ஒளியெனில் அது

2025 வருடம் நிஜமாகவே நெமை தட்டுவதற்குள் சென்றுவிட்டது. பயணங்கள் செல்வது குறைந்து விட்டது போலவே தோன்றுகிறது அல்லது பயணங்கள் எனக்கு போதவில்லை. நண்பர்களுடன் சிறுபாணாற்றுப்படை பயணம் ஒன்று சென்று வந்தேன், அதனோடான அனுபவங்கள் அகழ் இதழில் தொடராக வெளிவருகிறது. திருவெண்ணெய் நல்லூருக்கு சகோதரர் சிவகுமாருடன் ஒரு பயணம் சென்று வந்தேன். மொழிபெயர்ப்பாளர் அழகிய மணவாளனுடன் கேரளத்தில் இரவிமங்கலம் பட்டாம்பி ஆலயங்களுக்கு சென்று வந்தேன். இடையில் தஞ்சையில் கரந்தை சிவாலயம் சென்றிருந்தேன். எந்த திட்டமும் இல்லாமல் சகோதரன் அஜி கல்யாணத்திற்கு சென்று வந்தோம், உற்சாகமான பயணமாக அமைந்தது.
கலைஞர்களை, ஆய்வாளர்களை, எழுத்தாளர்களை தொடந்து சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டு வருகிறேன். ஆடல் கட்டுரைத்தொடர் அவ்வகையில் எனக்கு பல இடங்களில் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. குருகுக்காக முழவு கலைஞர் ஈஸ்வர உண்ணியை நேர்காணல் செய்தோம், இவ்வருடம் தமிழ்விக்கி தூரன் விருதுபெற்ற சுவடியியல் அறிஞர் கோவை மணியை நேர்காணலுக்காக சந்தித்திருந்தேன். எனது மதிப்புக்குரிய ஆய்வாளர் பக்தவத்சல பாரதி அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதுதொட்டு எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடம் பேச வாய்த்தது, பேச்சு காந்தியைத்தொட்டு சுழன்றது. எனக்கு இத்தகு சந்திப்புகள் பலதிறப்புகளை அளிக்கின்றன. பல்வேறு துறைகளின் அறிவுத்தரப்புகளை ஒன்றாக்கிப்பார்க்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கின்றது. தொடர்ந்து இவ்வாறான சத்திப்புகளூடாகவே ஒரு பயணம் செய்ய வேண்டும், குமரியிலிருந்து இமயம் வரை.

சொந்த அலைக்கழிப்புகளுக்கும் குறைவில்லை. எனக்கும் மகனுக்கும் சிறு அறுவை சிகிச்சைகள். தற்போது விழுப்புரத்திற்கு வீடு மாற்றி விட்டேன் . தினமும் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் 40 கிமீ பயணிக்கிறேன். என்னைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். மனம் கொந்தளித்து அடங்குவது இடையறாது நடந்துகொண்டே இருந்தது, கீழேழு உலகங்களையும் கண்களால் கண்டேன். இடையில் எதுவும் எழுதாதது போல ஒரு அழுத்தம் ஊறிக்கொண்டே இருந்தது. மனம் செல்லும் திசையை அறிய முடியவில்லை. ஓர் இரவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனை பற்றி எழுதத்துவங்கினேன். சிலநாட்களில் சரஸ்வதி பூஜை வந்தது, அன்று அவரிடம் பேசவும் செய்தேன். இந்த வருடத்தில் இது போன்ற ஆன்மிகமான பல விஷயங்கள் நடந்தன. முன்பு பார்த்திராத அரிய பறவைகள் கண்ணுக்கு தென்படுகின்றன. மனம் அக்கணத்தில் நெக்குருகிப்போகிறது. என்ன நிகழ்கிறது இங்கு, இப்பெருவெளி இந்த மூடனிடம் ஏன் இத்தனை இரக்கம் கொள்ளவேண்டும்.

அமைப்புகளாக செயல்படும் நண்பர்களுடன் இணைந்தும் சில காரியங்கள் செய்தோம், புதுவை இலக்கிய வட்டமான பனை குழுவின் கூடுகைகளில் கலந்து கொண்டேன். பனை புதுவையில் நவீன இலக்கியத்துக்கான ஒரு சாளரமாக அமையும் என நம்புகிறேன். நண்பர் முத்துமாணிக்கம் திருவாசக வாசிப்புக்காக நடத்தும் சைவத்தேன் வலைப்பூவில் மாணிக்க வாசகர் பற்றி எழுதிய கட்டுரையும் கவனம் பெற்றது. சகோதரர் அகரமுதல்வனின் ஆகுதிக்காக நான் ஆனந்தகுமாரசாமியின் சிவானந்த நடனம் புத்தகம் குறித்து சென்னையில் ஒரு உரை நிகழ்த்தினேன்.

எழுதவேண்டும் என்பதை ஒரு மந்திரம் போல அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். பண்பாட்டு ஆய்வு தற்போது நான் இயங்கும் களம். அதற்காக நிறைய உழைக்கவேண்டியுள்ளது. தகவல் சேகரிக்க வேண்டியுள்ளது. ஒரு தகவலுக்காக ஒருவருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் அடுத்த பத்து வருடங்கள் எனக்கு இன்றியமையாதவை. மென்மேலும் இறுகிவரும் புறச்சூழல் என்னை சோர்வடையச்செய்கிறது.

நான் மிகக்கடினமான தருணங்களை கடக்கிறேன். இதுபோன்ற நேரத்தில் உறுதுணையாக இருப்பது எனது மனைவிதான், அவளது தைரியத்தில்தான் சில முடிவுகளை எடுக்கிறேன். இது என்னிடம் எஞ்சியிருக்கட்டும், வாணியை சரண் புகுவோம்.

Comments