எழுத்தாளர் வளவ துரையனுக்கு பவள விழா நிகழ்வு கடலூரில் 06.07.25 அன்று நிகழ்ந்தது. ஆருத்ரா மகால் என்னும் அந்த சிறிய அரங்கம் நிறைந்திருந்தது, அரை நாள் நிகழ்வு. எழுத்தாளர் பாவண்ணனும் கடலூர் இலக்கிய நண்பர்கள் சிவகுமார், ஜெயஸ்ரீ ஆகியோரும் இணைந்து ஒருங்கிணைத்த நிகழ்வு இது. இதயத்துல்லா அண்ணனும் ஆய்வாளர் வேல்முருகனும் பண்ருட்டியிலிருந்து வந்திருந்தார்கள். புதுவை வெண்முரசு கூடுகையிலிருந்து அரிகிருஷ்ணன், மணிமாறன், விஜயன், நாகராஜன் உள்ளிட்டோர் அங்கு வந்திருந்தனர். நாகராஜனது சொந்த ஊர் வளவனூர், அவரும் வளவ துரையனுக்கு குடும்ப நண்பர். அவரது தந்தை கணேசனாரும் வளவ துரையனும் ஒன்றாக பட்டிமன்றம் பேசிய நண்பர்கள்.
வளவனூர் போன்ற கிராமப்பகுதியில் இலக்கியம் பரவ பல்வேறு காரணங்கள், தாக்கங்கள். முதலாவது அந்த சிறிய ஊரில் ராசாராமன் போன்ற இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் இருந்தது. ஒரு ஊரில் புத்தகங்கள் குறித்து பேச, செயல்பட துவக்க நபர் ஒருவர் இருக்கவேண்டும், புரவலர்கள் வேண்டும். அடுத்தபடியாக கல்வியை நோக்கி தீவிரமாக தமிழகம் சென்றுகொண்டிருந்த காலம் அது, அதனூடாக வாசிப்பை நோக்கியும் சென்றுகொண்டிருந்தார்கள். பாரதிதாசன் அந்த பகுதியில் ஒரு ஒளிமிக்க உதாரணமாக கருதப்பட்டார், அவரது பேச்சும் எழுத்தும் ஆளுமையும் இளைஞர்களை பெருமளவு ஈர்த்தது. அரசியல் இயக்கங்களின் தலைவர்களின் பேச்சும் இவர்களுக்கு தூண்டுதல்தான். அரசு சார்பில் நூலகங்களும், இயக்கங்கள் சார்பில் படிப்பகங்களும் வாசிப்பு சாத்தியத்தை எல்லோருக்குமானதாக மாற்றின.
வளவ துரையனது சொந்தப்பெயர் சுப்பிரமணியன், பள்ளிக்காலத்தில் கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தியவர். பேச்சில் அப்போதே ஆர்வம் வந்துவிட்டது. பள்ளி இறுதி காலத்தில் அரசியல் இயக்கத்துடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனது பெயரை அண்ணாத்துரையின் மீது கொண்ட ஆர்வத்தால் வளவனூர் துரையன் - வளவ துரையன் என்று மாற்றிக்கொண்டார். வளவனூரில் திருக்குறள் கழகம் துவங்கப்பட்டபோது இணைந்து பணியாற்றினார். மாதம் தோறும் இலக்கியக்கூட்டங்கள் நடைபெறும். இளமையில் பட்டிமன்றம், வழக்காடுமன்றம் போன்ற குழுக்களில் இணைந்து பல ஊர்களில் பேசியிருக்கிறார். அவரது முற்பகுதி வாழ்க்கை மேடைப்பேச்சுகள், மரபிலக்கியம், சங்கு இதழ் பணிகள் இவற்றால் நிரம்பியது. சங்கு ஒரு சிற்றிதழ், அது கையெழுத்துப்பத்திரிக்கையாக ஆரம்பித்தது, அச்சு இதழாக வந்துகொண்டிருக்கிறது. ஒரு தனிநபர் முயற்சியால் நீண்டகாலம் வெளிவந்துகொண்டிருக்கும் இதழ் என்ற பெருமை சங்குக்கு உண்டு.
