பனை இலக்கிய வட்டம் - குருகு உரையாடல்

புதுச்சேரியில் நவீன இலக்கியம் குறித்த உரையாடல்களை ஆரம்பிக்கும் விதமாக நண்பர்கள் பனை இலக்கிய வட்டம் என்ற அமைப்பை துவங்குகின்றனர். அதன் முதல் அமர்வாக குருகு இதழ் குறித்த உரையாடல் 02.03.2024 அன்று நிகழவிருக்கின்றது.
புதுச்சேரி கலாச்சார வளமிக்க பிரதேசம். இதன் நாட்டார் தன்மை, சோழமண்டல கடற்கரையின் வணிகம், சோழர் பல்லவர் ஏற்படுத்திய கோவில்கள், பிரெஞ்சித்திய நீட்சி என்று பல அடுக்குகளை கொண்டது இந்த இடம் . ஆனால் இந்த வண்டல்மண் நிலத்தில் நவீன இலக்கியம் பெரிய பேசுபொருளாக இல்லை. மாஹேவை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட மய்யழிக்கரையோரம் போன்ற படைப்புகள் எழவில்லை. சொல்லப்போனால் இந்த ஊர் பாரதிதாசன் கால இலக்கியத்திலேயே உறைந்துபோய்விட்டதுபோல நடந்துகொள்கிறது, நீண்டகாலம் அது அப்படி ஒரு பாவனையில் இருக்க முடியாது. தொடர்ந்த நவீன இலக்கியம் குறித்த தீவிரமான உரையாடல்கள் இங்கு தேவை. இதை பனை ஆரம்பித்து வைக்கிறது என்று நம்புகிறேன். நண்பர்கள் அரிசங்கர், மஞ்சுநாத், விஷ்ணுகுமார் இவர்களோடு இணைந்து என்னால் இயன்ற பங்களிப்பையும் செய்ய முயல்வேன்.
பனையின் முதல் கூட்டம் குருகு இதழுக்காக நடப்பது மகிழ்ச்சி. குருகு நவீன இலக்கியம் சார்ந்து நேரடியாக பங்களிக்கும் இதழ் அல்ல, அதன் களமே அபுனைவுத்தளங்களான கலை, வரலாறு, தத்துவம் ஆகியவைதான். ஆனால் இவை நவீன இலக்கியத்துக்கான கச்சாப்பொருள், இவற்றிலிருந்து இலக்கியம் என்ன அடையமுடியும், என்ன பரிமாற்றம் நடக்கக்கூடும் என்பதுதான் இந்த நிகழ்வின் முக்கிய பேசுபொருளாக இருக்கும். இந்த அமர்வில் குருகு இதழ் சார்பாக நானும், நண்பர் அனங்கனும் கலந்து கொள்கிறோம். நண்பர்கள் இந்தக்கூடுகைக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமர்வு நடக்கும் இடம் வில்லியனுர் அருகிலுள்ள தட்டாஞ்சாவடி யாழ் அரங்கம். யாழ் நவீன நாடக நிகழ்வுகளுக்காக தொடர்ந்து செயல்படும் முக்கியமான அமைப்பு. நவீன இலக்கிய உரையாடல் நிகழும் இடமாகவும் அதை ஆக்க உதவும் சகோதரர் யாழ் கோபிக்கு எனது நன்றிகள். எப்போதும் புதிய முயற்சிகளை தொடர்ந்துகொண்டே இருக்கும் எழுத்தாளர் அரிசங்கருக்கு அன்பு. நண்பர்கள் வருக.
நாள் - 02.03.2024, சனிக்கிழமை நேரம் - மாலை 5.30 மணி இடம் - யாழ் அரங்கம், தட்டாஞ்சாவடி, வில்லியனுர் https://maps.app.goo.gl/BgswURVezMMwTiRT6 வாட்சாப் தொடர்புக்கு - 8056668399, 9940906244

Comments