காலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். வண்டியில் தான் கடம்பூர் செல்வதற்காக திட்டம், விழுப்புரத்திலிருந்து கிளம்பிய எனது வழித்தடம் பண்ருட்டி, வடலூர், சேத்தியா தோப்பு, காட்டுமன்னார்கோவில் பின் கடம்பூர். காலை ஏழு முப்பதுக்கு சேத்தியா தோப்பில் தினேஷை சந்தித்து அழைத்துக்கொண்டேன். தினேஷ் லால்குடியை சேர்ந்தவர், கோவில்களுக்கு செல்வதில் விருப்பம் உள்ளவர். ஜெயக்குமார் பரத்வாஜின் கோவில் கலை வகுப்புகளில் பயின்றவர். காலைப்பொழுதில் வீராணம் ஏரியை பார்ப்பது, அதனுடன் பயணிப்பது இருவருக்கும் பரவசமாக இருந்தது. தினேஷின் கோவில் பயண அனுபவங்களை பேசிக்கொண்டே வந்தோம், அவருக்கும் இதில் புலமையும் தேடலும் இருக்கிறது.
காட்டுமன்னார் கோவிலில் காலையுணவு முடித்தபிறகு, கடம்பூர் சாலையில் திரும்பினோம். கடம்பூரில் விஜய் அண்ணன் இருக்கிறார், அவர் இருக்கும் தைரியத்தில்தான் அங்கு செல்வது. மேலைக்கோவில் அர்ச்சகர் வர நேரமிருந்ததால் நானும் தினேஷும் முதலில் கீழக்கடம்பூர் சென்றோம். அற்புதமான ஆலயம், ஆனால் கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லாதது வருத்தம் அளித்தது. எஞ்சியிருந்த அழகே எங்கள் தன்னிலை அழியப்போதுமானதாக இருந்தது. அழகிய சங்கர நாராயணர் சிற்பத்தையும், நின்ற நிலையில் உள்ள த்வனி சண்டரையும் பார்த்தேன். அதே ஆலயத்தில் அமர்ந்து இருந்த சண்டேசர் வேறொரு அழகியலில் அமர்ந்திருந்தார்.
அதிக நேரம் கீழை கோவிலில் போய்விட்ட பதற்றத்தோடு மேலை கோவிலுக்கு போனோம். அமிர்தகடேஸ்வரர் ஆலயம் தொடர் வழிபாட்டில் உள்ள கோவில் 2024ல் தான் குடமுழுக்கு நடைபெற்றிருந்தது. கடம்பூரை சேர்ந்த சகோதரர் விஜய் எனக்கு முகநூல் மூலம் அறிமுகம். அவர் பெரும்பயணி, தனது இருசக்கர வாகனத்தில் அவர் தமிழ்நாடு முழுக்க அலைந்திருக்கிறார். கைவிடப்பட்ட பல சிவாலயங்களை குறித்து பதிவுகள் எழுதி கவனப்படுத்தியுள்ளார், ஏறத்தாழ நான்காயிரம் கோவில்களுக்கு சென்றிருப்பதற்காக சொன்னார். பராமரிப்பில்லாத ஆலயங்களுக்கு உதவுதல் விளக்கிடுதல் கோவில் திருப்பணிகளையும் உவப்போடு செய்பவர். நாங்கள் ஆலயத்திற்கு சென்றிருக்கையில் அவரும் அங்கு வந்துவிட்டார், குருக்களிடம் அறிமுகப்படுத்தினார். தரிசனம் முடிந்தபிறகு கோவிலை மெதுவாக சுற்றி வர ஆரம்பித்தோம். மதியம் நடை சாத்தும் வரை கோவில், தினேஷ் வெயிலில் சூடேறி செங்கண்ணனாக மாறியிருந்தார்.
விஜய் அண்ணன் வீட்டில் மதிய உணவு. வீடு கோவிலுக்கு நேர்பின்னே இருந்தது, முற்றம் கொண்டிருக்கும் அழகிய வீடு . புழக்கடையில் அல்லிக்குளமும் கிணறும் இருக்கிறது. தினேஷுக்கு அப்போதே ஒரு புத்தகத்தை பிரித்து அங்கே அமர்ந்து படிக்க வேண்டும் என்றிருந்தது, அவ்வளவு அழகான இடம். பாரம்பரியமான வீட்டை வாங்கி புதுப்பித்தததாக விஜய் அண்ணன் சொன்னார். மூன்று கறி, வடை பாயசத்தோடு விருந்து, அண்ணி எங்களுக்காக பிரயாசைப்பட்டு சமைத்திருந்தார்கள். பள்ளி ஆசிரியையான அவருக்கு அன்று விடுமுறையும் கூட. சார்லி எங்களைப்பார்க்க துடித்துக்கொண்டிருந்தான், சாப்பிடும் வரை அவனை ஒரு அறையில் விட்டு பூட்டியிருந்தார்கள். சிறு ஓய்வுக்குப்பின் மீண்டும் மாலை ஆலயத்திற்கு போனோம், விட்டுப்போன சிற்பங்களை எல்லாம் பார்ப்பதற்காக. சார்லியும் கூட ஓடி வந்துவிட்டான்.
மேலக்கடம்பூர் ஆலயம் அப்பராலும் சம்பந்தராலும் பாடப்பெற்றது. அப்பர் இக்கோவிலைக் கரக்கோவில் என்கிறார். சிற்பம் செறிந்த இக்கோவில் தேர்வடிவில் அமைந்துள்ளது. குலோத்துங்கன் காலத்திருப்பணி என்கிறார்கள். கோட்டத்தில் அழகிய சிற்பங்கள் உண்டு, மூன்று வெவ்வேறு அளவுகளில். கோவிலே சிவலிங்க வழிபாடு என்னும் கருப்பொருளை பலவகைகளில் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இருட்டும்வரை மீண்டும் சிற்பங்களை பார்த்துவிட்டு நானும் தினேஷும் விஜய் அண்ணாவிடம் விடைபெற்றுக்கொண்டோம். தினேஷை சேத்தியா தோப்பில் விட்டு விட்டு விழுப்புரம் நோக்கி பயணித்தேன். அடுத்து செய்ய வேண்டியவற்றை மனதில் ஓடவிட்டுக்கொண்டே வந்தேன். எங்கோ அங்கிருந்து விலகியும் விட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடல் இருக்கிறது, அவற்றிலிருந்து என்னை நகர்த்திச்செல்வதை எது. வீட்டுக்கு வருகையில் கவின் தூங்காமல் விழித்திருந்தான். படுத்துக்கொண்டே கால்களை உயர்த்தியும் தாழ்த்தியும் போர்வையை சுருட்டி இது கடலு என்றான், கட்டியணைத்தபடி போ பைத்தியம் என்றேன். சிரித்துக்கொண்டே நீதான் என்றான், அது வேறு யாரோ குரலில் ஒலித்தது.
தாமரைக்கண்ணன்
01-05-2025
Comments
Post a Comment