வளவதுரையன் பின்னர் கிருஷ்ணாபுரத்தில் ஆசிரியரானார், அவரது மனைவி அலர்மேல் மங்கையும் ஆசிரியர். கடலூருக்கு குடிபுகுந்தார். அங்கிருந்து இலக்கியச்சோலை என்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து இலக்கியக்கூட்டங்கள் நடத்தினார். இரண்டாம் பாதியில் அவர் நவீன இலக்கியத்திற்குள் வந்தார். தமிழின் முக்கியமான பல எழுத்தாளர்கள் கடலூர் வந்திருக்கிறார்கள், இலக்கியச்சோலையில் பேசியிருக்கிறார்கள்.
வளவனூர் திருக்குறள் கழகம் நடத்திய போட்டிகளில் அப்போதெல்லாம் அவ்வூர் மாணவர்கள் கலந்துகொண்டதுண்டு, அப்படி கலந்துகொண்டவர் பாஸ்கரன் என்ற மாணவர். பாஸ்கரன் பிற்பாடு பாவண்ணன் என்ற பெயரில் எழுத்தாளரானார், தனது மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். வளவதுரையன் நவீன இலக்கியத்திற்குள் வருகையில் அங்கு அவரை வரவேற்க நின்றிருந்தவர் பாவண்ணன். இருவரும் ஒரு ஊர்க்காரர்கள், வளவனூர்க்காரர்கள். வளவதுரையனுக்கும் பாவண்ணனுக்குமான உறவு ஒரு அண்ணன் தம்பி உறவு போல. இளமையில் பாவண்ணனுக்கு தூண்டுதலாக இருந்தவர்களுள் ஒருவர் துரையன். வளவதுரையன் சிறுகதைகள், நவீன கவிதைகள், நாவல்கள் என நவீன இலக்கியத்தின் அனைத்து வகைமையிலும் எழுதுகிறார். அவரது சிறுகதைகள் வார இதழ்களில் வெளியாகின்றன, கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வளவதுரையன் எழுத்தாளர் பலருடனும் கடிதத்தொடர்பில் இருந்தவர், தற்போதும் அவர்களுடனான நட்பை பேணுபவர். புகழ்பெற்ற எழுத்தாளரும் அவருக்கு நண்பர், புதியவர்களும் அப்படித்தான். பலரை எழுத தூண்டியிருக்கிறார், படைப்புகள் பெற்று தனது இதழில் வெளியிட்டிருக்கிறார். கடலூர் சீனு சொன்னதுபோல சிற்றிதழே ஆயினும் தனது முதல் கதை, கவிதை நாஞ்சில்நாடன், தேவதேவன் படைப்புகளுக்கு அருகில் வெளியாவதை பார்க்கும் எழுத்தாளனுக்கு அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். வளவ துரையன் திருப்பாவை, மஹாபாரத சொற்பொழிவுகளும் செய்கிறார். முக்கியமான பழைய நூல்களை பதிப்பித்திருக்கிறார். தக்கயாகப்பரணி போன்ற நூல்களை உரைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
வளவதுரையன் எனக்கு அறிமுகமானது புதுவை வெண்முரசு கூட்டங்களில், தயங்காமல் அவரது இருசக்கர வாகனத்தில் கிளம்பி கடலூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு வந்துவிடுவார். அவரது பேச்சு அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்த நூலின் உவமைகளை ருசிக்க எனக்கு கற்றுத்தந்தவர் அவர்தான். சிறிது காலத்திலேயே அவரை மிகவும் பிடித்து விட்டது. அவரது அழைப்பின் பெயரில் பாரதியார் குறித்து யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி சில நினைவுகள் புத்தகத்தை பற்றி இலக்கியச்சோலையில் பேசினேன், எனக்கு குவெம்புவின் படைப்புலகம் புத்தகத்தை பரிசாக அளித்தார். பேச்செல்லாம் இருக்கட்டும், எழுத்துதான் எப்போதும் நிற்கும் தாமரை, நீ எழுது என்று அடிக்கடி சொல்வார். நாங்கள் பிற்பாடு குருகு இதழ் ஆரம்பிக்கையில் மிகவும் ஊக்கமளித்தவர். நல்ல கட்டுரைகளை, படைப்புகளை பாராட்டி உடனே கடிதம் எழுதுவார் நண்பர்களுக்கும் பகிர்வார்.
