தனி வாழ்வில் இது மாற்றங்கள் நிறைந்த வருடம். மார்ச் மாதம் புதுவையில் நான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து விலகிவிட்டேன். அடுத்து மூன்று மாதங்கள் ஓய்வு. நீண்ட காலம் பணியிலிருந்து விட்டேன் என்று தோன்றியது, கிட்டத்தட்ட 18 தொடர்ச்சியான வருடங்கள். ஆறு நாட்கள் வேலை, வருடத்திற்கு 10 நாட்கள் விடுமுறை என்பது என்போன்ற ஒருவனுக்கு விதிக்கும் தளைகள் ஏராளம். அவற்றினூடாகத்தான் சென்றுகொண்டிருக்கிறேன் எப்போதும். வேலையை விடும்போது வேறு வேலைகள் எதுவும் கையில் இல்லை. மூன்று மாதங்கள் காத்திருந்த பிறகு வேலை கிடைத்தது, ஒரு வருடம் நான் பெங்களூரில் பணிசெய்ய வேண்டும் பிறகு ஓசூருக்கு மாற்றல் என்னும் நிபந்தனையுடன். தற்போது பெங்களூரில் தங்கியுள்ளேன்.
அந்த மூன்று மாதங்களில் பயணம் செய்ய நேரமிருந்தது. சில எழுத்துப்பணிகளை துவங்கினேன். சகோதரர் புதுவை முத்துக்குமரனுடன் விழுப்புரத்தை ஒட்டிய கிராமங்களில் உள்ள அரிய சிலைகளை சென்று பார்த்து வந்தேன். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கோவில்களுக்கு சென்றேன். இந்த வருடத்தில் குன்றக்குடி, திருவக்கரை, திருவலஞ்சுழி, பழையாறை, உறையூர், லால்குடி, திருப்பட்டூர், வடதிருமுல்லை வாயில், புள்ளமங்கை, கருகாவூர், கடம்பூர், திருவாதவூர், சமயபுரம் போஜேஸ்வரர் ஆலயம், தருமபுரி மல்லிகார்ஜுனர் ஆலயங்களுக்கும் , கர்நாடகாவில் பேகூர், போக நந்தீஸ்வரா ஆலயம், பேளூர் ஆலயங்களுக்கும் கேரளாவில் திருவித்துவக்கோடு, இரிஞ்ஞாலக்குடா ஆலயங்களுக்கும் சென்று வந்தேன்.
நிகழ்வுகளெனில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஓசூரில் ஒருங்கு செய்திருந்த கவிதைகள் முகாமில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்தது, முகாமில் தமிழின் சந்தப்பாடல்கள் குறித்து பேசினேன். பெங்களூரில் வரலாற்று ஆர்வம் கொண்ட நண்பர்கள் இணைந்து நடத்தும் இணைய வழி சந்திப்பொன்றில் அட்ட வீரட்டம் குறித்து சிற்பவியல் நோக்கில் உரை ஒன்று நிகழ்த்தினேன். இரண்டிற்குமே நிறைய உழைக்க வேண்டியிருந்தது. வீரட்டம் குறித்து இன்னுமே விரிவாக எழுத வேண்டும். இவ்வாண்டு விஷ்ணுபுரம் விழாக்களான குமரகுருபரன், தூரன், விஷ்ணுபுரம் விருது விழா மூன்றுக்கும் சென்றுவந்தேன். வெள்ளிமலையில் நிகழ்ந்த காவிய முகாமிலும் கலந்து கொண்டேன்.
பாட்டி இறந்து போனாள், அம்மாவின் அம்மா. பேரன்களின் மகன்களை பார்த்து விட்டுத்தான் போனாள். சிறுவயதில் அவள் வீட்டில்தான் வளர்ந்தேன், என்னை அடுப்பங்கரையில் தூக்கி வைத்து மல்கோவா மாம்பழம் என்று செல்லம் கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. சோற்றுக் கவளங்களுக்கூடாக முத்தாரம்மன் கதையும் பாலநாகம்மா கதையும் சொன்னவள். செய்தித்தாளும், பத்திரிக்கைகளும் வாசிப்பாள். அவளிடமிருந்துதான் அம்மாவுக்கு வாசிப்பு வந்திருக்க வேண்டும்.
நண்பர் அழகிய மணவாளனுடன் அம்மனூர் சாச்சு சாக்கியர் நினைவாக நடத்தப்படும் கூடியாட்டம் விழாவிற்கு இரிஞ்ஞாலக்குடா சென்று வந்தேன். இரிஞ்ஞாலக்குடா ஆலயத்தில் மூத்த கலைஞரான குட்டன் சாக்கியார் எங்களுக்கு மூடியிருந்த கூத்தம்பலத்தை திறந்து கொடுத்தார். பாலி வதத்தின் ஒரு பகுதியும், ஊர்வசி புரூவரசின் கதையும் இருநாட்கள் கூடியாட்டத்தில் கண்டோம். அத்துடன் கூடியாட்டம் , குறித்த மது சாக்கியர் மற்றும் மூக்கனாடு தினேஷனின் உரைகளை கேட்டோம். எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தினூடாக மெலட்டூர் பாகவதமேளா குறித்து வாசித்திருந்தோம், நீண்ட நாள் திட்டமாக அப்பயணம் இருந்தது. நண்பர் மெலட்டூர் ராகவ் தங்குவதற்கு உதவிகள் செய்திருந்தார். பாகவத மேளா கலை குறித்து அறிந்துகொள்ள இந்தப்பயணம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. மேளாவுக்கு குருகு இதழ் சார்பில் ஒரு சிறப்பிதழ் கொண்டுவந்தோம்.
