனுக்காக சில கதைப்புத்தகங்கள் வாங்கினோம். மனைவி அசோகமித்திரனின் ஒற்றன் வாங்கினாள். 

விஷ்ணுபுரம் அரங்கில் ஜெ-வை பார்த்தோம். மனைவி அவரிடம் கையெழுத்து வாங்கினாள், கவினை ஜெ செல்லம் கொஞ்சினார், ஆசிர்வதித்தார். அஜிதனை பார்க்க விரும்பினேன், அஜி  மாலை தான் வருவதாக இருந்தார். புத்தகக்கடை செந்தில் அண்ணா, குவிஸ் செந்தில், மீனாம்பிகை அக்கா இவர்களோடு அன்பு அவர்களையும் அரங்கில் பார்த்து பேசினோம். 

நான் இப்போதெல்லாம் மெய்யப்பன் பதிப்பகம், பாரி நிலையம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் , சாகித்திய அகாடமி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த வரிசையில் சமீபமாக தமிழ்நாடு பாடநூல் கழகம் இங்கெல்லாம் மட்டும் செல்பவனாக மாறிக்கொண்டிருக்கிறேன். பதிற்றுப்பத்து புதுப்பிரதி பாடநூல் கழகத்தில் வந்திருக்கின்றது. எனக்கான புத்தகங்கள் சிலவும், நண்பர்களுக்கு பரிசளிக்க சில நூல்களும் வாங்கினேன். வெளியே வந்து அனங்கனிடம் பேசிக்கொண்டிருந்தேன், எங்களை பேருந்து ஏற்றி விட்டான். இரவு வீட்டுக்கு வர வெகுநேரம் ஆகிவிட்டது. கவினுக்கு இது நீண்டபயணம். அனங்கனை நண்பர்களின் புதிய தொகுப்புகள் உட்பட இன்னும் சில புத்தகங்கள் வாங்க சொல்லியிருக்கின்றேன். 

அடுத்தமுறை புத்தகங்களுக்கு இன்னும் செலவிடுவதாக பேசிக்கொண்டோம், இப்போது இது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தேவையாகவும் மாறிவிட்டது. 


தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி

Comments