நான் அவரது செயல்பாடுகள் மீதுகொண்ட வியப்பால் அவருக்கு ஒரு ஆவணப்படம் தயாரித்தேன். நீர்வழிப்படூஉம் என்ற பெயரில் யூடியூபில் பார்க்கக்கிடைக்கும். அது கொரானா பெருந்தொற்றுக்காலத்தில் தயாரானது, மூத்த எழுத்தாளர்கள் வளவதுரையன் மீது கொண்ட மதிப்பை நான் முழுவதும் புரிந்துகொண்ட சமயம் அது. இணையம் மூலமாகவே வெளியிடப்பட்டது நீர்வழிப்படூஉம், பாவண்ணன் அந்த வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றினார். ஒரு இடர்க்காலத்தில் அந்த நிகழ்வு எனக்கும் வாசக நண்பர்கள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
வளவதுரையன் வாழ்க்கையே முழுக்க நேர்நிலை கொண்டது, யாரையும் பட்டிமன்றத்தில் கூட தாக்கிப்பேசமாட்டார் என்பது அவரது நண்பர்கள் சொல்வது. மரபிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வந்தவர் விரைவில் கணிப்பொறியில் எழுதவும் கற்றுக்கொண்டார். இப்போதும் கூட்டங்கள் நடத்துகிறார், தினந்தோறும் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது மனைவியும் அவருக்கு அனுசரணையானவர். பள்ளியில் கிராமத்துக்குழந்தைகளை டீச்சரிடம் கொண்டுவிட்டுவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார் என்று ஊர்வாசிகள் ஆவணப்படத்தின்போது சொன்னார்கள். பல குழந்தைகளை அந்தப்பள்ளியில் படிக்கவைத்து நல்லபணிக்கு செல்லும்படி வளர்த்திருக்கிறார்கள். இலக்கிய வட்டாரத்தில் டீச்சரம்மாவின் காப்பி மிகவும் பேமஸ். காப்பியின் சுவை தவிர, இருவரிடத்திலும் கசப்பு என்பதை துளியும் வேறெங்கும் பார்த்ததில்லை.
நேற்றைய விழாவின் முக்கியமான நிகழ்வு பாவண்ணன் வெளியிட்ட 'இலக்கியச்சோலையின் ஆலமரம்' என்ற வளவதுரையன் பவளவிழாமலர். இந்தப்புத்தகத்தில் நாஞ்சில் நாடன் துவங்கி எழுத்தாளர்கள், வளவதுரையனின் நண்பர்கள் வாசகர்கள் என முப்பத்தி எட்டு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நான் எழுதியிருக்கிறேன், கடலூர் சீனு அண்ணன் எழுதியிருக்கிறார், எனது நண்பர் மணிமாறன் எழுதியிருக்கிறார். வளவதுரையனுக்கு உள்ள கிரிக்கெட் ஆர்வம், அவரது சிறுகதையை படித்து விட்டு கல்வித்துறை அதிகாரி எதிர்வினையாற்றியது இப்படி ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பாவண்ணன் போன்ற ஒரு எழுத்தாளர் முன்னின்று செய்தால் தொகுப்பு எவ்வளவு நன்றாக வந்திருக்கும் என்று நான் சொல்லத்தேவையில்லை.