தங்கையின் திருமணம் முடிந்தது. சிறு குழந்தையாக கையில் வாங்கிக்கொண்டபோது விளையாட்டு பொம்மை போலவே இருப்பாள், நான் தான் பெயர் வைத்தேன். அந்த சுதந்திரம், உரிமை சிறுவயதிலேயே எனக்கு வீட்டில் இருந்தது. அவளது அம்மா, எனது அம்மாவின் தங்கை சில ஆண்டுகளுக்கு முன் இறக்கையில் தங்கை படிப்பை முடித்திருக்கவில்லை. பெற்றோரின் இழப்பிற்கு பிறகு, நிறைய காத்திருப்புக்குப்பின், வரன் ஊருக்கு அருகிலேயே அமைந்தது. திருமணம் முடிகையில் ஒரு நிறைவு, கூடவே ஒரு சொல்லமுடியாத இழப்பு. என் சிறுமகளுக்கு நல்லன எல்லாம் கிடைக்கட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
எண்ணிய அளவுக்கு எழுதமுடியாது போனது. இருந்தாலும் சில முக்கியமான கட்டுரைகள் 'கவிதைகள்' மற்றும் 'அகழ்' இதழில் வெளிவந்தன. குறி அச்சிதழில் கட்டுரை ஒன்று வந்தது. குருகு இதழில் தொடர்ச்சியாக புத்தக அறிமுகங்கள் எழுதியிருக்கிறேன், அனைத்தும் அபுனைவு களங்களான நாட்டாரியல், கோவில் கட்டிடக்கலை, தொல்லியல், மானுடவியல் ஆய்வு சார்ந்தவை. இந்த வருடமும் ஆய்வாளர்கள், கலைஞர்களை தேடிச்சென்று சந்தித்துக்கொண்டே இருந்தேன். கே சி நாராயணனை அவரது இல்லத்தில் மணவாளனுடன் சென்று பார்த்தோம். ஆய்வாளர்கள் சுப்பாராயலு, கலைக்கோவன், குடவாயில் பாலசுப்ரமணியன், பக்தவத்சல பாரதி இவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர் மலைச்சாமியுடன் வைணவ அறிஞர் ம பெ சீனிவாசனை சந்தித்தேன். ஆய்வாளர் வேதாச்சலத்தை தூரன் விழா சமயத்தில் ஒரு நேர்காணல் செய்தேன். எழுத்தாளர்கள் வசுதேந்திரா, திலீப் குமார் இவர்களோடும் நண்பர்கள் ராஜசேகர், தினேஷ், மனோஜ், தமிழ் குமரன், விக்னேஸ்வரன் ஆகியோரோடும் அறிமுகம் கிடைத்தது. சமயங்களில் சேர்ந்து பயணிக்கவும் விவாதிக்கவுமாக இருக்கிறோம்.
டிசம்பரில் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் எனது நண்பர்கள் அரிசங்கர், மணவாளன் ஆகியோருக்கு அமர்வுகள் இருந்தன. மணவாளன் இளம் எழுத்தாளர் விருது பெற்றிருந்தார், எனக்கு அது இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்வாண்டு விழா ஒரு வித்தியாசமான நிகழ்வாக ஆனது. அரங்கில் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் நினைவுகளாக அனைவரிடமும் இருந்து வெளிவந்துகொண்டிருந்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் உரை அவ்வாறாகத்தான் இருந்தது, அவரது சிறந்த பேச்சுக்களில் ஒன்று. அகரனின் ஆவணப்படம் குறித்து தனியே எழுத வேண்டும். ரமேஷ் நோய்வாய்ப்பட்ட பின்னர் எழுதுவதற்காக மட்டும் வாழ்ந்தது எழுதவரும் யாருக்கும் ஒரு செய்தி தான்.
வருட இறுதியில் ஓசூரில் நடந்த இளையராஜா இசை நிகழ்வுக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். இதுவரை அவரது நேரடி நிகழ்வில் கலந்துகொண்டதில்லை. தொலைவிலிருந்தேனும் அவரை பார்த்தது நிறைவளித்தது. அந்த பரந்த வெளிக்குளிரும் இசையும் ராஜாவின் இருப்பும் ஆன்மீகமான ஓர் அனுபவமாக இருந்தது. அடுத்த வருடம் அவரை பார்க்க நேர்ந்தால் அதற்கு முன்னர் பொருட்படுத்தும்படி ஏதேனும் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.இந்த இரு நிகழ்வுகளிலும் இருந்தும் அடுத்தவருடத்திற்கு தேவையான மனநிலையை அருளப்பாடு போல பெற்றுக்கொண்டேன். இனி இது போல வருட நிகழ்வுகளை தொகுக்கப்போவதில்லை. வேறொரு களம், தனியே ஒரு தளத்தில் எனது எழுத்துக்கள் தொடரும்.
பெரும் சுழல் ஒன்று - இது எப்போதும் இருந்து கொண்டுள்ளது, இதில் மாட்டிக்கொண்ட துகளாய் ஒவ்வொரு கணமும் உணர்கிறோம். உச்சத்திற்கும் ஆடியாழத்திற்குமான அலைக்கழிப்பு. மாறாக அந்த சூழலின் ஒரு பகுதியாக என்னை பொருத்திக்கொள்ள முயல்கிறேன். இப்போது நானும் அந்த பெரும் விசையும் வேறுவேறல்ல, இனி இங்கு எத்துயரும் என் விசைக்கு முன் ஒரு பொருட்டல்ல.
தாமரைக்கண்ணன்
01.01.2026



Comments
Post a Comment