பவளவிழா நிகழ்வு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்தது. வளவனூரில் இருந்து வந்த நண்பர்கள் APS, APS என்று வளவதுரையனை சுற்றிக்கொண்டிருந்தார்கள். உள்ளூர் இலக்கியச்சோலை நண்பர்கள் விருந்து உபசரிப்பில் சுழன்றுகொண்டிருந்தார்கள். 'இலக்கியச்சோலை' பாணியில் நிகழ்வு கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது, பேச்சாளர்கள் அனைவருக்கும் முன்பே திட்டவட்டமாக பேசும் நேரம் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் எழுத்தாளருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்ட வந்தனர். திருக்குறள் கழக நண்பரான துரைக்கண்ணு வளவனூர் வட்டார வழக்கில் வெளுத்து வாங்கி விட்டார், மேடையில் இருந்த பாவண்ணன் முதற்கொண்டு அனைவரையும் சிரிக்கவைத்துவிட்டார். நாகராஜன் பேசுகையில் பாவண்ணன் எழுதிய வளவனூர் கதை ஒன்றை துவங்கி பேசினார், சிறிது நேரத்தில் அது வளவ துரையன் பற்றிய கதையாக ஆக்கிக்கொண்டு பேச்சை எடுத்துப்போனார், அழகிய உரை.
எழுத்தாளர் பாவண்ணன் வாழ்த்துரை வழங்க வந்தார், தனது இளமைக்கால நிகழ்வுகளை வெளிப்படுத்தினால் கண்ணீரை அடக்குவது சிரமம் என்பதால் உரையை வேறுவிதமாக அமைத்திருந்தார். பாரதத்தின் யக்ஷ பிரசன்னத்திலிருந்து துவங்கினார், அது எழுப்பும் கேள்விகள். அந்தக்கேள்விகளுக்கு நமக்குள் தோன்றும் விடைகள், தர்மனின் விடைகள். இப்படி தர்மனை குறித்த சித்திரத்துடன் துவங்கினார். பின்னர் சங்கப்பாடல்கள் துவங்கி புலவர்கள் தங்கள் ஊர்களை பெயரோடு இட்டுக்கொள்ளும் வழக்கம், அது இலக்கியத்திற்கு அளிக்கும் எடை பற்றிப்பேசினார். சமீபத்தில் நான் கேட்ட நல்ல உரை இது. இறுதியாக வளவ துரையனின் ஏற்புரை தனது வாழ்வில் இருந்த முக்கிய தருணங்களை பேசியவர், மேடையில் பாவண்ணன் இணையரைப்பற்றி பேசும்போது நெகிழ்ந்துவிட்டார், அவரது கட்டுப்பாட்டை மீறிய நெகிழ்வு அது. வந்திருந்த அனைவருக்குமே பாவண்ணனுக்கும் வளவாதுரையனுக்குமான பிணைப்பு ஆச்சரியமூட்டும்படி இருந்தது. பொதுவாகவே அவர்கள் இருவரும் அப்படி ஒன்றை பிறருக்கு வெளிப்படுத்துபவர்கள் அல்ல.
மேடையில் வளவதுரையன், பாவண்ணன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். அரங்கத்தின் எதிர்மூலையில் சிறப்பிதழ் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. நான் புத்தகங்களை பார்ப்பதற்காக எழுந்தேன். அருகே ஒருவர் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார், நீல அட்டைக்கொண்ட புத்தகங்கள் சிலவற்றை வைத்திருந்தார். நண்பர்கள் பார்வைக்கு, விற்பனைக்கு வைத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். அவரை இலக்கியக்கூட்டங்களில் பார்த்திருக்கிறேன், நீண்ட முடியை வெட்டியிருந்ததால் பிடிபட சிறிது நேரமாயிற்று. புன்னகைத்தபடி முதல்புத்தகத்தை எடுத்துப்புரட்டினேன். நூல் வடிவமைப்பை பற்றி பெரிதாக கவலைப்படாத புத்தகம்போல இருந்தது. நேர்காணல், கட்டுரைகள் என்று கலவையாக வெவ்வேறு எழுத்துருக்களில் இருந்தது. முதலில் நவீன நாடகங்கள் குறித்த நேர்காணல் பகுதி ஒன்று, மெல்லப்புரட்டினேன் மூன்றாவது பகுதியில் கட்டுரைபோல ஒன்று, அதைப்படிக்க துவங்கியதும் அதிர்ச்சியாக இருந்தது. முழுக்க முழுக்க கசப்பை வெறுப்பை உமிழ்ந்தபடி இருந்த எழுத்துக்கள். முதல் பத்தி முழுக்க மொழிக்காழ்ப்பு, மூத்த எழுத்தாளர் ஒருவரை திட்டியபடி துவங்கியது இரண்டாம் பத்தி, அதுவும் இணையத்தில் புழங்கும் சொற்களை அப்படியே பயன்படுத்தி தீவிர பாவனையில் எழுதப்பட்ட ஒரு போலி. எனக்கு மேற்கொண்டு படிக்க முடியவில்லை. கோபத்தோடு நிமிர்ந்து இது யார் எழுதியது என்றேன், ஆசிரியர் எழுதியது என்றார். யார் ஆசிரியர் என்றேன், தயக்கத்தோடு நான்தான் என்றார். எனக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை, இந்த ஆள் நிகழ்வையையே அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறான் என்று தோன்றியது. புத்தகத்தை வைத்துவிட்டு கட்டுப்படுத்தியபடி இருக்கையில் சென்று அமர்ந்தேன். அந்த அரங்கத்தில் மொத்தமும் நேர்மறை எண்ணங்கள் நிரம்பியிருந்தன, முகங்கள் ஒவ்வொன்றும் திளைத்தபடி மகிழ்ச்சியில் இருந்தன. அங்கு எப்படி இது போல குப்பையை கொண்டு வைக்கிறான் இவன் என்று தோன்றியது, கட்டாயம் யாரிடமும் அனுமதியும் கேட்டிருக்க மாட்டான்.
நிகழ்வு இறுதிக்கட்டத்தை நெருங்கியபடி இருந்தது, இவனைப்போல மூடர்களை என்ன செய்வது. எழுத்து என்பது கூரிய ஆயுதமென்றும் அதைக்கொண்டு யாரையாவது ரத்தம் வழிய வீழ்த்தவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டிருப்பவர்களை நிரந்தரப்போராளி பாவனைகளை என்ன செய்வது. வனையும்போது கோணிய பானையை சுட்டு எடுத்த பிறகு நிமிர்த்த ஒக்குமா. எழுத்து ஒரு ஒளிமிக்க அறிவுத்தேட்டம், அது ஒரு பெரிய பற்றுக்கோடு, அங்கே மேடையில் நிகழ்வதெல்லாம் அதைத்தான் காட்டியதெனக்கு. மாறாக அதை எடுத்து புறம் துடைத்துப்போடும் காகிதமாக ஒருவன் ஆக்கலாமா, சமீபத்தில் எதற்கும் இப்படிக்கோபப்படவில்லை.
நினைப்புகள் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென அவன்மேல் இரக்கம் வந்தது, கண்ணில் நீர்கோர்க்கும் அளவுக்கு. அவனைப்பார்த்திருக்கிறேன் நைந்த உடைகள், கைகளில் தானே தயாரித்து எடுத்தவந்த சுவரொட்டிகள் போல எப்போதும் எதையாவது கைகளில் வைத்திருப்பான். அவன் எதையோ நம்புகிறான், அதற்காக வாழ்க்கையை ஈடாக வைக்கிறான், இப்படி புத்தகங்களை சுமந்தலைகிறான். நிஜமாகவே இரக்கத்திற்கு உரியவன். ஏனெனில் அவனுக்கு அது எப்போதும் கிடைக்கப்போவதில்லை. என் வயதே இருப்பான், அல்லது கொஞ்சம் இளையவன். அவன் ஒருமுறையும் ஒளி ஒன்றை அடையப்போவதில்லை, இது அவனைப்பற்றிச்சுழற்றி எறியப்போகிறது. திசைதப்பியவன், ஒருபோதும் மீட்டு வனையமுடியாதவன், தனது கோணல்களோடு வாழ்வு மொத்தத்தையும் கழிக்கப்போகிறவன். எனது குழந்தை, நாளின் இனிமைகளையெல்லாம் அசைபோட்டபடி உறங்கும் இந்த இரவிலும் சொல்கிறேன் அவன் நிஜமாகவே இரக்கத்திற்குரியவன்.
தாமரைக்கண்ணன்
Comments
Post a Comment